Stories

சுட்டிக்காட்ட வேண்டியவர் தவறிழைத்தால்…

By  | 

நம் எதிர்பார்ப்பு, கனவு, எல்லாமுமாக உள்ள பிள்ளைகள் அனைவருக்குமே வளமான, நம்பிக்கையான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் திடசங்கற்பம் கொண்டுள்ளனர்.

இருப்பினும், அவர்களில் சிலரது நடத்தையையும் செயல்களையும் பார்க்கிறபோது அதேயளவு உறுதித்தன்மை இல்லாதது போன்றே தெரிகிறது.

பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் நோக்கத்தை மட்டுமே மலை போல் கொண்டுள்ள ஒருசிலர், தம்மிடம் உள்ள சில குறைகளை கண்டும் காணாததுபோல் விட்டுவிடுகின்றனர்.

பிள்ளைகளை வளர்ப்பவர்களிடத்தில் உள்ள இந்த குறைகள், பிள்ளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது குணங்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றி, சமூகத்தவரின் தூற்றல்களுக்கு ஆளாக்கிவிடக்கூடும் என்பதை எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் பலருக்கு புரிவதில்லை.

# தன் குழந்தை சுத்தபத்தமாக இருக்கவேண்டும் என தொட்டதற்கெல்லாம் கழுவி, குளிப்பாட்டி அழகுபடுத்தும் ஓர் அம்மா, எதிர்வீட்டுப் பெண்பிள்ளை வாழைப்பழத்தை கொழகொழ என்று கைகளில் இழுவிக்கொண்டு தன் வீட்டுக்குள் வந்துவிட்டதால், அந்தப் பிள்ளையின் ஆடையை அருவருப்போடு பட்டும் படாமல் தொட்டு, இழுத்துச்சென்று வாசலில் நிறுத்தி, ‘வீட்டுக்குப் போய் கை கழுவிட்டு வா… கழுவாம வரக்கூடாது” என்று தாழ்ந்த குரலில் பேசி விரட்டுகிறாள்.

மீண்டும் அந்தப் பிள்ளை வீட்டுக்குள் இருக்கும் குழந்தையோடு விளையாடுவதற்காக குதித்துக்கொண்டு வருகிறது. மறுபடியும் அதை வெளியே இழுத்து வருகிறாள், குழந்தையின் அம்மா.

இப்போது அந்த குழந்தை சற்றே வளர்ந்துள்ள நிலையில், எந்த பிள்ளை வீட்டுக்குள் வந்து தன்னோடு விளையாட நெருங்கினாலும், ‘கெட் அவுட்” என்று கத்தி துரத்துகிறான்.

‘நீ கறுப்பு… அசிங்கமா இருக்க…. நீ எனக்கு வேணாம்…. வெளிய போ… கெட் அவுட்…” என பக்கத்து வீட்டு பெண்பிள்ளையை தள்ளி வீழ்த்துகிறான்.

கூடி வாழும் குணத்தை சிறு பிராயத்திலிருந்தே விதைக்க தவறும் பெற்றோரின் பிள்ளைகள் வளர்ந்ததும் நிறம், அழகு,  அந்தஸ்து, பணம்,  தராதரம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனிமரமாக நிற்பார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

# வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை… மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை என்பதற்காக தன் நான்கு வயது மகனை பிரம்பால் தழும்பு விழுமளவுக்கு மதுவெறியில் அடித்து துவைத்திருக்கிறார், ஒரு தந்தை.

‘நல்லா குடிச்சிட்டு வந்து அப்பா அடிச்சிட்டாரு…” என அந்த சிறுவன் தழும்பை காட்டும்போது சிவந்த தோளில் ரத்த தழும்புகள் ஆழமாக படிந்திருந்தன.

வீட்டுப்பாடம் செய்யாமல் இருப்பதை விட மதுப்பழக்கம் மிக தவறானது… அதிலும் மது போதையில் பிள்ளைகளை அடித்து துன்புறுத்துவது சிறுவர் துஷ்பிரயோகம் என்கிற குற்றப் பிரிவுக்குள் அடங்கும். அந்த ரீதியில், சிறுவர்களை வளர்க்கும் இவ்வாறான பெற்றோர்களே முதல் குற்றவாளிகள் ஆகிறார்கள்.

# தனது 3 வயது மகன் அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசுகிறான் என்பதற்காக நித்தமும் அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதெல்லாம், பெற்றோர் அவனை அடிக்கிறார்கள். தீக்குச்சியை பற்றவைத்து வாயருகில் கொண்டு வந்து சூடு வைப்பதுபோல் பயமுறுத்துகிறார்கள். கேட்டால், அடித்து உதைத்தாவது நல்ல வழிக்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று கூறுகிறார்கள்.

உண்மையிலேயே, அந்த வீட்டில் அப்பா – அம்மா சண்டையின்போதும், மாமியார் – மருமகள் தகராறின்போதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனிப்பதாலேயே அந்த சிறுவனும் தூசன வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டுள்ளான். இதை எடுத்துச் சொன்னால், சிறுவனின் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

தகாத வார்த்தைகளை பேசுவது தவறு என்றால், அப்படி பேச மறைமுகமாக கற்றுக்கொடுப்பவர்களும் தூண்டியவர்களும் முதல் தவறுடையவர்கள் என்பதை பெற்றோர்களும் மற்ற உறவினர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

# பிறந்ததிலிருந்து தன் வீட்டாரை தவிர, வேறு யாருடனும் பேசிப் பழகாத பேரனை இந்த 6 வயது வரையிலும், அதே மனநிலையோடு வளர்த்துவருகின்றனர், அவனது தாத்தா – பாட்டி.

சிறுவனின் கணவர் வெளிநாட்டில் வசித்துவருகிறார். மனைவியோ கணவரை பிரிந்து, வேறு நபருடன் தொடர்புகொண்டு தற்போது தனித்து வாழ்கிறாள். இவர்களது மகனை அவனது தந்தையின் பெற்றோரே அரவணைக்கின்றனர்.

பேரனுக்கு சாப்பாட்டிலும், துணிமணிகளிலும், கல்வியிலும், செல்லம் கொஞ்சுவதிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. வகை வகையான விளையாட்டு பொருட்களை கொண்டு வந்து கொடுத்து விளையாடச் செய்கின்றனர்.

ஆனால்,  அவனுடைய பொருட்களை வேறு யாருடைய குழந்தையேனும் பங்குபோட்டு விளையாட வந்தால், அந்த குழந்தையை விலக்கி வைத்துவிட்டு, அந்தப் பொருட்களில் தன் பேரனை மட்டுமே ஆதிக்கம் செலுத்தச் செய்கின்றனர்.

பக்கத்து வீட்டில் தன் உறவுக்காரரின் குழந்தை இருக்கிறது…. அது அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகிறது என்பது தெரிந்தும், தன் பேரனுக்கு மட்டுமே ஒரு பெரிய பிஸ்கட் பெக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார், தாத்தா.

பேரன் அந்த பெக்கெட்டை பிரித்து ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து சாப்பிட்டு, பெக்கெட்டை காலி செய்யும் வரை தாத்தா அந்த உறவுக்கார குழந்தையை தூக்கி வைத்திருக்கிறார்.

அதையும் மீறி குழந்தை அடம்பிடித்து இறங்கி வந்து, சிறுவனிடம் கை நீட்டி ஒரு பிஸ்கட்டை கேட்டால், ‘போ…. போ… நா தரமாட்டேன்…. பாருங்களேன் தாத்தா…” என சிணுங்குகிறான். அந்த தாத்தாவும் மறுபடி குழந்தையை தூக்கி வைத்துக்கொள்கிறார். கடைசி வரை அந்த குழந்தைக்கு ஒரு பிஸ்கட்டையாவது கொடுக்கவேயில்லை.

குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு முன்பு வரை, அதிகமான தெருக்களில் உள்ள பிள்ளைகள் காலைப் பொழுதில் ஒன்றாய் வீதிக்கு இறங்கினார்கள் என்றால், இருட்டுபட்டதும் தான் வீடுகளுக்கு செல்வார்கள். அதுவரை ஒரே ஆட்டமும் கும்மாளமும்தான். அதிலும், பாடசாலை தவணை விடுமுறை என்றால், யாரும் வீட்டில் தங்கமாட்டார்கள்.

வாரம் ஒரு முறை கூட்டாஞ்சோறு சமைத்து, எல்லோரும் ஓரிடத்தில் குழுமி உட்கார்ந்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிட்டு, அவ்விடத்திலேயே உருண்டு புரண்டு களிப்புற்று மகிழ்வர்.

காக்காய்கடி கடித்து பகிர்ந்து சாப்பிடும் வழக்கமும் இருந்தது. ஆனால், இன்று அத்தகைய ஒன்றுபட்ட மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களிடத்தில் மறைந்துவருகிறது.

இழந்துகொண்டே போகும் ஒற்றுமை, ஒருமைப்பாடு மீண்டும் மனித மனங்களில் வேர்விட, நாம் குழந்தைகளிடத்தில் நஞ்சை ஏற்றாமல், நல்ல குணங்;களை விதைக்கவேண்டும்.

அப்போதுதான், இனி தலைதூக்கப்போகும் தலைமுறையினர் உறவுகளையும் நட்புகளையும் நேசிப்பர், கைகுலுக்கிக்கொள்வர், கைதூக்கிவிடுவர்.

குழந்தை தவறு செய்தால் பெற்றோர் நெறிப்படுத்தவேண்டும். பெற்றோர் தவறிழைத்தால் தாத்தா-பாட்டி சுட்டிக்காட்ட வேண்டும். தாத்தா- பாட்டியே தவறிழைத்தால், அவர்களுக்கு எடுத்துரைக்க அடுத்தொரு பேரன்-பேத்தியை முன்னிறுத்துவோம்!

– மா. உஷாநந்தினி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login