Articles

கல்விச்சூழலில் பெண்கள்

By  | 

சிவநாதன் தர்ஷினி,

(எழுத்தாளர், மலையக நாட்டார் பாடலாசிரியர்)

பதுளை.

 

பழம்பெண்மையானது

இன்றைக்கு நாளும்

புதுப்புது விந்தைகளை

நிகழ்த்தும் செயற்பாடுகளில்

உள்வாங்கப்பட்டுவிட்டது

உலக வாழ்க்கை ஓர் எல்லைக்குள் உட்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மானிடனும் அதன் கட்டுப்பாட்டுக்குள்ளே தன் பயணத்தை செலுத்திவருகின்றான். கற்காலந்தொடங்கி இன்றைய கணினிக்காலம் வரையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உலகம் எழிலுற கல்வியே பெரும்பங்காற்றி வருகின்றது. வேடனாய் வாழ்ந்தவனை உலகம் வியக்கும் நற்சான்றோனாக மாற்றிய பெருமை ‘கல்வி’ எனும் அருஞ்சாதனத்துக்கே உரியதாகும்.

ஆண்கள் மட்டுமே ஆற்றிய பணிகளை பெண்களும் துலங்கச்செய்த பேராற்றலுக்கு வழி சமைத்ததெல்லாம் கல்வி என்னும் அருங்கொடையே எனலாம்.

சமையலுக்கும் சாஸ்திர கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு பெண்கள் வளர்க்கப்பட்ட நிலையில், தாய்மையைத் தாண்டி பூமி தூய்மையுறவும் பெண்கல்வி அவசியம் என உணர வைத்தது, கல்வியின் உன்னத பணியில் ஒன்றாகும்.

பாரதி தொடங்கி இன்றைய பராக் ஒபாமா வரையில், பெண்களைப் பற்றிய எண்ணங்கள் ஆளுக்காள் வேறுபடத் தான் செய்கின்றன. ஏனெனில், பெண்ணுரிமை பற்றி பேசிய பாரதி கூட தன் மனைவியை நடத்திய விதமும், அமெரிக்க ஜனாதிபதி அவர் மனையாளை மதிக்கும் விதமும், பெண்கள் பற்றிய ஆண்களின் நினைப்புகளை நிலைமாற்றியுள்ளது என உணர முடிகின்றது.

இத்தனை மாற்றங்களுக்கும் காரணமான பேராயுதம் கல்வியே என்றால் அது மிகையாகாது.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற்குணங்களோடு நின்ற பழம்பெண்மையானது, இன்றைய சூழ்நிலையில் நாளும் புதுப்புது விந்தைகளை நிகழ்த்தும் செயற்பாடுகளில் உள்வாங்கப்பட்டதற்கு காரணமே பல கல்வி நிலையங்கள்தான்.

ஆரம்ப கல்வி நிலையங்கள், பாடசாலை, கல்லூரி பல்கலைக்கழகம் என தொட­ரும் கல்வித்தேவையை பூர்த்தி செய்த இந்நிலையங்களே இன்று பெண்களுக்கு பாதுகாப்பற்று காணப்­படுகின்றன. காரணம், அதற்குள் தெரிந்தும் தெரியாம­லும் இருக்கும் பலரின் இடர்ப்பாடான செயற்­பாடுகளே.

ஒரு குழந்தை பிறந்தது முதல் பாலர் வகுப்புக்கு செல்லும் வரை பெற்றோர் அரவணைப்பில் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியில் ஏற்படும் புதிய அறிமுகங்களும் சகவயதினர் பழக்கங்களும் எதிர்ப்பாலினர் நட்பும் புதிய உலகுக்கு அப்பிள்ளையினை அறிமுகம் செய்கிறது.

பொதுவாக பெண்பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் பாலியல் வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் என பல இன்னல்களை சிறு வயதிலிருந்தே சந்திக்க நேரிடுகிறது.

திரைப்பட மோகங்களால் சிறு வயது காதல்கள், வயது வரம்பற்ற வசனங்கள், நடத்தைகள் முதலியன சிறுவர்களை பாழாக்குகிற நிலையில் அதன் விளைவினை பெரும்பாலும் பெண் பிள்ளைகளே அனுபவிக்கின்றனர்.

ஆசான்களின் பிழையான நடத்தைகள், வீட்டில் உள்ள ஆண்களின் தொந்தரவுகள், பள்ளி செல்லும் வழியில் வாலிபர்களின் பகிடிகள் என ஆண்களினால் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, கட்டிளமைப் பருவ உடல், உள மாற்றங்களின் இன்னல்கள், கூச்சப்பாடுகளுடன் கலந்த எதிர்மறை  எண்ணங்கள் என தனக்குத் தானே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை­கள் மற்றும்  தனக்குத்தானே பெண்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சினைகளும் இன்று அதிகமாகி விட்டன.

நவநாகரிக மோகத்தில் விளம்பரங்களுக்கு அடிமையாகி, கலாசார சீர்கேடுகள் இடம்பெறும் அடிப்படை இடமாக பாடசாலைகளும் தனியார் வகுப்புகளும் உருவாகியுள்ளன.

படிப்பை தேவையாக கருதிய காலம் மறைந்துவிட்டது. உடுத்தல், புதிய நடத்தைகள் மூலம் மற்றவர்களைக் கவரும் உத்திகளை கையாள தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளல், பாதுகாப்புக்கு தந்த தொலைப்பேசியை அதிகமாக பயன்படுத்தி துணை தேடுதல் என பெண்கள் தங்களது அறிவற்ற செயற்பாடுகளால் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில், தங்கள் கல்விப்பாதையை முற்றிலும் மாற்ற, அதன் போக்கு வாழ்க்கையினையே மாற்றி அமைத்துவிடுகிறது.

ஆரம்பத்திலேயே பகிடிவதை என இருபாலாரும் தருகின்ற தொந்தரவுகளால் உடல், உள ரீதியாக பாதிப்புற்று, தனிமையில் உலகுக்கு முகங்கொடுக்கவும், சவால்களை சமாளிக்கவும் கற்க­வேண்டிய நிலையினை கல்லூரிக் கல்வி போதித்து­விடுகிறது.

போக்குவரத்து பயணங்களில் ஆடவர்களின் இன்னல்கள், இரவுப் பயணங்கள், வீட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்ற செலவுகள், சமவயதினருடன் தனிமை பயணங்கள், உணவு மற்றும் உடைகளின் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் என அனைத்திலும் தன்னைத்தானே சரியாக வழிநடத்தவேண்டிய நிலையில் பல பெண்கள் தள்ளப்படுகின்றனர்.

அக்கல்விச் சமூகத்தில் இணையாத சந்தர்ப்பத்தில் சமூகமயமற்ற மாணவியாக ஒதுக்கப்படும் நிலையும் காணப்படத்தான் செய்கிறது. இவ்வாறு கல்விச்சூழல் பல பெண்களுக்கு பல பிரச்சினைகளைத் தந்த வண்ணமே உள்ளது.

நாளோட்டத்தின் மாற்றத்தில் கல்வி அத்தியாவசியமானதாக இருக்கும்.

பலரின் வாழ்க்கையில் இன்னோரன்ன துன்பங்களுக்கு விடை காணும் பெண்களும், சவால்க­ளுக்கு முகங்கொடுக்கும் புதுமைப் பெண்களும் எம்மவர் மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள்.

பெண்களுக்குத் துணையாக என்றும், எந்நிலையிலும் நல்ல ஆடவர்கள் நடந்து கொள்கையில், பல பெண்கள் இன்னும் பொலிவுடன் மிளிரமுடியும்.

மேலும், கல்விச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறைகையில் கற்ற பெண்கள் முன்னோக்கிச் செல்லமுடியும் என்பதோடு சாதனை வரம்புகளை தகர்த்து, புது சாதனை எட்டமுடியும் என்பது திண்ணம்.

-ப. கணகேஸ்வரன் (கேஜி)

 

You must be logged in to post a comment Login