Stories

கம்பி வழிப் பயணம் WALKING TO SCHOOL

By  | 

சீனாவின் யுனான் என்ற பகுதியில் இருக்கும் இயற்கையெழில் கொஞ்சும் மலைக்கிராமம் அது. லிசு சிறுபான்மையினரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் வாவா. துறுதுறுவென வலம் வருகிறான்.

அவனது பத்து வயது சகோதரி நஷியாங். பாசத்துடன் தன் தம்பியை அரவணைக்கிறாள். இவர்களின் அப்பா குடும்பத்தைவிட்டு நகரத்தில் தங்கி வேலை செய்கிறார். விவசாய வேலை செய்யும் அம்மா, பேசவும் நடக்கவும் முடியாத பாட்டி என்று சிறிய குடும்பம் இவர்களுடையது.

இந்த மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பள்ளி, கடைகள், மருத்துவமனை என எல்லாத் தேவைகளுக்குமாய் எதிர்ப்புறமுள்ள ஊருக்குச் செல்ல பள்ளத்தாக்கில் வேகமெடுத்து ஓடும் ஆபத்தான ஆற்றைக் கடக்கவேண்டும்.

பாதை வழியாக செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதால், இரு மலை முகடுகளையும் இணைத்து ஆற்றின் குறுக்கே இரும்புக் கம்பி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு சிறிதாக ராட்டினம் போன்ற சக்கரமுள்ள கொக்கியைக் கம்பியில் மாட்டி சறுக்கிக்கொண்டே அவர்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆற்றைக் கடக்க வேண்டும்.

வாவாவின் சகோதரி நஷியாங்கும் அவளது நண்பர்களும் ஆற்றின் குறுக்கே கம்பியின் வழியாகவே பயணித்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். சுட்டிப் பையன் வாவாவும் அக்காவுடன் அதே முறையில் பயணித்து பள்ளி சென்று படிக்க ஆசைப்படுகிறான். ஆற்றைக் கடக்கும்போது தனக்கு நேர்ந்த விபத்தின் காரணமாக சிறுவனை பள்ளிக்கு அனுப்ப அவன் அம்மா மறுக்கிறார்.

தன் அம்மா வேலைக்குச் சென்றதும், அவருக்குத் தெரியாமலே ரகசியமாக கம்பி வழியாக அக்கரைக்குச் சென்று வகுப்பறை ஜன்னல் வழியே பள்ளியில் பாடம் நடப்பதை கவனிக்கிறான் சிறுவன். இந்நிலையில், நகரத்தைச் சேர்ந்த ஒரு புதிய இளம் ஆசிரியர் பள்ளியில் பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி ஆசிரியராக வருகிறார்.

மறைந்து நின்று வகுப்பை வேடிக்கை பார்க்கும் சிறுவன் வாவாவை அவர் கவனிக்கிறார். ஒருநாள் சிறுமி நஷியாங் உடன் கம்பியின் வழியே பயணித்து அவர்கள் வீட்டுக்கு வரும் இளம் ஆசிரியை அங்கு அதே சிறுவனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவர் மூலம் தகவல் அறியும் வாவாவின் அம்மா, கம்பி வழியாக ஆற்றைக் கடந்ததற்காக வாவாவை அடிக்க முயல்கிறார். அடி விழாமல் சிறுவனை ஆசிரியரும், சகோதரி நஷியாங்கும் தடுக்கிறார்கள்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுமி, கம்பியிலிருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்து விடுகிறாள். மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் வாவாவின் அம்மா கதறி அழுகிறார். சிறுமியின் இழப்புக்குப் பிறகு வாவாவின் அப்பா நகரத்தில் இருந்து திரும்பி வீட்டிலேயே தங்கி விடுகிறார். அக்காவின் பிரிவைத் தாங்க முடியாத சிறுவன் வாவா பேச்சில்லாமல் அமைதியாகி விடுகிறான். அக்காவின் நினைவுகள் அவனை வாட்டுகிறது.

பள்ளிக்கு வந்து அவன் வயதுக் குழந்தைகளுடன் பழகினால் சரியாகிவிடுவான் என்று இளம் ஆசிரியர் கூறினாலும் ஆற்றைக் கடக்கும் பயத்தால் அவனது அம்மா பள்ளிக்கு அனுப்ப  மறுக்கிறார். வார இறுதிகளில் சிறுவனின் வீட்டுக்கே வந்து பாடங்களைச் சொல்லித் தருகிறார் பயிற்சி ஆசிரியை.

ஆனாலும் வாவா பேச மறுக்கிறான். ஆபத்தான முறையில் ஆற்றின் குறுக்கே பயணித்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்கவும், பாதுகாப்பான முறையில் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இளம் ஆசிரியர் இந்தப் பிரச்சினைக்காக போராட முடிவு செய்கிறார். பல மாத இடைவெளிக்குப் பிறகு அரசால் ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் கட்டப்படுகிறது. வாவா அதன் வழியே நடந்து பள்ளிக்குச் செல்வதாக படம் நிறைவடைகிறது.

அக்கா, தம்பிக்கிடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் கவிதை. பொடிசுகள் இருவரும் நடிப்பால் நம்மை கண்கலங்க வைத்துவிடுகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமம் மனதை இதயமாய் வருடிச் செல்கிறது.

மலை முகட்டை ஒட்டி ஆற்றின் ஒரு புறம் அமைந்துள்ள சிறுவனின் அழகான அந்தக் குடில் வீடு ரசனை. இயற்கையையும் குழந்தைகளையும் கல்வியை நேசிக்கும் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.கூடவே கொரோனா பெருந்தொற்றால் பள்ளி வாழ்க்கையை இழந்து அடைபட்டுக் கிடக்கும் நமது குழந்தைகளின் நினைவும் வரும்.

You must be logged in to post a comment Login