கொரோனா

கொரோனாத் தொற்றிலிருந்து கர்ப்பிணி பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

By  | 

டொக்டர் தனசேகர் MRCPCH., CCT.,

குழந்தைகள் நல மருத்துவர்

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைக்கும் அரிய வரம். எனவே ஒவ்வொரு பெண்களும் இந்த தருணத்தில் உச்சக்கட்ட மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் இருந்தால் மட்டுமே இந்தக் காலகட்டம் அற்புதமான அனுபவத்தைத் தரும். அத்துடன் பிறக்கும் குழந்தையும் முழுமையான ஆரோக்கியத்துடன் இந்த உலகை தரிசிக்கும். தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வரும் மரபு சார்ந்த நடவடிக்கை இது. இந்த தருணத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் வாழும் மக்கள் அச்சத்துடனும், பூரண உளவியல் நலமில்லாமலும் தான் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் பொதுவாக ஒரு பெண் கருத்தரிப்பதை விரும்ப மாட்டாள். ஆனால் ஆண்டவனின் அருளால் கருத்தரித்த பெண்கள், வழமையான மன நிலையை விட சற்று கூடுதலான உற்சாக மனநிலையுடன் இதனை எதிர்கொண்டால்…. ஆரோக்கியமான குழந்தை குழந்தையை ஈன்றெடுக்கலாம். மருத்துவர்கள் அறிவுறுத்தும் நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

பேறுகாலத்தின் போது சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது வழமையான மொழி என்றாலும், இந்த காலகட்டத்தில் அதனை உறுதியாக பின்பற்ற வேண்டும். வீட்டிற்குள் யாரேனும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் நீங்கள் முக கவசம் அணிந்து கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கான பாதுகாப்பு. அதேபோல் பேறுகாலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் தவறாதீர்கள்.

ஒருவேளை நீங்கள் ஆறு மாதமோ, ஏழு மாதமோ அல்லது நிறைமாதமாகவோ இருக்கும் தருவாயில், கொரோனாத் தொற்றிற்கான அறிகுறிகள் ஏற்பட்டால், சற்றும் தயங்காமல் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’ எனப்படும் வீட்டுக்குள்ளேயே கொரோனா தொற்று பாதிப்பு இருக்கா? இல்லையா? என்பதை அறியும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதற்கான வசதிகள் இல்லை என்றால்…, சற்றும் தயங்காமல் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று ஆர் டி பி சி ஆர் பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசோதனையில் உங்களுக்கு ‘கொரோனா பாசிட்டிவ்’ என்று முடிவு தெரிந்து, உங்களுக்கு எந்த அறிகுறியும் தீவிரமாக இல்லை என்றால், உங்களுக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டு, அதற்குரிய மருத்துவ சிகிச்சையைப் பெறுங்கள். நீங்கள் 14 நாட்கள் கழித்து மீண்டும் ‘ஸ்வாப் டெஸ்ட்’ எனப்படும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதனை நிச்சயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதே தருணத்தில் நீங்கள் பிரசவத்திற்கு இறுதி மூன்று மாத கால கட்டத்தில் இருந்து, உங்களுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், வயிற்றுக்குள் இருக்கும் சிசுவின் உடல் எடைக்கும், பிரசவத்திற்கு பிறகு அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறு உண்டு. இந்த மூன்று மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு என்பது மட்டுமல்லாமல், வேறு ஏதேனும் உடல் கோளாறுகள் ஏற்பட்டால் உங்களுக்கு குறைமாத பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதே தருணத்தில் உங்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கும் தருணத்தில் குழந்தை பிரசவித்தால், மருத்துவர்கள் உடனடியாக அந்த குழந்தையை தனிமைப்படுத்தலில் வைத்திருப்பார்கள். இதனை நீங்கள் மன ரீதியாக நேர்மறையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் குழந்தை பிறந்து, உங்களுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் எழும். ஆனால் எதற்கும் இடமளிக்காமல் நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும். ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போது, தாய்மார்களான நீங்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று ஹேண்ட் செனிடைசரையும் பயன்படுத்தலாம்.

தெற்காசிய நாடுகளை பொறுத்த வரை பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தேவையில்லை என்று பரிந்துரைக்கப்படுகிறது. சில காரணங்களால் மருத்துவர்கள் நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், அது குறித்து தீர ஆலோசித்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் தவறில்லை.

அதே தருணத்தில் தெற்காசியாவை பொருத்தவரை கொரோனாத் தொற்றிலிருந்து விரைவில் மீள்வதற்கான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆனால் இங்கு பயம் மற்றும் அறியாமை காரணமாகவே இது குறித்த தவறான வழிகாட்டலுக்குள்ளாகிறார்கள். நீங்கள் உரிய முறையில் விடா முயற்சி செய்து இதற்கு விளக்கம் பெற்று நம்பிக்கையுடன் பயணித்தால்,‌ கொரோனாத் தொற்றை கர்ப்பிணி பெண்கள் முதல் பிறந்த பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் வரை தாராளமாக எதிர்கொள்ளலாம்.

சந்திப்பு அனுஷா.

You must be logged in to post a comment Login