Articles

சிரிங்க… சிரிப்பை அள்ளிக் கொடுங்க!

By  | 

சிரிப்புஅழகானதொரு விடயம். மற்றவர்களை எம்பால் இழுக்கும் ஓர் ஆயுதமும் கூட. சில வேளைகளில் நாம் சிரிப்பதனால் மற்றவர்களும் எம்மோடு சேர்ந்து சிரிக்கும் தருவாயும் ஏற்படக்கூடும். பொன் நகையைக் காட்டிலும் புன்னகையே ஒரு மனிதனை அழகாக்குகிறது.

வாழ்க்கையில் கஷ்டங்கள், சோதனைகள் வருவது இயல்புதான். அதற்காக எந்நேரமும் அழுதவண்ணமும் முகத்தை சோகத்துடனும் வைத்துக்கொண்டால், வந்த கஷ்டம் எம்மை விட்டு நீங்கிவிடுமா என்ன? நாம்தான் அதை வென்றுகாட்ட வேண்டும். அதை புன்னகையுடன் எதிர்கொள்ளலாமே. வரும் பிரச்சினைகளைப் பார்த்து, பயந்து ஓடி ஒளிந்தால், நாம் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்படுகிறோம். பிரச்சினைகளை புன்னகையுடன் சமாளிக்கப் பழகுவோம். அப்போது நம்மை நெருங்கும் கஷ்டங்களே கூடஇவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான்என்று ஓடி மறைந்துவிடும்.

சிரிக்காதவர்களைசிடுமூஞ்சிஎன்றுதான் எமது சமூகம் பெரும்பாலும் அழைக்கிறது. தொழிலில் ஏதேனும் இடறல் வந்தால் போதும், உடனே இறுக்கமான முகத்துடன் அருகில் இருப்பவர்களோடு சரியாக முகங்கொடுத்துக்கூட பேசாமல், எரிந்து விழும் நிலைக்கு சென்றுவிடுவர், சிலர். அதற்கு மாறாக, நாம் புன்னகையுடன் அனைத்தையும் கடந்து சென்றால், அந்த இடத்திலேயே நல்ல நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். எங்கு சிரிப்பு இருக்கின்றதோ, அங்கு புத்துணர்ச்சியும் மன அமைதியும் நிச்சயம் காணப்படும்.

சிறு பிள்ளைகளைக் கண்டவுடன் அக்குழந்தை சிரித்தால் நாமும் சேர்ந்து சிரித்து, அதை ரசிக்கிறோம் அல்லவா? அதேபோல் வளர்ந்த நாமும் நன்றாக மனம் திறந்து வாய்விட்டு சிரித்தால், எவ்வளவு அழகாக இருப்போம்!

சிரிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

சிரிப்பதற்கு நாம் என்ன பணமா கொடுக்கவேண்டும்? நன்றாக சிரித்து மகிழ்ந்து வாழ்க்கையை இரசித்து வாழ பழகிக்கொள்வோம். சோகமாக இருக்கத் தெரிந்த எமக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தக்க வைத்துக்கொள்ள தெரியவில்லை.

எம்மால் முடியுமான வரை நாம் இருக்கும் இடத்தையும் சூழலையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம்.

ஒரு சிறு புன்னகை ஒருவரின் நாளையே சிறப்பாக மாற்ற முடியுமானால், அந்த புன்னகையை உதிர்ப்பதில் தவறேதும் இல்லையே.

சில பேர் இருக்கின்றனர்காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் மற்றவர்களிடம்சிடு சிடுஎன இருப்பர். அப்படிப்பட்டவர்களுக்கு புன்னகைக்க தெரியாமலில்லை. புன்னகைக்க விருப்பமில்லை. எப்பொழுதும் முகத்தில் ஒரு மேட்டிமைத்தன்மை இருக்கவேண்டும்மற்றவர்களைப் பார்த்து புன்னகைத்தால் நமது தகுதி குறைந்துவிடும் என யோசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியானவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சிரிப்பது மற்றவர்களுக்கு அல்லமுதலில் சிரிப்பவருக்கே நல்லது.

அழுகை, கோபம், வியப்பு என்பவற்றைப் போல் சிரிப்பும் ஓர் உணர்ச்சி. அழுகை, கோபத்தை கூட எந்நேரமும் எம்மால் வெளிப்படுத்த முடியாது. ஆனால், சிரிப்பை எப்பொழுதும் முகத்தில் தக்கவைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் புன்னகையுடன் இருப்பவர்களை கலையான முகத்தோற்றம் உடையவர்கள் என்று வர்ணிக்கின்றோம். ஆனால், அதையே நாம் கடைபிடிக்க தவறிவிடுகின்றோம்.

உலகத்திலேயே விலைமதிக்க முடியாத நகை புன்னகைதான். அதை இலவசமாக நாம் பெற்றுள்ளோம். அதை பரிமாறிக்கொள்ள பழகுவோம்.

நாளைய நாள் என்பது நிச்சயமற்றதுதான். இன்றைய நாளில் சிரித்து மகிழ்ந்து உடன் இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முயற்சிப்போம்.

நாம் வெறுமனே அழுவதற்கு மாத்திரம் பிறக்கவில்லை. பிறக்கும்போது அழுகிறோம், இறக்கும்போது சுற்றியிருப்பவர்கள் எமக்காக அழுவார்கள். இடையில் வாழும் கொஞ்ச நாளிலாவது சிரிப்பை மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுப்போம்.

குறிப்பாக, துன்பம் வரும் வேளைகளில் புன்னகைக்க தவறாதீர்கள்!

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login