சிறுவர்களை பாதுகாக்கும் பிரதான சட்டங்கள்

By  | 

அண்மைய காலங்களில் எமது நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பாலியல் துன்புறுத்தல், வேலைக்கு அமர்த்தல் போன்ற சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு துஷ்பிரயோகங்களை தடுப்பதற்குமான எமது நாட்டில் இருக்கக்கூடிய சட்ட மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளை அறிந்துகொள்வது அவசியம். அது குறித்து பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.

சட்டத்தின் பார்வையில் சிறுவர்கள் என்பவர்கள் யார்?

‘சிறுவர்கள்’ எனும் பதமானது ஆண், பெண் இருபாலரையும் உள்ளடக்கும். ஆனால், அவர்களின் வயதெல்லை தொடர்பில் தேசிய, சர்வதேச மற்றும் பிராந்திய சட்டங்களில் வெவ்வேறான சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அதாவது குறித்த சட்டத்தின் நோக்க அடிப்படையில் வயதெல்லை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம், சர்வதேச சிறுவர் சமவாயத்தின்படி, (உறுப்புரை 1) 18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் ஆவர். ஆனால், இலங்கையில் இருக்கக்கூடிய சட்டங்களில் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கங்களின் அடிப்படையில் (உதாரணம்: குற்றவியல், குடியியல், ஆள்சார் மற்றும் தொழிற்சட்டங்கள்) வெவ்வேறு வயதெல்லை வரையறுக்கப்படுகின்றன.

இருப்பினும், 1998ஆம் ஆண்டின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் பிரதானமானது. இச்சட்டத்தின் கீழ் சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதுக்கு கீழானோர் என்பதுடன் அவர்கள் மீது புரியப்படும் குற்றச் செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகமாக அமையும். எனினும், அதனுடன் இச்சட்டத்தின் பிரிவு 39இன் கீழ் குறிப்பிடப்படும் சட்டங்களின் கீழான ஏற்பாட்டினையும் (உதாரணம்: பெண்கள், இளையோர் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சட்டம்) கருத்திற்கொள்ள வேண்டும்.

இதன்போது சிறுவர்களின் வயதெல்லை தொடர்பில் வெளிப்படையான முரண்பாடு காணப்படுவதாக உணரக்கூடும். அதாவது 16 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளையினை தொழிலுக்கு உட்படுத்தல் குற்றமாகாதா? இங்கு கவனிக்கக்கூடிய விடயம் யாதெனில், பிரிவு 39இன் கீழ் குறிப்பிடப்படும் ஒரு சட்டத்தின் பிரகாரம், குறிப்பிட்ட வயதெல்லையினர் (16) வேலைக்கு உட்படுத்தப்படலாம். ஆனால், அதன்போது ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை போன்ற கொடூர செயல்களுக்கு உள்ளாவார்கள் எனில், அது இச்சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகமாக கருதப்படும்.

சிறுவர்களை, அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை தடுப்பதற்குமான சட்ட ஏற்பாடுகள்…

இலங்கையில் இதற்கென பின்வரும் பிரதான சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

இவற்றில் பிரதானமானது அரசியலமைப்பு சட்டமாகும் 1978 அத்தியாயம் ஐஐஐ உறுப்புரை 12(1) சமத்துவத்துக்கான உரிமையினையும் பாரபட்சமின்மைக்கான உரிமையினையும் குறிப்பிடுகிறது. இது சிறுவர்களுக்கும் ஏற்புடையதாகும்.

உறுப்புரை 12 (4)இன்படி, சிறுவர்கள் நலன் தொடர்பில் விசேட சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் உருவாக்க முடியும். அத்துடன் உறுப்புரை 14, 19 மற்றும் 37 ஆகியன சர்வதேச சிறுவர் சமவாயம் குறிப்பிடும் உரிமைகளை உத்தரவாதம் செய்கிறது. அரசியலமைப்புடன் பாராளுமன்றத்தினால் காலத்துக்கு காலம் இயற்றப்பட்ட நியதிச்சட்டங்களும் காணப்படுகிறது.

பிள்ளைகளுக்கு எதிராக புரியப்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்குமான குற்றவியல் சட்டங்களும் காணப்படுகின்றன. உதாரணம்: தண்டனை சட்டக்கோவை (1833), குற்றவியல் நடபடிக்கோவை.

இதில் தண்டனை சட்டக்கோவை பிள்ளைகளை பாலியல் வன்புணர்தல், துஷ்பிரயோகம் மற்றும் தொல்லை கொடுத்தல், பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும், சிறுவர்களை அடித்து துன்புறுத்தல், உணவு கொடுக்காமல் பட்னி போடுதல் போன்ற குடும்பங்களில் ஏற்படும் வன்முறைகளை தடுப்பது தொடர்பில் 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் காணப்படுகிறது. இதன் கீழ் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பது தொடர்பில் இலங்கையில் கட்டாய கல்விச்சட்டமும் அதன் கீழான ஒழுங்குவிதிகளும் காணப்படுகின்றன.

இதன்படி 1998ஆம் ஆண்டின் கட்டாய கல்விச் சட்டம் காணப்படுவதுடன், அதன் 2016ஆம் ஆண்டின் 1963ஃ30 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி, பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லவேண்டிய வயதெல்லை 16ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே 16 வயதுடைய ஒரு பிள்ளையினை தொழிலுக்கு அமர்த்துவது பின்வரும் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள், இளையோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கான சட்டம் (திருத்தப்பட்டவாறாக)
  • 1942ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டம் (திருத்தப்பட்டவாறாக)
  • 1954ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடைகள் மற்றும் காரியாலய ஊழியர்கள் சட்டம். (திருத்தப்பட்டவாறாக)

இவற்றோடு மிகப் பிரதானமாக 1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை சட்டம் காணப்படுகிறது. இதன் கீழான தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையானது சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும், அத்தகைய துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்குமாக காணப்படுகின்றது.

இலங்கையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை போலவே சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற பொறிமுறைகளும் செயற்பட்டு வருகின்றன. உதாரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழு.

மேலும், இவற்றுடன் இலங்கையானது பல்வேறு சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயங்களை கைச்சாத்திட்டும் ஏற்றும் அங்கீகரித்தும் உள்ளது. (உதாரணம், சர்வதேச சிறுவர் உரிமைகள் சமவாயம், மனித உரிமைகள் பிரகடனம்) அதன் பிரகாரம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை கொண்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக எமது நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பல்வேறுபட்ட கொள்கைகள், திட்டங்கள் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்களின்படி, இலங்கையில் சிறுவர்களை, அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை தடுப்பதற்குமாக காணப்படும் சட்ட ஏற்பாடுகள் போதுமானதாகவே காணப்படுகின்றன.

எனவே, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலே கவனம் செலுத்தவேண்டும்.

மேலும், நாட்டில் எதிர்வரும் காலங்களில் பிள்ளைகளை தொழிலுக்கு உட்படுத்துவதற்கான வயதெல்லையை 18ஆக அதிகரிப்பதற்கு ஆலோசித்தாலும், அது பல்வேறு நடைமுறை சிக்கல்களை தோற்றுவிப்பதாக அமையலாம். காரணம், எமது நாட்டில் 16 வயதில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்ததன் பின்னராக தொடர்ந்தும் 18 வயது வரை அனைவரும் கல்வியை தொடர்வதற்கான சாத்தியப்பாடு இருப்பதில்லை.

ஆகவே, சட்டம் ஒரு புறமிருக்க, குறித்த பிள்ளையின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூகத்தினர் பிள்ளையின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் விழிப்புணர்வுடன் கடப்பாடு கொண்டிருத்தல் அவசியமே.

You must be logged in to post a comment Login