General

கிறிஸ்மஸ் தாத்தா உருவான கதை!

By  | 

கிறிஸ்மஸ் காலமென்றால் அனைவருடைய நினைவிலும் வருபவர்தான் கிறிஸ்மஸ் தாத்தா. அதாவது, சன்டாக்லோஸ். அடர்ந்து வளர்ந்த வெள்ளைத்தாடி, வெள்ளை போடர் வைத்த சிவப்பு நிற வெல்வெற் அங்கி அணிந்த சிரித்த முகம். இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் வசீகரத்தோடு வரும் கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றிய சுவாரஸ்யமான கதை.

ரோம சாம்ராஜ்ஜியத்தின் பாதரிய பகுதியில் லைசீயா துறைமுகத்தில் பிறந்தவர் புனித நிக்கோலஸ். இவர் பிஷப்பாக இருந்து, ஏழைகளின் துயர் துடைத்து வாழ்ந்து வந்தார். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்ட சமுதாயத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். வலக்கரம் செய்வது இடக்கரத்துக்கு தெரியக்கூடாது என்ற வேத வசனத்துக்கு ஒப்ப வாழ்ந்தவர்.

ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதலை, மனக்குறைகளை பாவசங்கீர்த்தனம் செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேஷமாக பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரி சென்றபோது தங்களது குறைகளையும் சொல்லத் தொடங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா?என்றறிந்து அவர்கள் அறியாமலேயே உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்இ நிக்கோலஸ்.

ரோம் நகர அரசன் டயோக்கலிஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட போது, நிக்கோலஸும் சிறையில் தள்ளப்பட்டார். பின்பு கால மாற்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில்  அடக்கம் செய்யப்பட்டது.

மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பு, தயாளகுணம் காரணமாக அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது. மைரா பகுதிக்கு வந்த இத்தாலி மாலுமிகள், நிக்கோலஸின் கல்லறையில் இருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால் ஐரோப்பா முழுவதிலும் அவரது புகழ் மேலும் பரவியது.

டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அவரது புகழ் பரவியது.

செய்யீன் நிக்கோலஸ் என்பது டச்சு மொழியில் ‘சிண்டர்குலேஸ்’ என்று மருவி, பின்னர் ஆங்கிலம் பேசும் மக்களால் ‘சன்டாக்லோஸ்’ என அழைக்கப்பட்டார்.

1822ஆம் ஆண்டு கிளாமண்மூர் என்பவர் ‘கிறிஸ்மஸுக்கு முந்தைய இரவு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார்.

மூர் எழுதிய ‘ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்’ என  ஆரம்பிக்கும் கவிதையில் நிக்கோலஸை கதாநாயகனாக வடிவமைத்தமையே அவரது புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாகிற்று.

மூர் எழுதிய கவிதைக்கு அமெரிக்க ஓவியன் உருவம் கொடுத்தபோது அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட  பனிச்சறுக்கு வண்டி, ஒன்பது கலை மான்களால் இழுத்துச் செல்லப்படுவதையும் அதில் கம்பீரமாக அழகிய சிவந்த ஆடை அணிந்த நத்தார் தாத்தா செல்வதையும் காணமுடிந்தது. அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரையின் மேலாக பறந்து செல்வதும் புகைக்கூடுகளின் ஊடாக நத்தார் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுப்பொருள் வழங்குவதும் கண்கொள்ளாக் காட்சிகளாக சித்திரிக்கப்பட்டன.

இந்த நத்தார் தாத்தாவுக்கான மாதிரி உருவம் மூரின் தோட்டத்து பங்களாவில் பணிபுரிந்த வேலையாளை மாதிரியாக கொண்டு வரையப்பட்டது. அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத்தாடி, சிறிய வாய், பெரிய தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை… இவை எல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து மகிழும் சண்டாக்லோஸ்.

புனித நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புக்கள் அணிந்திருந்த சிவப்பு, வெள்ளை அங்கியே கிறிஸ்மஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போதிருந்து உலகம் முமுவதும் அன்பின் திரு உருவமாக கிறிஸ்மஸ் தாத்தா உலா வருகிறார். கிறிஸ்மஸ் தாத்தா வரும் இரவில் குழந்தைகள் சிறு புல் கட்டு அல்லது வைக்கோல் கட்டு ஒன்றை அவரது கலைமானுக்காகவும் அவர்களுடைய கால் அணிகளை வீட்டின் நுழைவு வாயிலுக்கு வெளியேயும் வைத்துவிடுவார்கள்.

காலையில் எழுந்து பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவர்கள் வைத்திருந்த புல் கட்டு மாயமாக மறைந்து போயிருப்பதையும் அவர்களின் காலணியில் இனிப்புகள், பருப்பு வகைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் இருப்பதையும் காண்பார்கள். அவற்றை இரவில் சன்டாக்லோஸ் வைத்துவிட்டு சென்றதாக குழந்தைகள் நம்பி மகிழ்வது வழக்கம். நள்ளிரவில் வைக்கோலை அகற்றி அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் வைப்பது மட்டும் பரம இரகசியமாகவே இருக்கும்.

ஜெர்மனியில் புனித நிக்கோலஸ் ஒரு உதவியாளரோடு பரிசுப்பொருட்களை ஒரு கோணிப்பையில் எடுத்துச் சென்று  குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. நல்ல குழந்தைகளுக்கு புனித நிக்கோலஸ் பரிசுகள் கொடுப்பதும், பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாத குழந்தைகளுக்கு உடன் வரும் உதவியாளர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் மெல்ல சில அடிகள் கொடுத்து, ‘எச்சரிக்கையாக இருந்தால் அடுத்த ஆண்டு நிக்கோலஸின் பரிசு கிடைக்கும்’ என்று சொல்வதும் வழக்கமாயிருந்திருக்கின்றது. அவர் மறைவுக்கு பின் அவர் மேற்கொண்ட அப்பழக்கமே பின்னர் சன்டாக்லோஸ் என்று சித்திரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பு குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றல் ஆகிற்று.

கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால், அவர் வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீரென சென்று குழந்தைகளை மகிழ்விப்பது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சன்டாக்லோஸாக பவனி வந்துகொண்டிருக்கிறார்.

கிறிஸ்மஸ் தாத்தா இன்றைய கொண்டாட்ட விழாக்களில் ஒரு கோமாளியாகவோ குழந்தைகளுக்கு சிரிப்பூட்டும் ஒரு நபராகவோ சொக்லேட் வழங்குபவராகவோ தான் இருக்கின்றார். அவருடைய வாழ்வு அப்படிப்பட்டதல்ல. வாழ்வில் வெற்றிடங்களை மனிதநேயம் கொண்டு நிரப்புவதே அவருடைய பணியாக இருந்திருக்கிறது.

நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவதுஇ விழாவை அர்த்தப்படுத்தாது. ஏழைகளையும் நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவினை அர்த்தப்படுத்தும்.

விழாவின் நாயகன் இயேசுவே சொல்கிறார், ‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்கள் அன்பு செய்தால், அதனால் எந்த பயனுமில்லை’. எனவே, இதை மனதில் நிறுத்தி எவருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, யாருக்கெல்லாம் அரவணைப்பு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவிகளை செய்து வாழ்வின் நிறைவை காண்போம்!

– பிருந்தா மகேந்திரன்

You must be logged in to post a comment Login