
குழந்தைகளின் மனதில் பெற்றோருக்கான இடம்
பெற்றோருடன் இருக்கும் எல்லா குழந்தைகளும் மகிழ்வாக இருக்கிறார்களா?
அவர்களால் வீட்டில் மனம் விட்டு பேச முடிகிறதா?
உண்மை பேசக்கூடிய சுதந்திரத்துடன் வளர்கிறார்களா?
இப்படி பல கேள்விகள் என்னிடம் உண்டு.
எனக்குத் தெரிந்து பல குழந்தைகள் பொய் பேசவே சிறு வயதிலிருந்து தயார் செய்யப்படுகிறார்கள். அதற்கு பெற்றோர்களே மிகப் பெரும் உடந்தை.
வீட்டுக்குள் தாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு, வெளியில் கிளம்பும்போது மற்ற மனிதர்கள் முன் அன்பானவர்கள் போல் நடிப்பார்கள், சில தம்பதியர்.
‘மற்றவர்கள் முன் இப்படி பேசு’, ‘அதை பேசக்கூடாது’ என்று பொய்களை சொல்லிக்கொடுத்து, தங்கள் கௌரவம் என்கிற பெயரில் குழந்தைகளை தயார்ப்படுத்துகிறார்கள்.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்கள் முன் மதிக்கப்பட வேண்டும், அதற்கு நீ நடிக்கவேண்டும் என்கிற தயார்ப்படுத்தல் மட்டுமே குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை பலரிடத்தில் உண்டு.
சிறகை பிடுங்கிவிட்டு, ‘நான் சொல்வது போல நீ நட… ஓடு…’ என்று பெற்றோர்களின் இஷ்டத்துக்கு பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள்.
தந்தையிடமிருந்து கிடைக்கும் அதிகபட்ச விடயம் உழைப்பும் பணத்தேவையுமே. அதை இப்போதெல்லாம் பெண்களே மிக திறமையாய் கையாள்கிறார்கள்.
நான் என் வாழ்நாட்களில் அதிகம் குழந்தைகளோடே இருந்திருக்கிறேன்… எனக்கு சிறு குழந்தைகளை எப்போதும் பிடிக்கும் என்பதால்.
அவர்களில் பலர், தங்கள் பெற்றோரிடம் பயத்தை மட்டுமே உணர்ந்தவர்கள்.
அன்பையோ பாதுகாப்பையோ அவர்களால் உணர முடியவில்லை.
என் மகள் பாடசாலை மூலம் சென்ற ஒரு சுற்றுலாவின்போது, அங்கே பல குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, இன்னும் சில குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தார்களாம், தங்களால் மனம் விட்டுப் பேச வீட்டில் யாருமில்லை… நல்ல நண்பர்களும் இல்லை என்று.
என் மகள் அதிசயமாய் அதை உணர்ந்தாள். ‘நான் எதுவாக இருந்தாலும், வீட்டில் பேசுவேனே’ என்றாளாம்.
என்னிடமும் வந்து அதிசயமாய் அதை சொன்னாள்.
நான் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்திருப்பது ஒன்றே…
‘இன்னொருவர் உங்களை பற்றி சொல்லி, எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். எதுவாக இருந்தாலும், உங்களை பற்றி தெரிந்துகொள்வதே எனக்கு மன நிறைவு’ என்று சொல்லி வைத்திருக்கிறேன்.
நாம் கண்டிப்பதால் எதையும் அவர்களால் மறைக்க முடியுமே தவிர, அவர்கள் குழந்தைத்தனங்களை மாற்றவா முடியும்?!
குழந்தையில் இருந்து என்னோடே வளர்ந்த, எனக்கு மகள் போன்றவள், பக்கத்து வீட்டுக் குழந்தை.
அவள் மீது எனக்கு அத்தனை அன்பு!
அவளுக்கும் எங்களுடன் இருப்பதில் அவ்வளவு சந்தோஷம்!
நான் வாங்கிக் கொடுப்பதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு, வாசலில் போகும்போது வாயை துடைத்துக்கொண்டு எந்த அடையாளமும் தெரியாதபடி போவாள்.
இது போல நடந்த பல நாட்களின் பிறகு அவளது தாய் ஒரு நாள் என்னிடம் கேட்டாள், “வந்து சாப்பிடாமல் படுத்துவிட்டாள்… ஏதும் அங்கு சாப்பிட்டாளா” என்று.
அதாவது பிள்ளை தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கிறாள். ஆனால், அதை விரும்பாத பெற்றோரிடம் மறைக்கிறாள்.
எனக்கு தெரிந்து, பல வருடங்களாக பெற்றோருக்கு தெரியாமல் காதலிக்கும் பிள்ளைகள் பலருண்டு.
பல வருடங்களாக காதலித்து கணவன் – மனைவியாக சேர்ந்து வாழ்ந்தபடி இருக்கும், பெற்றோருக்கு தெரிந்தால் மதத்தை காரணம் காட்டி பிரித்துவிடுவார்கள் என்று மறைந்து வாழும் வேறு மத, இன பிள்ளைகளையும் எனக்குத் தெரியும்.
‘வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை… ஒரே சத்தமும் சண்டையுமா இருக்கு’ எனும் பல குழந்தைகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
இதில் தனியே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் அளவு கூட, சேர்ந்து வாழும் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக நேரத்தை செலவழிப்பதில்லை.
வெறும் கட்டளைகளுக்குள் வளரும் குழந்தைகளின் மனதில், எவ்வளவு தூரம் ஒரு தந்தையாக, தாயாக இடம்பிடித்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
வெளிப் பார்வைக்கு காட்டப்படும் குடும்பத்தின் அழகு, வீட்டில் நிஜமாகவே காட்டப்படுகிறதா என்பதுதான் கேள்வி.
இரண்டு நாட்களாக நானும் மகளும் வெளியே சில அலுவல்களுக்கு போய் வர இருந்தோம். அன்று மகளுக்கு உடல்நிலையும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை.
வீடு திரும்பும்போது “நன்றிம்மா… உடம்புக்கு முடியாம இருந்ததோடையே என் கூட அலைஞ்சதுக்கு…” என்றேன்.
அதற்கு மகளோ, “ஏனம்மா எனக்கு நன்றியெல்லாம் சொல்றீங்க?! நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுறீங்க எங்களுக்காக! நான் உங்களுக்காக வந்ததில் சந்தோஷம்” என்றாள்.
“அது இல்லம்மா. எனக்கு இப்டி குழந்தைகள் கிடைக்க நான் எவ்வளவு லக்கி. அதிகமான குழந்தைகள் பெத்தவங்க கிட்ட உண்மை பேசுறதில்ல. எனக்கு அந்த டென்ஷன் இல்லையே” என்றேன்.
“அம்மா நெருக்கடி தரும் ஸ்ரிக்ட் பெற்றோரின் குழந்தைகள் நல்ல பொய்யாளர்களாக இருப்பார்கள் என்கிற ஒரு பழைய கதை இங்க இருக்கு. குழந்தைகள் என்ன செய்வாங்க! அது தான் அவங்க. அதை மாற்றச் சொல்லும்போது, மன அழுத்தம், வெறுப்பு அல்லது பொய் சொல்லவேண்டி வருது. அவங்களுக்கு வேறு வழி என்னம்மா” என்றபடி நடந்தாள்.
நம் இறப்பின் பிறகு நம்மை கொண்டாட, நமக்காக வேதனைப்பட குழந்தைகள் வளர்க்கப்படுவதை விட, நாம் வாழும்போதே கொண்டாடி வாழ்தல் போதும்.
நாம் இல்லாதபோதும், அவர்கள் பலத்துடன் உண்மை மனிதர்களாய், தைரியமாய் வாழ்ந்தால் போதும்.
– பேனாதுளிகள் குபோதினி
(ப்ரான்ஸ்)
You must be logged in to post a comment Login