Covid 19

கோடையில் கொரோனா… சமாளிப்பது எப்படி?

By  | 

இந்த ஆண்டு கோடை வெயிலுடன் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவையும் கோடை வெயிலையும் ஒரே நேரத்தில் மக்கள் சமாளிக்க சில முக்கிய ஆலோசனைகள் வழங்குகிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

சிலர் வேகமாக நடக்கும் போதும், மாடிப்படி ஏறும் போதும் அல்லது வெயிலில் வெளியே இருக்கும் போதும், முகக்கவசம் அணிவதால் சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாக நினைக்கின்றனர். முதலில் மாஸ்க் அணிவதால், சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படுவதாக மக்கள் எண்ணுவது முற்றிலும் தவறான கருத்தாகும். முகக்கவசம் அணிவதால் நம் ஒட்சிசன் அளவு குறைந்துபோவது கிடையாது. மருத்துவத் துறையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மாஸ்க் அணிந்துதான் நாங்கள் வேலை செய்கிறோம்.

இதனால் மக்கள் அதை  எண்ணி வருத்தம் கொள்ளத் தேவையில்லை. கோடை வெயில் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணியும் போது வேர்வையின் காரணமாக எரிச்சலும், முகம் அல்லது கழுத்து பகுதியில் தடிப்புகளும் ஏற்படலாமே தவிர, சில  நிமிட  அசெளகர்யமும் நம் உயிரையே காக்கும் என்பதை மறக்க  வேண்டாம் என்று, கோடை காலத்தில் எந்த மாதிரியான மாஸ்க்  அணியலாம் என சில  டிப்ஸ்களையும் பகிர்கிறார்.

*தரமான கொட்டன் மாஸ்க்குகளை அணிய வேண்டும்.

*சரியான அளவில் இருக்கும் பொருத்தமான மாஸ்குகளை அணிய வேண்டும். பெரிய முகக்கவசம் அணிந்தால், சரியான பாதுகாப்பு கிடைக்காது. சிறிய அளவு மாஸ்காக இருந்தால், இறுக்கமாக இருந்து முகத்தில் தடிப்புகள் உருவாக்கும்.

*தினமும் முகக்கவசத்தை துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

*கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாகும். இதனால் அடிக்கடி முகக்கவசத்தை மாற்றிக்கொள்வதும் நல்லது. அஸ்துமா அல்லது நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு முகக்கவசம் அணிவதில் பிரச்சினை இருக்கலாம். அவர்கள் N95 மாஸ்க் தவிர்த்து, கொட்டன் மாஸ்க்குகளை அணியலாம்.

இவர்களைத் தவிர, மாற்றுத்திறனாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர், ஆட்டிசம் பாதித்த சிலர், கிளாஸ்ட்ரோபோபியாவால் (மூடிய அறைக்குள், லிஃப்டில், கூட்டம் நிறைந்த பகுதிகளில் இருக்கும் போது ஒருவருக்கு உருவாகும் பயம்) பாதிக்கப்பட்டவர்கள் எனச் சிலருக்கு மாஸ்க் அணியும் போது பிரச்சினை ஏற்படலாம். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பான முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவர்களைத் தவிர அனைவருமே மாஸ்க் அணிந்துகொண்டு வாக்கிங்கும் உடற்பயிற்சியும் கூடச் செய்யலாம்.

எனவே கோடையிலும் முகக்கவசம் முக்கியமாகிறது. இருந்தாலும், மக்கள் அசௌகரியங்களைத் தவிர்க்க, வெயில் இருக்கும் சமயங்களில், வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அதிக நேரம் மாஸ்க் அணிந்து மூச்சுக்காற்றை வெளியிடும் போது, அது  வெப்பத்தை   அதிகரிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

கோடையில் வெப்பம் அதிகரிக்கும் போது நீரிழப்பு பிரச்சினைகளும் அதிகம் உண்டாகும். பொதுவாக வெளியில் இருக்கும் போது நமக்கு அதிகம் தாகம் எடுக்கும். அப்போது கடைகளில் கிடைக்கும் சோடா கலந்த கூல் ட்ரிங்க் அல்லது ஜூஸ் குடித்து தாகத்தைத்  தணித்துக்கொள்வோம். ஆனால் சர்க்கரை, சோடா, காஃபி போன்றவை நீரிழப்பை அதிகரிக்கக் கூடியவை என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி.

சோடாவும், சர்க்கரையும் இயற்கையாகவே அதிக சிறுநீரை வெளியேற்றக் கூடிய தன்மையைக் கொண்டவை. இதனால், உடலில் இருக்கும் தண்ணீர் சீக்கிரமே வெளியேறி, நமக்கு மீண்டும் பசி உண்டாகிறது. அதனால், ஒரு கப் கோப்பி குடிப்பதாக இருந்தால், அதே அளவில் தண்ணீரும் குடிக்க வேண்டும் என்று நாங்கள் பொதுவாக அறிவுறுத்துவோம்.

வெயிலுக்கு  இதமாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றினால், இளநீர் குடிக்கலாம். அதுவும், ஒரு இளநீருடன் நிறுத்திக்கொள்வது சிறந்தது. இது தவிர மோர், சர்க்கரை கலக்காத பழச் சாறுகளும் எடுத்துக்கொள்ளலாம். சாதாரணமாகத் தினமும் பழங்களைச் சாப்பிட்டாலே உடலிலிருந்து நீர் இழப்பைத் தவிர்க்க முடியும்.

தலைவலி, தசை வலி, சிறுநீரக கல் போன்ற பிரச்சினைகள் கோடைக் காலத்தில் அதிகம் தாக்கும். இவை நீரிழப்பினால் உருவாகும் நோய்கள். இதற்கு ஒரே தீர்வு தண்ணீர் மட்டுமே என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி.

You must be logged in to post a comment Login