Articles

சமூகம் ஒரு பார்வை!

By  | 

பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய கட்டமைப்புதான்  சமூகம். அவ்வாறான சமூகத்தில் உள்ளவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது. எமக்கு ஏதேனும் ஒரு பிரச்சினையென்றால், முதலில் முன்வந்து உதவுபவர்கள், சமூகமாக நாம் நினைக்கும் அக்கம்பக்கத்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதற்காகவே ஊரோடு ஒன்றித்துப்போக வேண்டும் என்பார்கள்.

வீடுகளில் நிகழும் மங்களகர நிகழ்வுகளானாலும் சரி, துக்க நிகழ்வுகளானாலும் சரி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களே எமக்கு உறவினர்களாக மாறிவிடுகின்றனர்.

இவ்வாறு சமூகம் எனப்படும் அக்கம்பக்கத்தினர் எமது வாழ்க்கையோடு ஒன்றித்துப் போயிருக்கின்றனர். சாதி, மதம், இனம் என்று பார்க்காமல், அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதையே நாம் சமூகம் என்று வரையறுக்கின்றோம்.

எந்த ஒரு மனிதனுமே பிறக்கும்போது நல்லவனாகத்தான் பிறக்கின்றான். அவனை நல்லவனாக வளரவிடுவது அல்லது தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது என்பதில் அவன் வாழும் சமூகமே பெரும்பங்கு வகிக்கின்றது.

ஒரு மனிதனுக்கு சமூகம் எப்படி உதவுகிறதோ, அதே போல் பல பேரின் வாழ்க்கையை படுகுழியிலும் தள்ளியிருக்கின்றது.

அதற்கு பல விடயங்களை உதாரணமாக கொள்ளலாம்.

ஒரு மனிதன் தெரியாமல் ஒரு தவறை செய்துவிட்டு, பின் அதற்காக மனம் வருந்தி, அதை திருத்திக்கொள்ள நினைத்தாலும் கூட, இந்த சமுதாயம் அவனை பார்க்கும் விதமும், ஒவ்வொருவரின் ஜாடை பேச்சும் அவனை இன்னும் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.

மனிதன் கடவுளுக்கு பயப்படுகிறானோ, இல்லையோ, நிச்சயம் சமூகத்துக்கு பயப்படுகிறான்.

‘உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது’ என்பதற்கிணங்க ஒரு விடயம் இலேசாக காதுக்கு எட்டிவிட்டால் போதும், அதை வைத்து ஒரு திரைக்கதையையே எழுதிவிடுவர்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க கொஞ்சம் காலதாமதமானால் போதும்… உடனே அவளுக்கு ஏதோ குறை இருக்கின்றது அல்லது பெண்ணின் நடத்தையில் பிழை இருக்கின்றது என்றெல்லாம் பொய்களை பரப்பிவிடுவர். இது அப்படியே தீயாய் பரவிவிடும்.

அதேபோல் திருமணமான ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்க சற்று தாமதமானாலும், உடனே அப்பெண்ணின் மீது வசைச்சொற்களை வீசி, மனதை காயப்படுத்திவிடுவர். இவ்வாறு பல விடயங்கள் உள்ளன.

சமூகத்தில் உள்ளவர்களின் ஏச்சு பேச்சுக்களை தாங்க முடியாமல், தற்கொலை செய்துகொண்டவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முதலில் சமூகமானது எமது வாழ்க்கையில் எந்த அளவுக்கு தலையீடு செய்யவேண்டும் என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

பொழுதுபோகாத காரணத்துக்காக தேவையற்ற விடயங்களை பேசித்திரியும் சமூகத்தினரைப் பார்த்து நாம் எதற்காக அஞ்சவேண்டும்.

நாம் நமது மனசாட்சிக்கு பயந்தால் மாத்திரமே போதும். முகத்துக்கு நேராக சிரித்துப் பேசிவிட்டு, முகத்துக்கு பின்னால் புறம் பேசும் சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒருமுறை சமூகத்தவர்களின் அவதூறு பேச்சுக்கு நாம் கலங்கி முடங்கிவிட்டோமேயானால், தொடர்ந்து எம்மை தூற்றுவதற்கு வகை தேடுவர். எனவே, முடியுமானவரை சமூகத்தின் தேவையற்ற வசைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்போம்.

எப்பொழுதும் தனிமனித சுதந்திரத்தில் சமூகத்தை தலையிட விடாமல் பார்த்துக்கொள்வோம்.

நல்லவற்றுக்காக மாத்திரம் சமூகத்துடன் ஒன்றித்துப்போவோம். ஏனெனில், ஒருவனை       தூக்கிவிடுவதும் சமூகம்தான், தள்ளிவிடுவதும் சமூகம்தான்.

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login