Articles

கைவிடப்பட்ட உறவுகள் உடல்களாக வீதிகளில்!

By  | 

ரு ப்ளாஸ்டிக் காகித உரையில் உயிரற்ற உடலொன்றை வைத்து, இரத்தம் சொட்ட வீதிவழியே இழுத்துச்செல்லும் சில ஆண்கள், அந்த உடல் ஓரிடத்தில் நழுவி கீழே விழ அதை அப்படியே விட்டுவிட்டு ஓடுகின்றனர்.

‘ஹேய்…. ஏன் அப்படி உடலை வைத்துவிட்டுச் செல்கிறீர்கள்?” என அவர்களை நோக்கி பெண்ணொருவர் சத்தமிடுகிறார்.

‘எனது பெற்றோர் நேற்று காலை 10 மணிக்கு இறந்தனர். இங்கே அவர்களின் உடல்கள் கிடக்கின்றன. அவற்றை நான் எப்படி எடுப்பது? யாராவது எடுக்க உதவி செய்யுங்கள்…” என அழுகிறார் மற்றுமொரு பெண்.

‘துரதிர்ஷ்டவசமாக, இறந்துகிடக்கும் எங்களுடைய குடும்பத்தவர்களை ஐந்து நாட்களாக இங்கேயே வைத்-திருக்கிறோம். இதனால் அயலவர்கள் பிரச்சினை  ஏற்படுத்துகிறார்கள்…” என நபரொருவர் கூற,

‘இந்த சடலங்களிலிருந்து வரும் வாசனையை தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்கிறார், அயலில் வசிக்கும் ஒரு பெண்.

ஈக்வடோர் நாட்டின் குவயாகில் நகரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் பதிவான சில காட்சிகளிவை…

இவர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்களிலும் அங்குள்ள வீடுகளிலும் கைவிடப்பட்டுக் கிடக்கும் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு ஈக்வடோர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறந்து கிடப்பது தங்கள் இரத்த உறவு என்பதை உணர்ந்தபோதிலும் அவ்வுடலை தொடுவதற்கும் அருகில் நிற்பதற்கும் அஞ்சுகின்றனர், அந்த மக்கள்.

இறந்தவரின் உடலை தொற்றியுள்ள நோய் தன்னையும் தொற்றிவிடுமோ என்கிற பயத்தில் பலர் தயங்கி தள்ளி நிற்கின்றனர் அல்லது உடலை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடிவிடுகின்றனர்.

இந்த நூற்றாண்டில் இதுபோன்றதொரு அவலநிலைக்கு மனித சமுதாயம் முன்னொரு போதும் தள்ளப்பட்டதில்லை.

உலகம் முழுவதுமான நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியிருக்கிறது. ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறு பலியானவர்களின் உடல்களை மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத முறையில் அடக்கம் செய்வதிலும் அப்புறப்படுத்துவதிலும் பல்வேறு நாடுகள் இடர்ப்பாடுகளை சந்தித்து வருகின்றன.

இன்னும் சில நாடுகளில், நீண்ட இடப்பரப்பில் பரவலாக குழி தோண்டப்பட்டு தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாகவும், உடல்களை அடக்கம் செய்வதற்கென்றே பல பகுதிகள், தீவுகள் என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

தற்போது ஈக்வடோரின் 2 மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட குவயாகில் நகரத்தில், இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்திருப்பதால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்களின்றி நிர்க்கதியில் உள்ளன.

உடல்களை எடுத்துச்செல்லும்படி அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரமன்றி, இறந்தவர்களின் உறவினர்களே அரசுக்கு வலியுறுத்திவந்தனர்.

இது இவ்வாறிருக்க, குவயாகிலில் உள்ள மருத்துவமனையொன்றின் முன்பாக பலர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தங்கள் உறவினர்களின் உடல்களை பெறுவதற்காகவும் காத்திருக்கின்றனர்.

‘நாங்கள் இங்கே அதிகாலை 5 மணியிலிருந்து எங்கள் உறவினர்களின் உடல்களைப் பெற காத்திருக்கின்றோம். எங்களில் சிலர் ஐந்து முதல் எட்டு நாட்களாக இங்கேயே இருக்கின்றனர்…

கட்டடத்தின் பின்புறத்தில் சில உடல்கள் 15 நாட்களுக்கு மேல் இருக்கின்றன. புழுக்கள் மேய்ந்திருக்கும் அவ்வுடல்களின் முகங்கள் அடையாளம் காணமுடியாதபடி இருக்கின்றன” என பெண்ணொருவர் மருத்துவமனை வாசலில் நின்று புலம்புகிறார்.

இதனைத் தொடர்ந்து குவயாகில் நகர வீதிகளிலும்,  வீடுகளிலும் கைவிடப்பட்ட உடல்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய 10 நாட்களிலேயே 300 உடல்கள் அழுகிய நிலையில் வீடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரங்களில் கிட்டத்தட்ட 800 உடல்கள் வரை பொலிஸாரால் வீடுகளிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

இந்த அபாயகரமான சூழலில் மருத்துவமனைகள், மலர்ச்சாலைகள், அவசர சேவைகள் என்பனவும் பெருமளவு இயங்குகின்றன.

மீட்புப்பணிகளில் கடமையாற்றுவதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களின் பணிக்குழுவை வழிநடத்துபவராக ஜோர்ஜ் வேட்டட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் அவர் ‘மக்களின் வீடுகளில் இருந்து பணிக்குழுவோடு இணைந்து நாங்கள் பெற்ற உடல்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது…” என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மீட்புப்பணிக்குழு கடந்த மூன்று வாரங்களாக செயற்பட்டுவருவதால், 771 உடல்கள் வீடுகளில் இருந்தும் 631 உடல்கள் மருத்துவமனைகளிலிருந்தும் பெறப்பட்டுள்ளதோடு அவற்றில் 600 உடல்கள் அதிகாரிகளால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என பின்னர் வேட்டட் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், மருத்துவமனைகளில் உள்ள உடல்களை பெறுவதில்தான் பல சிக்கல்கள் உள்ளன எனவும் கூறப்படுகின்றது.

ஈக்வடோரில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பதிவாகியுள்ள போதிலும், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதவாறு உயிரிழப்பு  பெருகுவதை அறியமுடிகிறது.

முன்பு நாளொன்றுக்கு 35 பேர் மரணத்தை தழுவினர். அதனால் மருத்துவமனை பிணவறைகளில் உடல்கள் வைக்கக்கூடியதாக இருந்தன.

ஆனால், தற்போதைய நிலைமை அப்படியல்ல.

ஒரு நாளில் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். அதனால் அங்கே மரச்சவப்பெட்டிகள் போதுமான அளவில் இல்லை. சில உடல்கள் காகித உறைகளில் சுற்றப்பட்டு, கார்ட்போர்ட் பெட்டிகளில் வைக்கப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படுகின்றன.

பல உடல்களை பிணவறையிலிருந்து வெளியே எடுக்க முடியாமலும் வெளியிலிருந்து வரும் உடல்களை அறைகளில் வைக்க இடமின்றியும் இருக்கின்றன.

இதனால் அரசாங்கத்துக்கு மிக நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் தாமதமாகி முன்னெடுக்கப்பட்டமைக்காக அரசு மன்னிப்பும் கோரியுள்ளது.

ஈக்வடோர் நாட்டை உள்ளடக்கியுள்ள ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவும் இன்று சுகாதார பாதுகாப்பை பேணுவதில் மந்தத்தனமாக இருப்பதாய் சில சர்வதேச செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

கொரோனா தொற்றுதலுக்கு உள்ளானோரில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் குவயாகில் நகரில் அமைந்துள்ள கடலோர மாகாணமான குவாயாஸில் வசிக்கின்றனர்.

,குவயாகில் நகரில் கிட்டத்தட்ட 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஈக்வடோர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அங்கு நாளுக்கு நாள் ஏராளமான மரணங்கள் சம்பவிப்பதால் கொரோனா பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறுவதில் சிக்கல்கள் நிலவுவதாக தெரிகிறது.

-மா. உஷாநந்தினி

 

You must be logged in to post a comment Login