Interview

கவிதையும் கானமும் எனது சொத்து – கவிஞர் பசுவூர்க்கோபி

By  | 

ழத்தின் இலக்கியப்பரப்பில் மாத்திரமல்ல, பூகோள நிலப்பரப்பெங்கனும் இன்று பரந்து வாழும் இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் நெடுந்தீவு பெற்றெடுத்த புதல்வனாய் ஐயாக்குட்டி கோவிந்தநாதனைப் பார்க்கலாம். பசுவூர்க்கோபி என்ற புனைபெயரில் அழகிய ஆழமான கருத்துகள் செறிந்த கவிதைகளை எழுதி, அவை ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவரின் முதலாவது கவிதை ஈழநாடு பத்திரிகையிலும், தொடர்ந்து உதயன், சஞ்சீவி போன்றவற்றிலும் வெளிவந்தன. இவரின் புலம்பெயர்வுக்குப் பின் 2013இலிருந்து இவரின் கவிதைகள் ஐரோப்பிய மண்ணில் வெளிவரும் கவிதை தொகுப்புகளிலும் இணையதளங்களிலும் வெளிவந்த வண்ணமுள்ளன.
இத்துடன் ஒலி, ஒளி வடிவமான கவிதைகள் ஜி டிவி மற்றும் ரி டிவி ஆகிய ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் தளத்திலும், தமிழ் புரட்சி வானொலியிலும் வெளியாகியுள்ளன. தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவரை மித்திரன் வாரமலரின் சந்திப்பு பகுதிக்காக நேர்கண்டபோது…

கே: முதலில் உங்களை பற்றி…
ப: எனது பிறப்பிடம் நெடுந்தீவு. எனது தந்தையார் அமரர் கந்தையா ஐயாக்குட்டி. இவர் சமூக சேவையாளர். கிராமசபை உறுப்பினராகவும் கிராம முன்னேற்ற சங்க தலைவராகவும் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளராகவும் இருந்தவர்.
எனது ஆரம்ப கல்வியை நெடுந்தீவு மேற்கு மங்கையர்க்கரசி வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் உயர்நிலை கல்வியை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றேன். தொடர்ந்து கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினேன். புலம்பெயர்ந்து தற்போது குடும்பத்தவர்களுடன் நெடுந்தீவுக்கு டெல்ஃப் (Delft) எனும் பெயர் சூட்டப்பட்ட ஒல்லாந்து நாட்டில் (நெதர்லாந்து) குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.


கே: கவிதைத்துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?
ப: இந்த ஆற்றல் எனக்கு இயற்கையாக அமைந்திருந்தது. பாடசாலை காலங்களில் இத்துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டி வந்தேன். அதுவே என்னை பத்திரிகைகளில் எழுதத் தூண்டியது. இதற்கு முதலில் களம் தந்தது, யாழிலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை. தொடர்ந்து குடா நாட்டிலிருந்து வெளிவந்த உதயன், சஞ்சீவி போன்ற பத்திரிகைகளிலும் எனது கவிதைகள் வெளிவந்தன. இவற்றின் தொடர் வெளிப்பாடுகளே, புலம்பெயர்ந்த பின்னும் என்னை இத்துறையில் ஈடுபட வைத்தன.

கே: நல்லது… இத்துறையில் தொடர்ந்து பயணிக்க நீங்கள் வேறு எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்..?
ப: ஐரோப்பிய மண்ணில் வெளிவரும் ‘ஆதியுலகம்’ காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிகின்றேன். மேலும், பாடல்களை நானே யாத்து அவற்றை எனது குரலில் பாடியும் வருகின்றேன். அந்த வகையில் கனடாவில் 27.07.2019 அன்று எனது கவிவரிகளில் வெளியான ‘நெடுந்தீவு அழகான தீவல்லவோ’ பாடல் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது. தொடர்ந்து ‘எழு எல்லாம் இயலும்’ என்ற பாடல் அடங்கிய இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றேன். ஆக, கவிதையும் கானமும் எனது சொத்து.

கே: இத்துறை சார்பில் தாங்கள் பெற்றுக்கொண்ட கௌரவங்கள், விருதுகள் பற்றி..?
ப: தமிழ்நாட்டில் 2019 –2020க்கான கவிஞர் வாலி விருதை பெற்றேன். இந்த விருது 25.12.2020 அன்று கவிஞர் வாலி கலை இலக்கிய அறக்கட்டளையினால் நடத்தப்பட்ட சிறந்த கவிதைக்கான போட்டியில் வழங்கப்பட்டது.

கே: அதன் பிறகு தாங்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லையா..?
ப: கலந்துகொண்டுள்ளேன். இலங்கையில் புதிய அலை கலை வட்டம் அமைப்பு இவ்வாண்டு ஜனவரி மாதம் சர்வதேச ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றிருந்தேன்.

கே: உங்கள் கவிதைகள் அடங்கிய நூலாக்க முயற்சிகள் பற்றி…?
ப: எனது ‘வெண்பனித்தூறல்’ எனும் கவிதை தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இதற்கான வெளியீட்டு நிகழ்வொன்றை இலங்கையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

கே: உங்கள் முயற்சி சிறக்க எமது பாராட்டுகள்! நெதர்லாந்தில் தமிழ் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் எம்மவர்களது ஆர்வம் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது?
ப: ஆர்வம் மிக்க பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர். எனினும், இளையவர்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அருகி வருகின்றமையையும் பார்க்க முடிகின்றது. இதனை மாற்றியமைக்க உலகளாவிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கே: நீங்கள் எமது வாசகர்களுக்கு கூற விரும்புவது…
ப: இலங்கை மண்ணில் உலகத் தரம் வாய்ந்த பல்வேறு படைப்பாளிகள் உருவாகி நமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கின்றார்கள். அவர்களை வளர்த்துவிட்ட பெருமை இலங்கைவாழ் ரசிகர்களை (வாசகர்களையே) சேரும். நமது படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களது வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டியது, உங்கள் கடமை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

– ஷண்மு

You must be logged in to post a comment Login