Love

காதல் காதல் காதல் காதல் போயின்…

By  | 

இரு மனங்கள் சங்கமிப்பதற்கு பெயர்தான் காதல். காதல் உணர்வுகள் மிகவும் அழகானவை. புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு படிக்கட்டுகளில் தொங்குகிற காதல்… ‘அவனுக்குப் பிடிக்கும்’ என சிவப்பு சுடிதார் அணிகின்ற, ‘அவளுக்குப் பிடிக்கும்’ என பச்சை சட்டை போடுகிற காதல்… கொட்டுகிற மழையில் குடை பிடிக்காது, நனைந்து செல்கிற காதல்… இரவு 12 மணிக்கு ஹோஸ்டல் மதில் பாய்ந்து சர்ப்ரைஸ் பேர்த்டே விஷ் சொல்லுகிற காதல்…

கையில் கல்குலேட்டரை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை திட்டம் போடுகிற காதல்… வேலைக்கு ஆள் எடுப்பது போல அளந்து, யோசித்து, கன்டிஷன் எல்லாம் போடும் காதல்…

‘அரசாங்க வேலை, வீட்டுத் தொந்தரவுகள் இல்லை, எல்லாம் ஓகே’ என்று முடிவெடுக்கிற காதல் என வாழ்க்கையை ரசிக்க பண்டைய காவியங்களில் தொடங்கி இன்றைய சினிமா வரைக்கும் எங்கும் காதல்….! காதல்…! காதல்….!

இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் ஓர் அழகான கதையிருக்கும். அந்த அழகான கதைக்குப் பின்னால் ஓர்  அன்பான காதல் இருக்கும்.

காதல் தினமும் நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். தூங்கவிடாது, ஒழுங்காக எந்த வேலையும் செய்யவிடாது, சோகம் கொடுக்கும், அழ வைக்கும், சிரிக்க வைக்கும், அது கோழையை வீரனாக்கும், வீராதி வீரனை சாதுவாக்கும், ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும்… காதலினால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம்.

எனினும், காதல் அற்புதமானது. அது சிலருக்குத்தான் வாய்க்கிறது. அதிலும், சிலர்தான் முழு வெற்றி அடைகின்றனர்.

பெரும்பாலானோரின் காதல் வந்த வேகத்திலே கரைந்து போகின்றது. அதற்கு அவர்களிடம் சரியான புரிதல்கள் இல்லை. நாளடைவில் சந்தேகம் ஆட்கொள்கிறது. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், கோபம், சண்டை, சச்சரவு போன்ற பொல்லாத உணர்வுகள் மனதை அழுத்தி, தற்கொலை வரைக்கும் விஸ்வரூபம் எடுக்கின்றது.

இன்று அழகைப் பார்த்து, வசதிகளைப் பார்த்து, காதல் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் காட்டி தொற்றிக்கொள்பவர்கள், வெறும் மயக்கத்தில் தெருத்தெருவாக அலைபவர்கள் என இப்படிப்பட்டவர்களால் காதலுக்கு அவமானமும் நம்பியவர்களுக்கு ஏமாற்றமும் ஏற்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் தொடர்புகொள்வது என்பது மிக மிக எளிதானது. இருந்தும், கருத்தொற்றுமை, பிடிப்பு இல்லாததால் காதலில் விரிசல் ஏற்பட்டுவிடுகின்றது. சில சமயங்களில் அதுவே நிரந்தர விரிசலாகவும் மாறிவிடுகின்றது. பின், சமூக வலைத்தளங்களில் ப்ரேக் அப் போஸ்டர்களும் பிரேக் அப் கவிதைகளும் கவலைகளும் என பகிர்தல் தற்கால நாகரிகமாக மாறியுள்ளது.

சில பேர் காதலித்து பிரிந்துவிட்டால் தம் வாழ்க்கையும் அத்தோடு முடிந்துவிட்டது என புலம்பிக்கொண்டு மன அழுத்தத்தில் மூழ்கிவிடுவார்கள். இதுவே தவறான பாதைகளின்பால் அழைத்துச் செல்லும்.

காதலித்து பிரிந்த சமயத்தில் ஏற்படும் வலிகள் காதலித்த இருவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருவர் மீதும் தவறு இருக்கலாம். காதலன் மீது காதலியோ, காதலி மீது காதலனோ பழியை சுமத்தாதீர்கள். எவ்வளவு கோபமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.

காதலித்து பிரிந்த பிறகு ஒருவரின் வாழ்க்கை பழுதடைந்த கடிகாரம் போல் நின்றுவிடப் போவதில்லை. அதுவும் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

எம்மை நேசிப்பவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் இன்னொருவர் மீதும் நீங்கள் காதல் வயப்படலாம்…

பொதுவாக, காதலித்து பிரிந்தவர்கள் அன்பு, சிரிப்பு, பாராட்டு என அவர்கள் மனதை குணப்படுத்தும் செயல்களுக்காக ஏங்கிக்கொண்டிருப்பார்கள். அதற்காக அவர்கள் தனிமையை விடுத்து நண்பர்களுடனும் பிடித்தமான உறவுகளுடனும் நேரத்தை கழிக்கலாம். அதனால் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படலாம். மனதை ஆட்கொண்டிருக்கும் வேதனையின் ஒரு பகுதியும் குறைவடையலாம்.

வாழ்க்கையில் தோல்வியும் சரி, மகிழ்ச்சியும் சரி இரண்டுமே ஒரே நிலையில் இருந்துவிடாது. தொடர்ச்சியாக, வாழ்க்கையில் வெற்றி பெற்றுக்கொண்டே வருபவர்கள் ஒரு கட்டத்தில் தோல்வியையும் சந்திக்கலாம். அதேநேரம் தோல்வியை தொடர்ச்சியாக சந்திப்பவர்கள் வெற்றியையும் சுவைக்கலாம்.

எனவே, நேரத்துக்கு ஏற்ற வகையில் நம் மனதை பக்குவப்படுத்தி, அவற்றை சிறந்த முறையில் கையாள எமக்கு தெரிந்துவிட்டால், இந்த உலகில் நம்மை விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்கமுடியாது.

“வாழ்க்கை வாழ்வதற்கே…
வாழ்ந்து காட்டுவோம்…”

-ஏ.எல்.இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login