Love

காதலர் தினப் பரிசு!

By  | 

பௌர்ணமி நிலவும் காதலரை வாழ்த்திய திருப்தியில் குளிரில் நடுங்கி முகிலினுள் மறையும் நள்ளிரவு நேரம்.

ஓலைக்குடிசையின் திண்ணையில் விமலுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.

காலையில் காதலர் தினத்தில் கண்டு மனதோரம் காதலியாய் நினைந்துருக வைக்குமளவு விமலின் மனதை கவர்ந்த கண்மணியின் ஒவ்வோர் அசைவும் அவன் கண்களில் நினைவாக மலர, அதனைக் கவியாக்க எழுத்தாளனான விமல் யோசித்துக்கொண்டிருந்தான்.

இமைகளை மூடி, அருகிலுள்ள சிப்பி விளக்கின் ஒளியைப் போல கண்மணியை சந்தித்த நினைவுகள் தாலாட்ட, தன் எழுதுகோலால் அரும்பு மீசையை வருடியபடியே கண்மணியின் ஞாபகத்தில் சிறகின்றிப் பறந்தான்.

நகரின் பிரதான வீதியில் வாகனங்கள் கடக்க, எழுத்தாளன் விமல் காதலர் தின விசேட பத்திரிகைகளில் தன் ஆக்கங்களும் அலங்கரித்துள்ளனவா எனும் ஆவலில் பத்திரிகைகளை புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு மோட்டார் பைக் மின்னல் வேகத்தில் பறந்து சாலையோரம் சென்றுகொண்டிருந்த சிறுவனை முட்டித் தள்ளிவிட்டு, மனிதாபிமானமின்றி பைக்கில் வந்தவன் வந்த வேகத்தை விட மின்னலென சென்று மறைந்தான்.

தரையில் விழுந்த சிறுவனின் தலையில் பலத்த காயத்தால் இரத்தம் குபீரென பாய்ந்துகொண்டிருந்தது.

ஓடிச் சென்று சிறுவனை அணைத்துத் தூக்கிய விமல், தன் கைக்குட்டையால் காயத்தை மெல்ல கட்டினான்.

தனது சைக்கிளில் சிறுவனை கொண்டுபோக முடியாது எனக் கருதியவன், கடந்துபோகிற வாகனங்களில் ஒன்றையேனும் உதவிக்கு நிறுத்த முயன்றான்.

பலனேதுமில்லை. வாகனகாரர்கள் சட்டத்துக்கு பயந்து மனிதாபிமானத்தை மறந்தவர்களாய் சென்றனர். உதவி செய்ய ஒருத்தர் இல்லாது, வேடிக்கை பார்க்க மட்டும் ஒரு கூட்டம் சுற்றி நின்று கதை பேசியது.

விமல் மக்களின் மனநிலையை எண்ணி வெட்கித் தலை குனிந்தான்.

அப்போது கூட்டத்தை அமைதியாக்கியபடியே ‘கொஞ்சம் வழி விடுங்க… ஸ்கூட்டியில பையன ஏத்துங்க” என சங்கீத மெல்லிசையாக எல்லோரையும் விலக்கியபடி ஒரு குரல் விமலின் மனதில் சந்தோஷத்தை வரவழைத்தது. ஆவலுடன் திரும்பிப் பார்க்க, அழகென்னும் தேவதை அன்புக்கரம் நீட்டினாள்.

திகைத்து விழிகள் லயித்து நின்ற விமலிடம், “என்ன சேர் பாக்குறீங்க… ஹொஸ்பிட்டல் கொண்டு போகணும். ப்ளட் போய்க்கொண்டிருக்கு…! பைக்ல ஏத்துங்க” என கூந்தலை வருடியவளாய் செல்வதற்கு ஆயத்தமாக ஸ்கூட்டியை கொண்டு வந்து நிறுத்தினாள்.

சிறுவனை தோளில் சுமந்தபடி ஸ்கூட்டியில் ஏறினான். சுயநலமாய் பார்த்துக்கொண்டிருந்த மானிடரில் பொதுநலம் கொண்டு தன் மனதை மயக்கிய மங்கையின் பெயரை அறியும் ஆவலோடு தோன்றிய தயக்கத்தால் உள்ளத்தில் வந்த பேச்சு உதட்டோரம் மறைந்தது.

வைத்தியசாலை வந்ததும் ஆண்கள் நோயாளர் விடுதியில் அவசரமாய் கொண்டு போய் சேர்த்தான். அங்கு சிறுவனை பரிசோதித்த வைத்தியரின் “பையன் உயிருக்கு ஆபத்தில்லை” எனும் நம்பிக்கையான பதிலைக் கேட்டு மகிழ்ந்தவனாய், சிறுவனுக்கு உணவு வாங்குவதற்காக பத்திரிகை வாங்க வைத்திருந்த ஐம்பது ரூபாயை கடைக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமானவனின் மனம் உறுத்தியது.

“ச்…சீ….சீ நான் நன்றி கெட்ட ஜீவன். எனக்கு உதவிய அந்த பெண்ணுக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே. வீதியில் வேடிக்கை பார்த்த  மனிதரை விட நான் கேவலமானவன்” என கவலைப்பட்டவனாய் அருகிலிருந்த சிற்றுண்டிச்சாலைக்கு செல்ல தயாரானவன் ஒரு கணம் அதிர்ந்தான்.

“சேர், இந்தக் கூடையில் ஸ்வீட்ஸ், பழம் எல்லாம் இருக்கு. பையனுக்கு குடுங்க…” என பழக்கூடையை விமல் முன்னே நீட்டினாள். எவ்வளவு பெரிய எழுத்தாளன் என்றாலும் மனம் விரும்பும் மங்கையின் முன்னே பேச வார்த்தைகள் வராதவனாய், அவள் கண்களின் அசைவினை பார்த்து சிலையாய் நின்றான்.

“மிஸ்டர்… என்ன ஆச்சு? ஒண்ணும் பேசமாட்டீங்களா? வெரி சொரி. நான் முதல்ல என்னை அறிமுகம் செய்துகொள்றேன். என் பெயர் கண்மணி. நான் ஒரு பிரைவேட் கம்பனியில் வேலை செய்றேன். இன்னைக்கு மோர்னிங் வெர்க் போகும்போதுதான் உங்க நல்ல மனச பார்த்தேன்… பையன் ஹெல்தியா இருக்கானா” என மூச்சு விடாமல் பேசி முடித்து, இமைகளை பல தடவைகள் அசைத்து, மெல்லிய புன்னகையுடன் விமலின் விழிகளைப் பார்த்த வண்ணம் கூறினாள்.

“பையன் நல்லா இருக்கான். பயப்பட வேண்டாம்… உள்ள வாங்க” என பழக்கூடையை கையில் வாங்கியவாறு ஆண்கள் நோயாளர் விடுதிக்கு கண்மணியை அழைத்துச் சென்றான்.

அங்கே சிறுவன் அழுதுகொண்டிருந்தான். மெதுவாக ஓடிச் சென்றவள், சிறுவனின் நெற்றியை வருடியவளாய் “குட் போய். அழாதப்பா. உங்க வீடு எங்க இருக்குன்னு காட்டினா, அங்கிளும் அன்ரியும் உன்ன உங்க வீட்ல ட்ராப் பண்ணுவம். அன்ரியைப் பார்த்து சிரிங்க” என கன்னக்குழிகள் விழ சிரித்த கண்மணியின் அழகிய முகத்தை கண்ட சிறுவன் அகம் குளிர சிரித்தான்.

அவளின் அன்பான அரவணைப்பைக் கண்டு கண்கள் கலங்கிய விமலன், இளமையில் தன்னை விட்டு உயிர்பிரிந்த தாய், தந்தையின் அரவணைப்பை கண்மணியின் அன்பில் கண்டு மகிழ்ந்து, தன் வாழ்வுக்கு ஏற்ற காதல் காவியத்தின் நாயகியாய் தேர்ந்தெடுத்தான்.

“என்ன சேர் போகலாமா? இங்க நின்னா எனக்கும் மெடிசன் வாங்கும் நிலை வந்திடும்போல இருக்கு” என சிறுவனை அணைத்தவள் ஸ்கூட்டியில் ஏற்றி தானும் உட்கார்ந்தாள். விமல் மெல்லிய புன்னகையுடன் தானும் உட்கார்ந்தான். ஸ்கூட்டி பிரதான வீதியின் பக்கம் நகர்ந்தது. தென்றலில் மெல்ல கலைந்த கண்மணியின் கூந்தல் விமலின் முகத்தில் படர்ந்து ஸ்பரிசமானது.

“நீங்க ரொம்ப சைலன்ட் போல. உங்களப் பற்றி சொல்லல. நாந்தான் ரொம்ப பேசுறேன்” என மெதுவாக புன்னகைத்தபடி கலைந்த கூந்தலை முன்னே சரிசெய்தாள்.

“இல்ல கண்மணி. என் பெயர் விமல். நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகைகளுக்கு கவிதை, சிறுகதை எழுதுறதுன்னு என் வாழ்க்கைப் பயணம் தொடருது”

ஸ்கூட்டியின் வேகத்தைக் குறைத்த கண்மணி ஆச்சரியம் கலந்த குரலில் “நீங்களா பத்திரிகைகளில் ஆட்டிகல் எழுதுற விமல்! உங்க கவிதைகளை கல்லூரிக் காலத்திலிருந்து இன்று வரை தவறாமல் படிப்பேன். சொல்லப்போனா நான் உங்கள் தீவிர ரசிகை. உங்க நல்ல மனச இந்த சின்ன பையனுக்கு உதவி பண்ணும்போதே தெரிந்துகொண்டேன்” என கூறிய கண்மணியின் பேச்சை இடைமறித்த சிறுவன் வீதியைக் காட்டி, “அன்ரி, அங்க என் டாடி, மம்மி நிக்கிறாங்க… தேங்ஸ் அங்கிள்” என விமலைக் கட்டியணைத்து முத்தமிட்ட சிறுவன் “டாடி மம்மி..” என அழைத்தவாறே புன்னகையுடன் தாய், தந்தையை அணைத்து நின்றான்.

ஆச்சரியத்துடன் கண்கள் கலங்கிய நிலையிலிருந்த இளம் தம்பதி சிறுவனை கட்டியணைத்து முத்தமிட்டனர்.

“உங்கள பத்தி விபத்து நடந்த இடத்துல எல்லாரும் சொன்னாங்க… நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா எங்க குழந்தை…?” என கணவனின் கையைப் பற்றியவளாய் அந்த இளம் தாய் அழுதாள்.

திருமண பந்தத்தில் இணைந்து பல வருடங்கள் ஆகியும் காதலிக்கும் கணவன் மனைவியைப் பார்த்து சந்தோஷப்பட்ட விமல், கண்மணியை பார்த்து புன்னகைத்தவாறே “நீங்க உங்க மனைவியை எப்படி காதலிக்கிறீங்களோ அதுபோல உங்க குழந்தையையும் பத்திரமாய் பாத்துக்கோங்க. ஏன்னா இப்ப நாட்டில விபத்துக்கள் அதிகமாய் நடக்குது… இந்தக் காதலர் தினத்தில் எனது பரிசாக உங்க இருவருக்கும் குழந்தையை ஆபத்திலிருந்து மீட்டு தருகிறோம். மகிழ்ச்சியான உங்க திருமண வாழ்வில் காதல் தொடர கடவுளை பிரார்த்திக்கிறேன்…” என இருவருக்கும் நன்றி கூறியவன், தன் காதலை கண்மணிக்கு சொல்ல மனமில்லாமல் அவளை நோக்கி “நன்றி கண்மணி, உங்க மனசு எல்லாருக்கும் இருந்தால் எங்கள் தமிழ்ப் பண்பாடு தரம் குறையாது” எனக் கூறி, அவளை பிரிய மனமில்லாமல், காதலர் தினப் பரிசாக காலந்தோறும் கண்மணியின் நினைவுகளைத் தாங்கிக்கொள்பவனாக தன் கிராமத்தை நோக்கி சைக்கிளை மிதித்தான்.

சொல்ல முடியாத காதலை மனதுக்குள் விதைத்து கண்களில் திரண்டு வந்த கண்ணீரை கண்களுக்குள் அடக்கியவளாய் விமலின் எழுத்துப்பயணத்துக்கு தொடர்ந்தும் ரசிகையாகிட விரும்பியவள், விமல் எழுதிய கவிதைகளை நேசித்து, அவள் காதல் காவியங்களை அவன் சுவாசங்களாய் வாசிக்க ஸ்கூட்டியை நூலகத்துக்கு திருப்பினாள்.

காதலர் தினத்தில் கண்மணியை சந்தித்த காதல் அனுபவங்களை காவியமாக்க விமல், காகிதத்தில் காதல் கவி வரிகளை தூதாக்க, கண்மணியின் ஞாபகத்தில் கற்பனைச் சாரலுக்குள் காதல் காவியங்களை தேட எழுதுகோலை முத்தமிட்டான்.

-வன்னியூர் எஸ்.ஆர்.ராம்கி

You must be logged in to post a comment Login