Articles

சீ.முத்துசாமியின் மலைக்காடு

By  | 

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பற்றிய தேடுதலில் வாசிக்கக் கிடைத்த நாவலே மலைக்காடு. மலைக்காடு நாவல் என் மண் சார்ந்த மலையக வாழ்வியலுக்கும் நெருக்கமான தொடர்பிருந்த நாவல் என்பதால் இன்னும் தீவிரமான ஆர்வத்தில் வாசிக்கக் கூடியதாக இருந்தது.

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி எனும் குக்கிராமத்திலிருந்து நாகப்பட்டினம் வந்து, கப்பலேறி மலாயா மண்ணில், கடார சோழன் காலடித்தடம் பதித்த கடார மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் அமைந்துள்ள பாலிங்க எனும் அழகிய மலைகள் சூழ்ந்த சிற்றூர், பினாங்கு தீவுக்கு சற்றே தொலைவில் ,கடாரத்தில் மத்தியில் அமைந்துள்ள புக்கின் செம்பிலான் தோட்டத்தில் குடியேறிய மாரிமுத்து என்னும் மாரி அவர் கைப்பிடித்து வந்த உண்ணாமலை எனும் பதினைந்து வயது சிறுவனுடன் வாழ்ந்து மடிந்த மண்ணில் வெள்ளைக்கார துரைகளின்  அடக்கு முறைகளுக்கு எதிராக உண்ணாமலையின் பேரனான குட்டி மற்றும் அவனின் நண்பர்கள் மாக்சிச ரீதியாக போராடும் நிகழ்தளமே மலைக்காடு.

வரலாற்று நாவல் பாங்கில் அமைந்த மலைக்காடு நாவல் சம்பவங்களும் நிகழ்வுகளும் சில இடங்களில் வருடங்களை அத்தாட்சிப்படுத்தி குறிக்கப்பட்டதில் இருந்து இந்த நாவலை வாசிக்கவும் அதன் உண்மை தன்மை குறித்து அறியவும் கதை நிகழ் களத்தின் பின்புலத்தினை வரலாறு அறிய வேண்டிய தேவை வாசகனுக்கு இருந்தாலும் நாவல் பேசுகிற கரு மற்றும் அந்த மக்களின் வாழ்வியல் போராட்டங்களோடு நின்றுகொண்டு வாசிக்க முனைவதே சாலவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கித்தாக்காடு என்று சொல்லப்படும் இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் வாழும் செம்பிலான் தோட்டத்தில் மக்களுக்கு சுத்தமான நீர் கிடைக்காமல் இருக்க அந்த தோட்டத்து துரைக்கு சுத்தமான நீர் கொண்டு செல்வதை குட்டி உள்ளிட்ட இளைஞர் கூட்டம் மறித்து அதை செம்பிலான் தோட்டத்திற்கு கொண்டு வருகிறார்கள் இதுவரை காலமும் வெள்ளைக்கார தோட்ட துரைக்கு அடிமைப்பட்டிருந்த கூலிகளான தோட்டமக்கள் தனக்கெதிராக திரும்பி இருப்பதை எதிர்பாராது முகம் கொடுக்கும் துரை பொலிஸாரின்  உதவியில் அடக்க முயல்வதும் அதற்கு பின்னர் குட்டி மற்றும் போராட்டத்தில் முகம் கொடுத்த முக்கிய புள்ளிகளை இனங்கண்டு அடக்க, அழிக்க முயல்வதாக நாவல் நகர்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் செம்பிலான் தோட்டத்தின் காவலனாக இருக்கும்  குட்டி காணாமல் போகிறார் அவரை தேடுவதில் இருந்து நாவல் தான் குரலை ஆழப்பதிக்கிறது இதன்போது கதைநிகழும் காலத்திற்கு முன்பின் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் அந்தந்த கால கதாபாத்திரங்களின் வாழ்க்கை பற்றி பேசிச் செல்லும் நாவல் இறுதியில் குட்டி கிடைத்தானா? கிடைக்க வில்லையா? அவனையே நம்பி இருக்கக் கூடிய அவனுடைய தாய், காதலி மற்றும் தொழிற் சங்கத் தலைவர் உள்ளிட்ட தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு, புலம்பல்கள் கனவுகளோடும் மலைக்காடு நகர்ந்து முடிகிறது.

நாவலின் தர்மபுரி பள்ளம்பட்டியில் இருந்து மாரி மற்றும் மகன் ஊராருடன் வரும் கடல் வழி பயணம் மிகவும் உருக்கமாகவும் உயிரோட்டமாக  சொல்லப்பட்டிருக்கிறது அதன் பின் அவர்கள் காட்டு வழியாக செம்பிலான் தோட்டத்திற்கு  மாட்டு வண்டிகளில் பயணிக்கும் காட்சிகள் மிகவும் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த நாவலை அனுபவிக்கக் கூடிய கதை போக்கு வேறெங்கும் காணக்கிடைக்காமல் இருப்பது துரதிஷ்டவசம். காளி, கருப்பு குதிரை, கித்தாகாட்டு வர்ணனைகள் ,வேட்டைகாரனின் அடையாளப்படுத்தல் என்பன நாவலின் வாசிப்பிற்கு நல்லதொரு உணர்வை தந்தாலும். முழுமையான திருப்பிகரமான புனைவுக்கான வாசிப்பு அனுபவத்தை தரவில்லை.

நாவல் பெரும்பாலான இடங்களில் சிறப்பாக நகர முற்பட்டிருந்தாலும் ஆசிரியரின் கதை சொல்லும் முறை வாசிப்புணர்வை அவஸ்தையாக்கி விடுகிறது. ஒரு சம்பவத்தை சொல்ல வந்து அந்த சம்பவத்தில் வாசிப்பதை நிலைக்கச் செய்து சம்பவத்தோடு வாசிப்புணர்வு உச்சநிலைக்கு செல்லும் தருணத்தில் இன்னொரு சம்பவத்தை அல்லது பாத்திரத்தை விளக்கவோ அறிமுகப்படுத்தவோ முற்பட்டு அதை நீட்டிக்கொண்டே செல்லவதின் ஊடாக முதல் சொன்ன சம்பவத்தை மறக்கடிக்க செய்து விடுகிறார்.

இந்த நிலைமை நாவல் முழுதும் இருக்கிறது. உதாரணமாக குட்டி மற்றும் அவர்களின் நண்பர்கள் இரவோடு இரவாக துரை பங்களாவுக்கு சென்ற தண்ணீர் வண்டியை தோட்ட மக்களுக்கு கொண்டுவந்து கொடுக்கிறார்கள் அடுத்தநாள் ஊரே இருண்ட மயமாக அச்சத்திலும் பதைபதைப்பிலும் விழிபிதிங்கி காணப்படுகிறது. துரை பொலிஸார் மற்றும் யூனியன் தலைவர்கள் கூடியிருக்க மக்களுக்கு எதிராக மிக தீவிரமான அடக்கு முறைகளுக்கு பொலிஸார் தயாராகி இருக்கும் தருணத்தில் அடுத்தக்கட்டம் என்னவாகுமோ என்பதன் இசைவு மனதை வெறிந்து பிசைந்து கொண்டிருக்க. திடீர் என்று இன்னொரு சந்தர்ப்பத்தை அறிமுகப்படுத்தி விளக்க முற்படும் ஆசிரியர் முன்னர் சொன்ன சூழ்நிலையை மறக்கடிக்க செய்து விடுகிறார். மீண்டும் கலவரம் என்னவாகுமோ என்ற பதற்றம் துளியும் இல்லாமல் நிகழ்வு நிறைவடைந்து முடிந்து கதை இன்னொரு இடத்தை தொட்டிருக்கும்.

மேற்சொன்ன நிலை நாவலின் சம்பவத்திற்கு சம்பவம் நிகழ்ந்திருக்கும் இது வாசிக்கும் மனநிலையை ஒரே தளத்தில் நிற்கவிடாமல் சொல்லும் கதையின் மீது கரிசனை காட்டவிடாமல் முடிந்திருக்கும். மேலும் ஜெ.மோகனின் முன்னுரை நூலின் கனதியானது.

வி எம் ரமேஸ்,
பன்வில, கண்டி

You must be logged in to post a comment Login