Articles

சமூகத்தின் பார்வையில் பெண்…

By  | 

தங்கராஜ் சுஜானி,

வவுனியா.

சங்ககாலம் தொடக்கம் இன்றுவரை பெண்களின் மாண்புகளைப் போற்றிப் பாடாத புலவர்களே இல்லை என்றே கூறலாம். அதேபோன்று இன்றும் பெண்கள் சகல துறை விற்பன்னர்களாக பல்வேறு துறைகளில் தடம்பதித்து வருகின்றனர். இருப்பினும் பெண் என்பவள் ஏதோ ஒரு வழியில் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்றாள் என்பதுதான் யதார்த்தம்.

இன்றைய பெண்களின் வாழ்வியல் பல்வேறு சமூக சூழலியல் காரணங்களால் பாரிய நெருக்குவாரங்களுக்குட்பட்டிருக்கிறது. அதிகமான  குடும்பங்கள் கணவனை இழந்த ஒற்றைப்பெண் தலைமைத்துவம் கொண்டதாக மாறியிருக்கின்றன.

இந்த ஒற்றைப்பெண் குடும்பச்சூழல் அனைத்துக் கடமைகளையும் பெண்கள் மீது சுமத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை பண்பாட்டு நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளிவிடுகிறது. இதனால் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார உளவியல் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளத் தொடங்குகிறார்கள். பெண் என்றாலே பிரச்சினைக்குரியவளாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் காமப்பொருளாகவும் பார்க்கும் ஆண்களின் உளவியல் பார்வைகள், இவ்வாறான பெண்களின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கி பல்வேறு பெயர் கொண்டு அவர்களின் நடவடிக்கைகளையும் அழைக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல அவர்களை இலகுவான இலக்காகவும் கொள்கின்றன. அவளின் ஒவ்வொரு நடத்தையையும் அவதானிக்கத் தொடங்கி வெவ்வேறு வியாக்கியானங்களை பரப்பத் தொடங்குகிறார்கள், சில ஆண்கள்.

ஒரு பெண், என்றைக்கு தன் கணவனை பிரிந்தோ அல்லது இழந்தோ தனிமையில் வாழ ஆரம்பிக்கின்றாளோ, அன்றிலிருந்தே இச்சமூகம் இவளை எப்பொழுதும் கருடப்பார்வையுடனும் சந்தேக கண்கொண்டும் பார்க்கத் தொடங்குகின்றது. இப்படிப்பட்ட சிந்தனை, நோக்கம் கொண்ட சமூகம் உருவாக்கும் பிரச்சினைகள் அவளின் சுதந்திரத்தை, அவளின் ஆளுமையினை, அவளின் சுயத்தினை இழக்கவும் செய்துவிடுகின்றன.

செல்வம் படைத்த பெண்களைவிட ஏழ்மையில் வாழும், வாழ்வாதாரம் தேடிச் செல்லும் பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சினைக்கு தள்ளப்படுவது மிக அதிகம். உதாரணமாக ஆடைத் தொழிற்சாலைகளில்  பணியாற்றும் பெண்கள், அலுவலகங்கள் மற்றும் மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் இப்படிப் பலதரப்பட்ட சூழலில் வாழும் பெண்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்பிரச்சினையினை வெளியில் சொல்ல முடியாமலும் சமூகம், கலாசாரம், பண்பாடு என்பவற்றுக்கு பயந்து தங்களுக்குள்ளே மூடி மறைத்து காலப்போக்கில் உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்போது தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

சில ஆளுமைமிக்க பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான தீர்வுகளை தேடிச்செல்ல முயல்கையிலும் அதே மாதிரி பிரச்சினைகள் வேறு தரப்பினரால் வரவும் செய்கின்றன. இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழலே அதிகம் இடம்பெறுகிறது. தனித்து வாழும் பெண்கள் ஆண்களின் பார்வையில், எப்போதும் எதிர்மறையாகவே நோக்கப்படுகின்றனர். தங்கள் ஆசைவலைகளுக்குள் இப்பெண்களை சிக்கவைக்க முனையும் இவர்கள், தங்கள் காரியம் கைகூடாதபோது சமூக ஊடகங்களின் மூலம் அவதூறுகளைப் பரப்ப முனைகின்றனர்.

ஆண்களே, உங்கள் தாய், மனைவி, சகோதரிகளும் பெண் என்பதை கருத்திற்கொண்டு பெண்களை பெண்களாக நினைக்காவிட்டாலும் உங்களைப் போன்ற உணர்வுள்ள சாதாரண மனிதர் என்றேனும் மதியுங்கள். தனிமையில் வாழும் பெண்ணின் மீது அவதூறான கண்ணோட்டத்தைக் கலைந்து, அவள் வாழ்வதற்கான பாதுகாப்புச் சூழலை என்றைக்கு சமூகம் அமைத்துக் கொடுக்கின்றதோ அன்றுதான் பெண்களுக்கான சுதந்திரம் மேலோங்கும்.

-ப. கணகேஸ்வரன் (கேஜி)

 

You must be logged in to post a comment Login