Covid 19

சுகாதாரம் பேணலில் சிறுபிள்ளைத்தனம் ஏன்?

By  | 

கொவிட் வைரஸ் பரவல், தொற்று நோய், ஒட்சிசன் பற்றாக்குறை, உடல் உபாதைகள், மூச்சுத்திணறல், திடீர் மயக்கம், மரணம் என எந்த திசைக்கு திரும்பினாலும் நாம் அச்சுறுத்தப்படும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தன் கையே தனக்குதவி என்கிற வாக்கு மறைந்து நம் கையே நமக்கு அபாயம் என்கிற பீதி தற்போது உருவாகியுள்ளது.

நாம் நம் கையால் நம் வாயையோ கண்ணையோ மூக்கையோ கூட தீண்ட முடியாத அளவுக்கு கடுமையான சுகாதார பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கொவிட் 19 பழைய, புதிய வைரஸ்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு, சமூகத்தில் ஊடுருவி, மனித முகங்களை நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன.

எங்கு பார்த்தாலும் மனிதர்கள் முகக்கவசங்களுக்குள் முகங்களை மறைத்துக்கொண்டு கண்களினூடாக பயத்தை மட்டுமே காட்டிச் செல்கின்றனர்.

இது கொவிட் 19 எடுத்துள்ள மூன்றாவது அலை. இதற்கு முன் கடந்துபோன இரண்டு அலைகளின்போது கூட இல்லாத பேரச்சம் இம்முறை பலரை ஆட்கொண்டுள்ளது. காரணம், இந்த நாட்களில் வயது வேறுபாடின்றி நிலவும் மரணங்கள்.

சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என பலர் நிலைமையை சுதாரிப்பதற்குள் மரணித்துப் போகின்றனர்.

அங்கங்கே சிலர் வீதியில் நிற்க, நடக்கையிலேயே தடுமாறி கீழே விழுந்து மூச்சிழந்துபோகின்றனர்.

நம்மை சுற்றிலும் என்ன நடக்கிறது, ஏனிந்த அவலம் என துவண்டுபோயுள்ளனர், மக்கள். இன்னொரு பக்கம் நாடு முடக்கப்படுவதை முன்னதாக அறிந்து, வீட்டுக்குத் தேவையான பொருட்களை சன நெருக்கடிக்குள் புகுந்தேனும் பெற போராடுகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற குறைந்தபட்ச சுகாதார நடைமுறைகளையேனும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, பலரும் இந்த முறைகளை வெகு சில பொது இடங்களில் பின்பற்றுவதாக இருந்தாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே சவாலான விடயமாக இருக்கிறது.

பெரிய பெரிய வியாபார நிறுவனங்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் நிற்கக்கூடிய கவுன்டர்களில் இடைவெளி விட்டு நிற்கவேண்டிய  இடங்களை குறித்துக் காட்டும் விதமாக சம தூரங்களில் அடையாளங்கள் இடப்பட்டுள்ளன.

அவற்றை மக்கள் புரிந்து, அந்தந்த குறியீடுகளில் நிற்கும்போது பிறிதொருவரிலிருந்து உரிய இடைவெளியை கடைபிடிப்பதாக அவதானிக்க முடிகிறது.

எனினும், அந்த கவுன்டரிலிருந்து விலகி வெளியே வந்த பின்னர் மீண்டும் மற்றவர்களை அண்மித்தே நடக்கின்றனர், பயணம் செய்கின்றனர்.

அதிலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள இன்னும் சில வியாபார நிலையங்களில் குறிப்பாக, சந்தைகளில் இந்த நடைமுறைகளை பிரயோகிப்பதை காண முடியாதுள்ளது.

சாதாரண பெட்டிக்கடை தொடங்கி பல்பொருள்  விற்பனை நிலையங்கள் வரையிலும் மரக்கறி வாங்குவதற்கு, தேங்காய் வாங்குவதற்கு, எண்ணெய் வாங்குவதற்கு, மேலும் பொருட்களை தாமாக பார்த்து கொள்வனவு செய்வதற்கு என மக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற எவ்வித இடைவெளி குறியீடுகளும் இல்லை. அங்கெல்லாம் யாரும் சமூக இடைவெளி பார்த்து நிற்பதுமில்லை.

மாஸ்க் அணிவதே மாஸ் காட்டத்தானா?
இது இப்படியென்றால், முகக்கவசங்களை அணியும் சிலரது முகங்கள் அலட்சியத்தையும் மழுங்கிப்போன புத்தியையுமே வெளிக்காட்டுவதாய் உள்ளது.

– முகக்கவசத்தை சரியாக அணிந்திருந்தாலும், இடையிடையே கீழும் மேலுமாக இழுத்து அணிவர்.

– முகக்கவசத்தை வாய்க்கு மட்டுமே அணிவர்.

– முகக்கவசத்துக்கே நேர அவகாசம் கொடுப்பதாய் அணிவதும் அப்புறப்படுத்துவதுமாக இருப்பர்.

– முகக்கவசத்தை வாய்க்கும் இல்லாமல் மூக்குக்கும் இல்லாமல் தாடையை தாங்க போட்டிருப்பர்.

– முகக்கவசத்தை கையின் மணிக்கட்டில் மாட்டி ஊஞ்சல் போல் அசைத்து ~வெட்டி பந்தா| காட்டுவர்.

– முகக்கவசத்தை காற்சட்டை பொக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு உலாவித் திரிவர்.

இவ்வாறானவர்களுக்கு மாஸ்க் என்பது மாஸ் காட்டுவதற்கான ஒரு சிறு ப்ரோபர்டி.

உண்மையிலேயே இவர்கள் புரிதலோ தெளிவோ அற்றவர்கள்.

முகக்கவசம் என்றால் என்ன? அது எதற்காக அணியப்படுகிறது? முகக்கவசத்தை எப்படி அணிய வேண்டும்? முகக்கவசத்தை அணியாமல் விட்டால் என்ன நடக்கும்? மாற்றி அணிந்தால் அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும்?

கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை முகக்கவசத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பலதரப்பினர், சமூக அக்கறையோடும் தனிமனிதர்களின் மீதான கரிசணையோடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், நம்மில் பலர் இதை கண்டுகொள்வதாக இல்லை.

அண்மையில் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஓர் இளைஞனை பொலிஸ் அதிகாரியொருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இளைஞன் ஒரு பெட்டிக்கடையில் நின்று கடைக்காரனிடம் ஏதோ கேட்க, அதற்கிடையில் பொலிஸ் அதிகாரி அந்த இளைஞனின் சட்டையை பிடித்து இழுத்து ~முகக்கவசம் எங்கே| என கேட்டு மிரட்டியுள்ளார்.

அதற்கு அந்த இளைஞன் முகக்கவசம் வாங்குவதற்காகவே தான் கடைக்கு வந்திருப்பதாக கூறினான்.

அதிகாரி கடைக்காரரிடம் விசாரிக்க, இளைஞன் சிகரெட் வாங்க வந்திருப்பதாக கூற இளைஞனை நையப் புடைத்து இழுத்துச் சென்றார், அந்த பொலிஸ் அதிகாரி.

அடுத்தொரு சந்தர்ப்பத்தில் ஓர் இளசுகளின் குழு வீதியோரமாய் நின்று உற்சாகமாய் கதை பேசி நிற்பதை காணமுடிந்தது. அவர்களில் யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் கையிலும் காற்சட்டை பொக்கெட்டிலுமே வைத்திருந்தனர்.

அவர்களை கடந்து சென்ற ஒருவர் ~முகக்கவசம் அணிந்துகொள்ளலாமே| என்பதாக சொல்ல, எவ்வளவு நேரந்தான் போட்டுக்கொண்டே இருப்பது என கூட்டத்தில் ஒருவர் சொல்ல மற்றவர்கள் சிரித்தனர்.

அப்போது அந்த பக்கமாக ஒரு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் வருவதை பார்த்து எல்லோரும் முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டனர்.

இப்படி சிலர் பிறர் கண்களிலிருந்து தப்புவதற்காக தன் முகத்துக்கு கவசம் அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறானவர்கள் கிடைக்கப்போகும் தண்டனைக்கு பயப்படுவதை தூர விலக்கி யோசித்துப் பார்க்கவேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வீதியில் நடந்து திரிபவர்கள் தூரத்தில் ஒரு காவலதிகாரியை பார்த்ததும் உடனே முகக்கவசத்தை எடுத்து அணிந்து நடக்கிறார் என்றால் என்ன காரணம்?

காவல்துறையினர் சுகாதார வழிமுறையை பின்பற்றாத குற்றத்தை காரணம் காட்டி  உரியவரை தண்டிப்பார் அல்லது கைது செய்வார் என்கிற பயம்தானே.

உண்மையில், இந்த பயம், அந்த உரியவருக்கு தன் உடலின் மீது வரவேண்டிய உயிர்ப்பயமாக இருக்கவேண்டுமே ஒழிய, அதிகாரியின் மீது வரவேண்டியதல்ல.

ஒருவர் தனக்கே உரிய உடலையும் அதன்  ஆரோக்கியத்தையும் பாதுகாக்க தானாய் அக்கறை கொண்டிருக்கவேண்டும்.

அதைவிடுத்து, கட்டாயத்தினாலும் வற்புறுத்தலினாலும் ~அவர் தண்டிப்பார்| என்கிற பயத்தாலும் நாம் நம் உடலை பராமரிப்பதற்கான செயலை செய்தாகவேண்டும் என நினைப்பது சிறுபிள்ளை விளையாட்டு.

சிறு வயதில் அம்மா, பக்கத்தில் பிரம்பு வைத்துக்கொண்டு பிள்ளைக்கு சோறு ஊட்டுவதும், சோறு உண்ணச் செய்வதும் பிள்ளையின் நலனுக்காகத்தானே.

பிள்ளை பிரம்பு பார்த்து பயந்து, தனக்கு வேண்டிய உணவை சாப்பிடுவதை போன்றுள்ளது, இப்போது வளர்ந்தவர்களும் பெரியவர்களும் சட்டம் கொடுக்கும் தண்டனைக்கு பயந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது.

நம் உடல்நலனில் அக்கறை கொள்ளவேண்டிய முதல் நபர் நாம் மட்டுமேயன்றி, வேறு யாருமில்லை என்பதை புரிந்து, உணர்ந்து, தெளிந்து உடலையும் ஆரோக்கியத்தையும் தற்காத்துக்கொள்ளுங்கள்!

-மா. உஷாநந்தினி 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login