General

கொரோனாவின் பிடியில் அகதி முகாம்கள்

By  | 

கொவிட் 19 உலக மக்களில் பெரும்பகுதியினரை ஆட்கொண்டுவிட்டது. இதனால் பல நாடுகளில் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிப்புற்றிருக்கும் நிலையில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் குடியேற்றவாசிகளின்வாழ்க்கைமுறை இன்னும் மோசமானதாக காணப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்து வாழும் அகதிகள் தொற்றுதலுக்கு இலக்காகியும் அபாய வலயத்துக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை நோய்த்தாக்கத்திலிருந்து மீட்டு புதிய வாழ்க்கைக்கு இட்டுச்செல்வது அந்நாடுகளின் அரசுகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபிடி (உகாண்டா), ஸாதரி (ஜோர்தான்), தடாப்-ககுமா (கென்யா), கொக்ஸ் பஸார் (பங்களாதேஷ்) முதலியவற்றின் வரிசையில் கிறீஸ் நாட்டிலும் அதிகமான அகதிகளை உள்ளடக்கிய முகாம்கள் உள்ளன.
அட்டிகாவில் உள்ள ‘மலகாசா”, லெஸ்பொஸ் தீவிலுள்ள ‘மோரியா”, ஈவியாவில் உள்ள ‘ரிட்சோனா” என்பனவற்றை குறிப்பிடலாம்.
கிறீஸ் நாட்டில் தற்போது 1900க்கு மேற்பட்ட (ஒரு வாரத்துக்குள் 2 ஆயிரத்துக்கு மேலாக அதிகரிக்கக்கூடும்) கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு 80க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட முகாம்களிலும் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிட்சோனா முகாமில் வசித்த பெண்ணொருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் குழந்தை பிரசவித்தபோது அவருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இப்பெண்ணே முதல் அகதி தொற்றாளராக பதிவு செய்யப்பட்டவர்.
பிறகு அந்த முகாமைச் சேர்ந்த பெரும்பாலானவர்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தியபோது 20 குடியேற்றவாசிகள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து, ரிட்சோனா முகாமில் வசிக்கும் 2300 பேரும் பொலிஸ் கண்காணிப்பில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதோடு அங்கு மேலதிக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்தபோதும் நோய்க்கான எந்த அறிகுறியும் நோயாளர்களிடம் தென்படவில்லை என்கிறது, கிரேக்க இடம்பெயர்வு அமைச்சு.
வைரஸ் தொற்றின்போது சனநெரிசல் குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி, அகதிகளை முகாம்களிலிருந்து வெளியேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன்போது சர்வதேச இடப்பெயர்வு நிறுவனத்தின் (IOM) செய்தித் தொடர்பாளர், அக்குடியேற்றவாசிகளுக்கு உணவுக்கூடைகளையும் சுகாதார கருவிகளையும் தாம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதனூடாக அவர்கள் தொடர்ந்து மருத்துவ வசதிகளை அணுகுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இம்முகாமில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பர்வானா அமிரி (16 வயது) என்ற சிறுமி சக மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
‘வைரஸை எதிர்த்து போராடுவது எப்படி என்பது அகதிகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். இளையவர்களாகிய நாம் நம் குடும்பத்தின் மிக முக்கியமானவர்கள்…
வைரஸ_க்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அது அனைவரையும் சமமாகவே எதிர்கொள்ளும். நீங்கள் வீட்டுக்குள் தங்கியிருக்கும்போதும், நாங்கள் முகாமில் தங்கியிருக்கும்போதும்கூட நம் சுகாதார பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது…
ஆகவே, கைகளை நன்றாக கழுவுவதுதான் இப்போது நம் பாதுகாப்புக்கு சிறந்த வழியாகிறது….” என தன் வயதையொத்த சிறுவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் எடுத்துரைக்கிறார்.
சிறுவர்களிடத்தில் இத்தகைய விழிப்புணர்வும் துணிகரமான எண்ணங்களும் ஏற்பட்டிருப்பது உலகம் முழுவதன் கவனத்தையே ஈர்த்துள்ளது.
ஏதென்ஸுக்கு வடக்கிலுள்ள மலகாசா முகாமில் வசித்துவந்த 53 வயதுடைய ஆப்கானிஸ்தானிய நபர் ஏதென்ஸிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது அகதி முகாம் மலகாசா என அந்நாட்டு இடம்பெயர்வு அமைச்சு கடந்த 5ஆம் திகதி அறிவித்தது. அத்துடன் முகாமில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான அகதிகளை தொடர் கண்காணிப்பில் வைத்து வைரஸ் பரவலின் தீவிரத்தை அவதானித்துவருகிறது.

தப்பிப் பிழைக்குமா மோரியா?
”அகதிமுகாம்கள் வைரஸ் பரவலுக்கு சாதகமான இடங்களாகும். அதிலும் தீவுகளில் உள்ள முகாம்களின் சூழலமைப்பானது சன நெருக்கடி, சுகாதாரமற்ற பிரச்சினைகளால் நோய்த்தாக்கத்தை அதிகப்படுத்தி ஒரு பொது சுகாதார பேரழிவையே ஏற்படுத்திவிடும்” என்கிறார், கெய்வன் போசோர்க்மெர்.
இவர் ஜெர்மனியில் உள்ள பீல்ஃபெல்ட் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளி மருத்துவர் மற்றும் பேராசிரியருமாவார்.

 

 

 

 

 

 

 

 

 

இவரது கருத்துப்படி அபாயகட்டத்தில் சிக்குண்டிருக்கும் ஒரு தீவாக லெஸ்பொஸ் காணப்படுகிறது. இத்தீவில் தஞ்சமடைந்திருக்கும் ‘மோரியா” முகாம் அகதிகள் எப்போது, என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து கடக்கிறார்கள். ஆனால், அங்கு இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை என்பதே ஆச்சரியம்.
கொரோனா மட்டுமன்றி இன்னும் கொடிய நோய்கள்கூட தாக்கக்கூடும் எனுமளவுக்கு ஆபத்தான, அசுத்தமான, சுகாதாரமற்ற முறையில் அங்குள்ள குடியிருப்புகள் விளங்குகின்றன. அதுவே அம்மக்களின் உயிர்பயத்துக்கு முக்கிய காரணம்.
3000க்கும் குறைந்த அகதிகள் வாழ்வதற்கென கட்டமைக்கப்பட்ட மோரியா முகாம், இன்றைக்கு 18 – 20 ஆயிரம் பேரை உள்ளடக்கியிருக்கிறது. வயதானவர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்களும் அந்த சிறிய பரப்புக்குள்தான் முடங்கிப்போயுள்ளனர்.
அவர்களுள் 5 மாதங்களாக முகாமில் வசிக்கும் யசீர் என்ற 18 வயது இளைஞர், முகாமின் சில பகுதிகளை காணொளியின் மூலம் பதிவிட, இளம் படதயாரிப்பாளர் குழு அவ்வீடியோ பதிவை வெளியிட்டிருந்தது.
அதனூடாக காண்பிக்கப்பட்ட சில காட்சிகள் முகாமின் அவலட்சணத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது.
முகாமின் ஒரு பகுதியில் உள்ள குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வீணாக வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. குழாய்களை சுற்றி உடைந்துபோன சுவர்களில் பாசிகளும் கறைகளும் அப்பியிருக்கிறது. நிலம் பெயர்த்துக்கிடக்கிறது.
கை, முகம் கழுவுவதற்கென வரிசையாக உள்ள குழாய்களில் ஒரு குழாயை திறந்தால் நீர் வரவில்லை. அதற்குப் பதிலாக, காற்று வெளித்தள்ளும் சத்தம் கேட்கிறது. இன்னுமொரு குழாயின் பிடி வலது, இடது புறமாக சுற்றிக்கொண்டேயிருக்கிறது. அதிலும் நீர் வரவில்லை. குழாய்களுக்கு கீழுள்ள நீண்ட ளiமெ மண்ணும் சகதியுமாக கிடக்கிறது.
அன்றாடம் பயன்படுத்தும் கழிவறைகளில் சில உடைந்து வெடித்து காணப்படுகிறது. குழாய் நீருக்காக ஆட்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
ஆண்களின் குளியலறை பகுதியில் வாசற்கதவு வரை எல்லோரும் ஆடைகளை கையில்  வைத்துக்கொண்டு குளிப்பதற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
குழாயடியில் பெண்களின் வரிசையும் நீளுமளவுக்கு சனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது.
அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அணுகுவதற்கு மருத்துவர்கள் அருகில் இல்லை. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள சுவாசக்கவசங்கள், கையுறைகள், ஏனைய சுகாதார கருவிகள் என எதுவும் போதுமான அளவில் இல்லை.
குடிநீரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் போத்தல்களில் விநியோகிக்கப்படுகிறது. உணவையும் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்கிறார்கள்.
சவர்க்காரங்கள் மற்றும் தூய்மையாக்கப் பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக குவிந்துகிடக்கிறார்கள்.
ஒரு பெண்பிள்ளை மண்தரையில் தேங்கிக்கிடக்கும் நீரில் கைகளை வைத்து குழைத்தும் நனைத்தும் விளையாடுகிறாள். காணும் இடமெல்லாம் தூய்மையற்ற நிலையில் இருக்கிறது. ஐந்தாறு பேர் ஒரே கூடாரங்களில் தங்குகிறார்கள்.
கிறீஸ் அரசு சுய தனிமைப்படுத்தலை மக்களிடத்தில் வலியுறுத்திவருகிறது. இங்கே சில பெண்கள் சுய தனிமைப்படுத்தல் என கன்டெய்னர்களில் படுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த இடமும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
இதுகுறித்து அங்கே களப்பணியில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.எஃப் (எல்லைகளற்ற மருத்துவர்கள் – Doctors Without Borders) நிறுவனத்தின் பணித்தலைவர் ஸ்டீஃபன் ஒபரெய்ட், ‘உடல்நலக் குறைவு ஏற்பட்டால் சுய தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்பது எமக்கு தெரியும். ஆனால், இங்கே அது சாத்தியமில்லை…. மோரியாவில் ஒருவேளை வைரஸ் பரவத் தொடங்கினால் அதை கட்டுப்படுத்துவது மிக கடினம்…” என தெரிவிக்கிறார்.
தற்போது ஏனைய முகாம்களில் தொற்று உறுதியாகிவிட்டதால் மோரியாவிலும் முன்னெச்சரிக்கையாக வெளியே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முகாமில் பணிபுரிய மருத்துவர்களும் செவிலியர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் அதிகளவில் நியமிக்கப்படுவார்கள், துப்புரவு பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிறீஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிபரப்படி, கிறீஸ் நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம். அவர்களில் ஐந்து தீவுகளில் வாழ்பவர்கள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர். அதில் ஒரு பகுதியினரான மோரியா அகதிகள்… கொரோனாவை வென்று மயிலிழையில் தப்பிப் பிழைப்பார்களா என்பதே உலகளவில் எழுப்பப்படும் கேள்வி!

தொடரும் மர்மங்கள்
மோரியாவில் நோய் பரவும் அச்சம் நிலவும் இச்சூழலில் வன்முறைகளும் மர்ம தாக்குதல்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
அண்மையில் 16 வயது ஆப்கானிய இளைஞர் 20 வயது ஆப்கானிய நபரொருவரால் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அதன்பிறகு முகாமிலுள்ள சிறுவர்களுக்கான பகுதியில் வன்முறைகள் பாரதூரமாகி சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலர் தற்கொலை செய்தும், தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன.
2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி மோரியா முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக்கு இன்றுவரை உறுதியான காரணம் கண்டறியப்படவில்லை. இவற்றின் பின்னணியில் இருப்பதென்ன என்பதே புரியாத புதிர்.

– மா.உஷாநந்தினி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login