சிங்கப்பெண்ணே!

By  | 

பெண் சிசு பிறந்துவிட்டாலே, அவளை அமைதியாகவும், மற்றவர்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் ஒரு ஜீவனாகவுமே வளர்க்கப் பார்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் ஒரு பெண்பிள்ளை, எவ்வாறு அதன் எதிர்காலத்தில் சமுதாயத்தை எதிர்கொள்ளப்போகிறது என யாருமே யோசிப்பதில்லை.

பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நிச்சயம் அமைதியும் தன்னடக்கமும்  வேண்டும் தான். அதற்காக எந்தப் பெண்பிள்ளையையும் கோழையாக மட்டும் வளர்த்துவிடக்கூடாது.

குடும்பத்தில் அல்லது வீதியில் பிறர் என்ன செய்தாலும் அவர்களுக்கெதிராக எதையும் செய்துவிடக்கூடாது. ‘எது நடந்தாலும் தலை குனிந்து வந்துவிடவேண்டும். ஏனென்றால், நீ ஒரு பெண். எம்மை சீண்டிப் பார்க்கும் நபர்களிடம் நாம் சீறினால் பிரச்சினை நமக்குத்தான்’ என்று சொல்லிச் சொல்லி பெண்பிள்ளைகளின் தைரியத்தை மண்ணோடு மண்ணாக்கி புதைத்துவிடுகின்றனர்.

கூறப்போனால், வெகுசில பெண்களே தைரியத்திலும் துணிச்சலிலும் சிறந்து விளங்குகின்றனர். ஏனையவர்களிடம் அந்த தைரியம் காணப்படுகிறது. ஆனாலும், உள்ளுக்குள் புதையுண்டு கிடக்கிறது.

உண்மையில், பெண்பிள்ளைகளை தைரியசாலிகளாக வளர்க்கவேண்டும். சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு உணவுடன் துணிச்சலையும் சேர்த்து ஊட்டி வளர்க்கவேண்டும்.  இன்று பெரும்பாலான பெண்களின் தற்கொலைகளுக்கும், கணவனால் கொலை செய்யப்படுவதற்கும், அந்த பெண்களின் தைரியமின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.

கணவன் இல்லாவிட்டால் சமூகத்தில் வாழவே முடியாது… இந்த சமூகம் என்னை எப்படிப் பார்க்குமோ என்ற பயம்தான் காரணம். அது தேவையற்ற பயம். எதற்கும் பயந்து தற்கொலை செய்துகொள்வதும் தன்னைத்தானே நொந்துகொள்வதும் மிகவும் கோழைத்தனமான செயல்.

நாம் மற்றவர்களுக்காக வாழ்வதை விட நமக்காக வாழவேண்டும். அதுவும் தைரியமாக எதையும் சமாளிக்கவேண்டும்.

பெண் என்ற ஒரு காரணத்துக்காக மற்றவர்கள் என்ன செய்தாலும், அதை பொறுத்துப் போகவேண்டிய அவசியம் இல்லை. பெண் பூவாகவும் இருப்பாள், புயலாகவும் மாறுவாள் என்று அனைவரும் தெரிந்துகொள்ளட்டுமே!

பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என கட்டளையிட்டது யார்? நம் சமூகம்தானே. அப்படியெனில், பெண்ணானவள் ஏதேனும் பிரச்சினையில் அகப்பட்டால் அந்த இடத்தில் யார் அவளுக்கு உதவி செய்வார்? அவளது தைரியமும் துணிச்சலும்தான். எனவே, பெண்பிள்ளைகளுக்கு தைரியத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.

சிறுவயதிலிருந்தே எந்தவொரு விடயத்திலும் ‘அதைச் செய்யவேண்டாம், இதைச் செய்யவேண்டாம்’ என ஒரு வட்டத்துக்குள்ளேயே வளர்க்கப்படும் பெண்கள் வருங்காலத்தில் தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் நிலை கூட வரலாம். இந்த நிலையே அவளது வாழ்வின் வெற்றிப் பாதைக்குச் செல்ல பெரும் தடையாக அமையலாம். எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்ட நம் உலகில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் மட்டும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அது ஏன் என்றுதான் புரியவில்லை.

எத்தனையோ கனவுகளையும் இலட்சியங்களையும் மனதில் சுமந்துகொண்டு அதை வெளியில் கூறமுடியாமல் சமையலறையே கதி எனக் கிடக்கும் குடும்பப் பெண்கள் எத்தனை பேர்!

தனக்கென ஓர் அடையாளம் இருக்கவேண்டும்  என ஆசைப்பட்டு, பின் தனது முகவரியையே தொலைத்த பெண்கள் எத்தனை பேர்!

அனைத்து தடைகளையும்  முள்வேலிகளையும் தகர்த்து உடைத்தெறிந்து வெளியே வந்தால் மட்டுமே தனக்கான இலட்சியத்தை பெண்களால் அடையமுடியும்.

போராடு பெண்ணே… உன் இலட்சியம் நிறைவேறும் வரையில் துணிச்சலோடு!

பெண்ணே!

நன்றாகக் கேட்டுக்கொள்.

நீ அடுப்படியில் கிடந்து சாகப் பிறக்கவில்லை.

அண்டவெளிக்கும் சென்று சாதனை படைக்க பிறந்திருக்கிறாய்!

-து. சிந்துஜா

You must be logged in to post a comment Login