Articles

சவால் மிகுந்த நடுத்தர குடும்பங்கள்!

By  | 

பெரிய செல்வந்த குடும்பமாகவோ அல்லது மிகவும் வறிய குடும்பமாகவோ கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நடுத்தர குடும்பத்தை வழிநடத்திக்கொண்டு செல்வதென்பது மிகவும் சிரமத்துக்குரியது. பணக்காரன் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வீணாக செலவழிப்பான். மிகவும் வறியவன் பணமே இல்லாத நிலையில் அமைதியாக இருப்பான். ஆனால், கையில் கொஞ்சப் பணத்தை வைத்துக்கொண்டு இந்த நடுத்தர குடும்பத்தினர் படும்பாடு இருக்கின்றதே… அப்பப்பா…! சொல்லி முடியாது. மேலேயும் அல்லாமல் கீழேயும் இல்லாமல் தத்தளிப்பான ஒரு வாழ்க்கை, அவர்களுடையது.

சாதாரணமாக ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால், அதில் ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அந்தக் குடும்பத்துக்கான தேவைகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை எம்மால் நிச்சயம் உணரமுடியும்.

கல்விச்செலவு, உணவுச்செலவு மற்றும் ஏனைய செலவுகள் என எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது.

வீட்டில் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத ஒவ்வொரு தேவைகள். அதை எவ்வாறு நிறைவேற்றி வைப்பதென்ற தவிப்பு குடும்பத்தின் தலைவனுக்கும் தலைவிக்கும் அதிகம் இருக்கும்.

ஒருசில பிள்ளைகள் பெற்றோரிடம் தன் தேவையைக் கூறி, மறுநாளே அது நிறைவேறவேண்டும் என்று அடம்பிடிப்பர்.

ஒரு தேவையை தட்டுத்தடுமாறி பூர்த்தி செய்துவிட்டு, பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தேவை வந்து மூச்சையடைக்கிறது.

நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகளின் சிறிய ஆசைகள் கூட அவர்களுக்கு எட்டாக்கனியாக மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொள்ள வேண்டியதாக காணப்படுகிறது.

இதற்கிடையில் அடுத்தடுத்து குடும்ப விசேஷங்கள், மரணங்கள் என செலவுக்கு குறைவிருக்காது.

மாத சம்பளத்தை பெற்றவுடன் அதை இந்த இந்த தேவைக்கென பிரித்துவிட்டுப் பார்த்தால், இன்னும் மேலதிகமாக பணம் தேவைப்படுமே தவிர, ஒரு நாளும் சேமிப்பதற்கு மிஞ்சாது. அப்போது தோன்றும், பணம் என்ற ஒன்று ஏன் படைக்கப்பட்டதென்று.

குடும்பம் என்ற படகு நீரில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத் தலைவனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எப்படியாவது சம்பாதித்து அதை செய்துவிடவேண்டும், இதைச் செய்துவிட வேண்டும் என திட்டம் போட்டாலும் ஓர் அடி முன்னெடுத்து வைக்கும்போதே பத்தடி சறுக்கிவிடுகிறது. இதுதான் இன்றைய நடுத்தர குடும்பம் ஒவ்வொன்றினதும் நிலை.

அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்யவேண்டுமென்கிற ஆசை மனதில் இருந்தாலும், அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.

ஆனால், ஒரு விடயத்தை கூறியே ஆகவேண்டும். என்னதான் நடுத்தர குடும்பத்தினருக்கு பணக்கஷ்டம், பொருளாதாரத்தில் பின்னடைவு காணப்பட்டாலும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கிடையே ஒருவித ஒற்றுமையையும் பகிர்தலையும் காணக்கூடியதாக இருக்கிறது. கஷ்டமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, அவர்களுக்குள் பகிர்ந்து வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பகிர்வு என்ற ஒன்று அவர்களிடம் அதிகம் காணப்படுகிறது என்றால், அது நிச்சயம் உண்மைதான். இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்தலை இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கிடைக்கும் வருமானத்தில் மகனின் படிப்புச் செலவு, மனைவியின் மருத்துவச் செலவு, மகளின் திருமணச் செலவு, வீட்டுச் செலவு, ஏனைய செலவுகள் என சமாளிக்கக் கடினமாக இருந்தாலும்கூட, இன்றைய ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரும் இவற்றை சமாளித்து, தமது வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்கள் என்றால் மிகவும் ஆச்சரியமே.

நமது சூழலில் பெரும்பாலான குடும்பங்கள், நடுத்தரமானவையே. அந்த ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திலும் சவால்களை வெற்றியாக்கி, துன்பங்களை தூசியாக்கி வாழும் முறையை காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் பாராட்டுதலுக்குரியதே.

-து.சிந்துஜா

 

 

 

 

 

 

6

You must be logged in to post a comment Login