Articles

“சிக்கித் தவித்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்….” ஒரு குடும்பத்தலைவியின் பகிர்வுகள்

By  | 

வேலை வேலை என தொழில் தேடலையே கருத்தாய் கொண்டு சுற்றி சுழல்பவர்களுக்கு மத்தியில், அதே மனநிலையோடு நாட்களை நகர்த்திவரும் நடுத்தர வயதான  குடும்பத்தலைவி ஒருவரின் ஒளிவுமறைவற்ற சில நிமிட பகிர்வுகளை கேளுங்கள்…

“என்றைக்கு கொரோனா தலைகாட்டியதோ, அத்தோடு ஏழு வருடங்களாக நான் செய்துவந்த வேலை பறிபோனது. கொழும்பு, கோட்டை கடைத்தெருவில் கூலித் தொழில் செய்துவந்த என் கணவரும், சிறிது நாட்களாக வேலையை இழந்து வீட்டில் இருந்த நிலையில், தற்போதுதான் மாத சம்பளத்துக்கு வேலையொன்று கிடைத்து, போய் வருகிறார்.

நானும் சில நாட்கள் வேலையின்றி வீட்டோடுதான் இருந்தேன். முன்பு நான் உதவியாளராக வேலை பார்த்த வெளிநாட்டு நிறுவனத்தின் எனது மேலதிகாரி, கொரோனா நெருக்கடி நிலைமை சரியானதும் திரும்ப என்னை வேலைக்கு அழைப்பதாக சொல்லித்தான் என்னை இடைநிறுத்தினார். ஆனால், இன்னமும் நிலைமை மாறவில்லை.

அந்த வேலை திரும்ப கிடைக்கும் வரை எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டில் வேலையின்றி இருப்பது?

யார், யாரிடமோ கதைத்து, வேண்டி எனக்கொரு வேலையை தேடிக்கொண்டேன். தனியார் நிறுவனமொன்றில் தேநீர் ஊற்றும் வேலையது.

காலையில் 7 மணிக்கு வீட்டை விட்டு சென்றால், இரவு 9 மணியாகும் திரும்பிவர. நானும் என் கணவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், என் சின்ன மகளையும்  மகனையும் எனது அம்மாவின் வீட்டில் விட்டுவிட்டு, வேலை முடிந்து வரும்போது, அம்மாவின் வீட்டுக்கு சென்று, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு சென்று சேரும்போது இரவு 10 மணியும் ஆகிவிடும்.

வீட்டுக்கு சென்றதும் இரவு சாப்பாடு சமைக்க முடியாதபடி, வேலை களைப்பு என்னை சோர்ந்துபோகச் செய்துவிடும். அதன் பிறகு எப்படி சமைப்பது?

நாங்கள் வீட்டை அடையும் சிறிது நேரத்திலேயே என் கணவரும் வந்துவிடுவார். அவர் எங்களுக்கான இரவுச் சாப்பாட்டை ஹோட்டலில் வாங்கிவர, அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவோம்.

ஒரு நாளைக்கு காலை சாப்பாடு மட்டுமே நான் செய்தாக வேண்டும் என்பதால் செலவு குறைவு என்றாகிவிடாது…. பகல் மற்றும் இரவு உணவை ஹோட்டல்களில் வாங்குவதால் அதற்கு செய்யும் செலவு என்னவோ அதிகம்தான்.

மாதத்துக்கு நாங்கள் சாப்பிடும் ஹோட்டல் சாப்பாட்டின் அளவையும், அதற்கு செலவழிப்பதையும் பற்றி யோசிக்கும்போது அதன் அபாய நிலையை உணர்ந்தாலும், நாங்கள் அயராமல் உழைக்கும் நேரத்தையும் களைப்பையும் எண்ணிப் பார்க்கிறபோது, செலவை பற்றியெல்லாம் யோசிக்க தோன்றவில்லை.

எனக்கும் கணவருக்கும் இப்போதைய ஒரே ஆறுதல் எங்களுக்கு வந்து சேரும் மாத சம்பளம் மட்டும்தான்.

சம்பளப்பணம் எவ்வளவு முக்கியம் என்பது வேலையின்றி தவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.

எத்தனையோ பேர் இந்த கொரோனா காலத்தில் தொழிலின்றி தவிப்பதை அறிகையில், நானும் அதற்குள் சிக்கித் தவித்த சில நாள் அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

எப்படி ஆண்களுக்கு தொழில் புருஷ லட்சணமோ, அதேபோல் பெண்களுக்கும் அதுவே லட்சணம்!

எப்போதும் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் நானும் கணவரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் பிள்ளைகளோடு ஒன்றாய் வீட்டில் இருக்கிறோம்.

வாரத்தில் அந்த ஒருநாள் வீட்டில் கோழி இறைச்சி கறி, இரண்டு, மூன்று மரக்கறி வகைகள் சமைத்து திருப்தியாக சாப்பிடுவோம்.

அதுபோக, வீடு, வாசல் பெருக்கி, சுத்தம் செய்வதுண்டு. என்னுடைய நாலரை வயது மகளை வளர்ப்பது, உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் என் மூத்த மகனின் படிப்பு மற்றும் ஏனைய விடயங்களில் அக்கறை எடுத்துக்கொள்வது…. இத்தனையையும் நான் வேலைக்கும் சென்றுகொண்டே கவனித்து வருகிறேன்.

இவற்றுக்கு மத்தியில் என் சொந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நான் எடுக்கும் நேரம் மிக மிக குறைவுதான்.

எப்போதாவது சக பெண் ஊழியர், வேலைத்தளத்துக்கு விற்பனைக்காக சில துணி வகைகளை கொண்டுவந்து காட்டும்போது, விரும்பி ஓரிரண்டை எடுப்பேன். அதற்கும் நான்கைந்து தவணையாகவே பணம் செலுத்துவேன்.

வெளியே கூலி கொடுத்து எனக்கான சல்வார், கவுன், டொப் ப்ளவுஸ்களை தைத்துக்கொள்வேன்.

திருமணத்துக்கு முன் என் உறவுக்கார பெண்ணொருவரிடம் தையல் பயின்றேன். ஆனால், அதையும் திருப்தியாக கற்று முடிக்கவில்லை.

திருமணம், குடும்பம் என்றானதும் வேறு விதமாக எனது பாதை அமைந்துவிட்டது. நான் மட்டும் தையலில் கொஞ்சம் அதிகமாக சிரத்தை எடுத்து பயின்றிருந்தால், இன்றைக்கு அந்த தையல் தொழில் எனக்கு காலத்துக்கும் உதவியாக இருந்திருக்கும்…

என் மாமா ஒருவர் சொல்வார்….

“தையலுக்கு எதுக்காக க்ளாஸ் போறீங்க? நீங்க உடுத்துற ஒரு டிரஸ்ஸை எடுத்து அதில் இருக்கிற தையலை பிரிச்சிட்டு, அந்த துணிய அளவா கொண்டு, புது துணிய அதே அளவில அளந்து, வெட்டி, தைச்சா தையல் வந்துடப்போகுது” என்று.

இப்போதும் கூட வீட்டில் ஏதோ பெயருக்குத்தான் தையல் இயந்திரம் இருக்கிறது. ஆனால், அதில் நான் தைப்பதில்லை. தைக்க எனக்கு நேரமும் இல்லை.

அது மட்டுமல்ல, மற்ற பெண்களை போல நானும் முன்னதாகவே மேக்கப் போடுவதில் விருப்பம் கொண்டிருந்ததால், ஒன்றிரண்டு கொஸ்மெடிக் பொருட்களை தேடி வாங்கி வைத்திருக்கிறேன்.

திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு செல்லும்போது எனக்கு நானே எளிமையாக மேக்கப் போட்டுக்கொள்வது வழக்கம்.

அழகுக்கலையில் தேர்ந்த யாரையும் தேடிச் சென்று மேக்கப் போடுவதில் எனக்கு திருப்தியில்லை. பதிலாக, நானே மேக்கப் போட்டுக்கொண்டால் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

சமீபத்தில் என் மகளின் பிறந்த நாளன்று அவளுக்கு நான் செய்த க்யூட் மேக்கப்பை பார்த்தவர்கள் கூட “மேக்கப் சூப்பரா இருக்கு… நீங்க பியூட்டி கல்சர் படிச்சீங்களா?” என கேட்டனர்.

அப்போது நான் கவலைப்பட்டேன்…. ‘அழகுக்கலையையாவது கற்றிருந்திருக்கலாமே’ என்று.

எதை எதையோ செய்யவேண்டும், படிக்கவேண்டும் என மனதுக்குள் என்னென்னவோ ஆசைகள் வந்துபோனாலும், அவற்றில் ஒன்றை கூட செயற்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் இருக்கிறேன்.

கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ………..!

இந்நாட்களில் என் மகனுக்கு ஒன்லைன் வகுப்புகள் நடப்பதால் அவனுக்கென ஒரு கைப்பேசியை கொடுத்திருக்கிறோம்.

அவன் மட்டும் நன்றாக படித்து, ஒரு நல்ல வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டான் என்றால், எங்களுக்கு பக்கபலமாக இருப்பான். இப்போதுள்ள சுமை கொஞ்சமேனும் குறையும் அல்லவா!

பார்ப்போம்! நல்லதே நடக்கும் என நம்புகிறேன்!!” என்பதாக அவரிடம் கதை கேட்டு முடிந்தது.

– உருத்திரா

 

You must be logged in to post a comment Login