General

கையால் எழுத… மேம்படும் மூளைத்திறன்!

By  | 

தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று பாடசாலை நாட்களில் பலர் கூறக் கேட்டிருப்போம். படிக்கும் காலத்தில் கையெழுத்துக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், படிப்பு முடிந்து பணிக்குச் சென்ற பிறகு கையால் எழுதும் பழக்கத்தையே பெரும்பாலானோர் கைவிட்டு விடுகின்றனர். அதிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பேனா, காகிதத்தின் பயன்பாடே பெருமளவில் குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் வீட்டு வரவு-செலவுக் கணக்குகளை எழுதி வைப்பது, வங்கியில் பணம் செலுத்துவது-எடுப்பது போன்றவற்றுக்காக பேனாவையும் காகிதத்தையும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், மின்னணு பணப் பரிமாற்ற நடைமுறை, பலதரப்பட்ட செயலிகள், ஏடிஎம், வங்கிகளில் பணம் செலுத்துவதற்கான இயந்திரம் ஆகியவற்றின் வரவுக்குப் பிறகு பேனாவின் பயன்பாடே தேவையில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

முதலில் எல்லாம் கடிதங்கள் எழுதி அதன் மூலமாக பலருக்கு ‘பேனா நண்பர்கள்’ கிடைத்தனர். இப்போது முகநூல் நண்பர்கள், சுட்டுரை நண்பர்கள் பெருகிவிட்டனர்.

சில பாடசாலைகளிவும், கல்லூரிகளிலும் மாணவர்கள் தேர்வெழுவதற்கு மட்டுமே பேனா, காகிதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பாடக் குறிப்புகளை எடுப்பது, பாடம் கற்பது உள்ளிட்ட அனைத்தையும் இணைய வழியிலேயே மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக கையால் எழுதும் பழக்கம் மாணவர்களிடமே குறைந்து வருகிறது.

மேலும், நோர்வே, சுவீடன் போன்ற சில வளர்ச்சியடைந்த நாடுகள் பாடசாலை, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேனா, காகிதத்தின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து வருகின்றன.

பேனாவைக் கொண்டு கையால் எழுதுவது மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பல்வேறு பலன்களை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு விஷயத்தையும் நாம் கையால் எழுதும்போது அவை குறித்து நமது மூளை பல்வேறு கோணங்களில் சிந்திப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதே விஷயத்தை அறிதிறன்பேசியிலோ அல்லது கணினியிலோ நாம் தட்டச்சு செய்யும்போது அவை குறித்த விரிவான தகவல்களை மூளை ஆராய்வதில்லை என்பதும் ஆய்வுகளில் தெரிய வருகிறது.

குழந்தை புதிய மொழியைக் கற்கும்போது, ஒவ்வோர் எழுத்தையும் கையால் எழுதி கற்பதற்கும் தட்டச்சு செய்து கற்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு எழுத்தையும் எழுதி கற்கும்போது குழந்தையின் மூளையிலுள்ள பல்வேறு புலனறிதலைத் தூண்டும் பகுதிகள் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன.

பேனாவை சரியான முறையில் கையில் பிடிப்பதில் இருந்து, ஒவ்வோர் எழுத்தையும் வெவ்வேறுவிதமாக விரல்களின் மூலம் எழுதுவது வரை, குழந்தையின் மூளை பல்வேறுவிதமான செயல்களைச் செய்வதற்கான புலன் உணர்வுகளைத் தூண்டும் திறன் படைத்ததாக மாறிவிடுகிறது. இதனால் மூளையின் செயல்திறனும் சிந்தனைத்திறனும் அதிகரிக்கிறது.

அதே வேளையில், தட்டச்சு செய்து கற்பதற்கு மூளையின் செயல்பாடு பெரிய அளவில் அவசியமில்லை. எழுத்து அச்சிடப்பட்டுள்ள பட்டனை விரல்களால் விசைப்பலகையில் தட்டினால் போதுமானது.

தட்டச்சு செய்யும்போது மூளையின் சிந்தனைத்திறன் கையால் எழுதும் போது இருப்பதைப் போன்று வேலை செய்வதில்லை. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்தும்.

கையால் எழுதும்போது நமது மூளை சுறுசுறுப்புடன் இயங்குகிறது. அதனால்தான்  பாடசாலை, கல்லூரிகளில் படிக்கும் பாடங்களை ஒரு முறைக்குப் பல முறை எழுதிப் பார்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

படிப்பு நிறைவடைந்த பிறகும் எழுதும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

வாழ்த்துக் கடிதம், பாராட்டு மடல்கள், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுதல் ஆகியவற்றின் மூலமாக எழுதும் பழக்கத்தை மீட்டுக் கொண்டு வருவதோடு தொழில்நுட்பங்களால் சுருங்கிப்போன உறவுகளையும் புதுப்பிக்க முடியும்.

அத்துடன் நாள்குறிப்பு எழுதும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.நாள்குறிப்பு எழுதுவதால், மூளை சுறுசுறுப்படைவதுடன் மன அழுத்தமும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவரைப் பாராட்ட விரும்பினால் அவரிடம் நேரில் சென்று மனந்திறந்து பாராட்டலாம். ஆனால், ஒருவரைத் திட்ட விரும்பினால், அவரிடம் நேரிடையாகப் பகையை வளர்க்காமல், அவர் குறித்து தெரிவிக்க விரும்புவதை நாள்குறிப்பில் எழுதி வைக்கலாம்.இதன் மூலமாக நமது மனதில் உள்ள கோபம் குறைவதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நபரிடம் பகைமையை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்தும் தப்பித்து விடலாம்.

கையால் நிதானமாக அழகாக எழுதும்போது நமது கவனம் ஒன்று குவிக்கப்படுகிறது. எழுதுகிற விஷயம் தொடர்பான கற்பனைகளுக்குள் மனம் மூழ்கிவிடுகிறது. மனதின் படைப்புத்திறன் மேம்படவும் கையால் எழுதுவது உதவுகிறது. மனிதன் இயந்திரம் போல் தன்னை மாற்றிக் கொள்வதிலிருந்து தப்பிக்க கையால் எழுதும் பழக்கம் பயன்படுகிறது.

You must be logged in to post a comment Login