Stories

சொன்னாக் கேளார்!

By  | 

அலாரம் சிணுங்கத் தொடங்கிவிட்டது.

‘oh my god’ சலிப்பு மேலிட அந்த வார்த்தை மட்டும் அலுப்பில்லாமல் வந்து போனது. மெத்தைக்குள் புதைந்திருந்த உடலை, மெதுவாய் தளர்த்திக் கொண்டு தரையில் குதித்தேன்.

மனமில்லை. இன்னும் தூங்கவேண்டும் போலிருந்தது. ஆனாலும் வாழ்க்கை ஓட்டம் இடம் தரத் தயாராகவுமில்லை.

இரவு பகலெல்லாம் சொந்த நாட்டில்தான்!

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் நேரமிருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு வேகமாக வாழ்க்கை நம்மைக் கொண்டு ஓடுகிறது.

ம்ம்… வயது ஏற ஏற பொறுப்பும் கடமையும் எக்கச்சக்கமாகிறதல்லவா? அதற்குள்ளே நம் தனிப்பட்ட ஆசைகளும் அடங்கிப் போய்விடுகின்றன.

என்றோ ஒரு நாள், இழந்துவிட்ட ஏகபோகங்களின் பெறுமதி நமக்குப் புரியும். ஆனாலும் அதற்குள் வாலிபமும் வலுவும் தொலைந்து போயிருக்கும்.

மனசு சிரித்துக்கொண்டது. இன்றென்ன புதிதாய் என எங்கெங்கோவெல்லாம் ஓடிப்போகிறது மனசு?

என்னைச் சுதாகரித்துக்கொண்டேன்.

சமையலறைப் பக்கமாய் வந்து, கண்ணைத் திறந்து விட்டேன்.

ஆஹா! ஈரத்தைச் சுமந்த இதமான சாரல் சிலீரிட்டது. புத்துணர்ச்சிக்கு பிரித்தானிய ஓர்க்கிட் பூக்கள் செண்டடித்தன.

நேற்றைய சிக்கன் கறியை சூடுகாட்டிவிட்டு, சோறு மட்டும் புதிதாய் சமைத்துக்கொண்டால் சரி. ஏதாவது பொரித்தெடுத்தால் மதியத்துக்கு போதும். இரவுக்கு அங்கேயே ஏதும் ஓடர் செய்துகொள்வோமென்று மனசு கணக்குப் போட, ஃப்ரிட்ஜைத் திறந்து கறியை எடுத்து சூடாக்க சட்டியில் போட்டேன். பரவாயில்லை. வாசனை அற்புதம்.

இதுதான் எங்கட ஊர்த்தூளின் மகிமை. அம்மாவின் கைப்பக்குவம் அந்தளவு சுவை! ஊர் நினைவும் வந்து இதயத்தை ஈரமாக்க, ஃபோனும் குளரத் தொடங்கியது.

அம்மாதான்! ஆயுசு நூறு!

“ஓமம்மா! என்ன இவ்வளவு நேரத்தோட கோல்? ஏதும் அவசரமோ…?” என்றுவிட்டு அவவின் பதிலுக்காய் கேட்பதை கூர்மையாக்கிக்கொண்டேன். ஏனென்றால், ஏதும் அவசரம், அசம்பாவிதம் என்டால்தான் அம்மா விடியக் காத்தால கோல் அடிப்பா. இல்லாட்டில் எங்கட டைம்.. ஈவ்னிங்தான். அவவின்ர நேரம்.

“இல்ல தம்பி! ஒரு கெட்ட கனவு கண்டன். அதான் மனசு கேட்கயில்ல. அடிச்சுப் போட்டன். நீ சுகமோ ஐயா? நல்லா இருக்கிறியேப்பு? ரெண்டு நாளா வேலை வேலையெண்டு நீயும் கதைக்கயில்ல. இப்ப வேலைகள் குறைஞ்சிட்டோ?”

அம்மா அடுக்கிக்கொண்டே போனா.

“என்ன கனவு அம்மா? நீங்கள் என்னையே நினைச்சுக்கொண்டு படுத்திருப்பியள். அதான் என்னைப் பற்றியே கனவும் வந்திருக்கும். அதை பெருசா எடுக்காதீங்க. சரி! வேலைகள் கொஞ்சம் குறைஞ்சிட்டு. வானதியும் அவந்திகாவும் ஹொலண்ட் போய் சேர்ந்திட்டினம். அவையள அனுப்புற வேலைகளில தான் கொஞ்சம் வேலை கூடிட்டு அம்மா. இப்ப ஓகே. நான் நல்லா இருக்கிறன். நீங்க என்ன செய்யிறியள்? சாப்பிட்டாச்சோ காலைல? என்ன சாப்பாடு?”

“ஓமப்பு. நான் சாப்பிட்டன். இண்டைக்கு உன்ட சின்னக்கா வெள்ளப் புட்டும், பிலாப்பழமும் கொண்டு வந்து தந்துட்டுப் போனாள். நான் நல்லாச் சாப்பிட்டு விட்டன். இனிப்பும் கூட. ஒரே மயக்க குணமாக் கிடக்கு…” என்றுவிட்டு சிரிச்சா.

“ஆஹ்… ஒரு பிடி சாப்பிட்டிருப்பீங்கள். அதுதான் உங்களுக்கு நிறையவோ? சுகர், ப்ரஸர் ஒண்டும் இல்லத்தானே. நீங்கள் தாராளமாய் சாப்பிடலாம். சாப்பிடுங்கோ சரியோ.. அது சரி! எங்க அப்பர்?” என்றுவிட்டு நிறுத்தினேன்.

“அவரோ… அவரின்ர கூத்தைச் சொல்லி முடிக்க ஏலாது. சொன்னாக் கேளார். எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் தான் அப்பு கதைப்பார். காலையில எழும்பி முற்றமெல்லாம் கஞ்சல்களை இழுத்துட்டு, பைப்பால கிடக்கிற எல்லாப் பூக்கண்டுக்கும் தண்ணியடிச்சுப் போட்டு, ப்ளேன்ரி மட்டும் குடிச்சார். சாப்பிட புட்டுக் கொடுத்தன். இல்ல… இல்ல… இப்ப பசியில்ல. வந்து சாப்பிடுறன் எண்டுட்டு அங்க காணிக்கு வெளிக்கிட்டுட்டார். நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டன். ம்கூம்… இந்த வெயிலுக்குள்ள ஏன் இப்ப அவசரமாய் போறியள் எண்டு. மனுஷன் போயே தீருவணென்டு அடம்பிடிச்சிக்கொண்டு வெளிக்கிட்டுப் போகுது…” என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு நிறுத்தினா அம்மா.

அம்மாவுக்கு அவர்ல சரியான பாசம், கரிசனை. எந்தச் சந்தர்ப்பத்திலையும் யாரிட்டையும்… ஏன்.. எங்களிட்ட கூட அப்பாவ விட்டுக்கொடுக்க மாட்டா. பிள்ளைகள் அப்பாவ ஒரு நாளும் வார்த்தைகளால கூட காயப்படுத்திடக் கூடாதென்பதில் அம்மா கவனமாக இருப்பா.

என்னதான் சிக்கல் குடும்பத்துக்குள்ள வந்தாலும், அதை நாசுக்காக அவவே சமாளிப்பா. ஆனால், இன்டைக்கு ஆதங்கம் கூடவாக் கிடக்கு…

“ஏனம்மா? அவருக்கு முட்டு வருத்தமும் கிடக்குது. இப்ப என்ன அவசரம் அந்தக் காணிக்கப் போக? அதுவும் பேய் வெய்யில்… ஹே!” நானும் என் பங்குக்கு கேட்க,

“அதத்தான் விடியவில இருந்து சொல்லிக்கொண்டு கிடக்கிறன். கேட்டால்தானே!” சலித்துக்கொண்டா அம்மா.

நியாயம்தான்! அம்மா சொன்னால் எல்லாம் கேட்பார் அப்பா. ஆனால், காணிக்கப் போறது, சாப்பிடுறது, கள்ளுக் குடிக்கிறது மட்டும் கேட்கவே மாட்டார். நினைச்சிட்டார்… முடிவு பண்ணிட்டார் என்டால் அதுக்குப் பிறகு யார்ட பேச்சும் எடுபடாது.

சில நேரங்களில என்ர பேரை இழுத்து அம்மா அவர வெருட்டுவா. அதுக்கும் தம்பி கேட்டால், ‘நான் சொல்லிக் கொள்றன்’ என்டு கதையைச் சமாளிச்சிட்டு, ஆள் கிளம்பிடும். இன்டைக்கும் இதுதான் நடந்திருக்குது போல!

அந்தக் காணியில் அப்பாவுக்கு அவ்வளவு விருப்பம். ஒரு ஒண்டரை ஏக்கர் தென்னங்காணி. அதில அரைவாசிக்குத்தான் தென்னை நிக்குது. யுத்த டைம்ல யாரோ வெட்டிப் போட்டாங்கள். அவருக்கு அது சரியான கவலை. பெத்த பிள்ளை மாதிரி வளத்த தென்னைகளை வெட்டி வீழ்த்திட்டாங்கள் எண்டு அப்ப ரெண்டு, மூண்டு நாளா சாப்பிடாமல் கிடந்தவர். அந்தளவுக்கு நேசம் தன்ர காணியில.

1990இல் அவரே காடு வெட்டி, வேலி அடைத்து தானே நட்டு உருவாக்கின தோட்டம். எனக்கும் அந்தக் காணிக்கும் ஒரே வயசுதான் எண்டு அடிக்கடி சொல்லுவார். அப்போதைய காலத்தில காணியும் தென்னையும் அவ்வளவு பெறுமதியில்ல. ஆனால், இப்ப நிலைமை வேற. கொள்ளைக் காசுக்கு விக்கலாம்.

இவர் ஒரே அலைஞ்சு திரியுவார் எண்டுட்டு ஒருக்கா ‘அந்த தென்னங்காணிய விப்பமோ அப்பா’ எண்டு நான் கேட்டுப் போட்டன். மனுஷனுக்கு சரியான கோபம் என்னில. நான் செத்தப் பிறகு வேணுமென்டா வில்லுங்கோ எண்டு சொல்லிட்டு, ரெண்டு கிழமையா என்னோட பேசவேயில்லை. அவ்வளவு கோபம். காணியில அத்தனை விருப்பம்.

எங்கள எப்படி நேசிக்கிறாரோ,  அதைவிட அதிகம் அந்தக் காணியில!

“அம்மா.. வயசும் போட்டுது. அவருக்கு இருக்கிற ஆறுதல் அது மட்டுந்தானே. விடுங்கோ. பாவம்! போட்டு வரட்டும். பிறகு, போகாதீங்கோ எண்டு சொன்னால் கோபிச்சுக்கொள்ளுவார்…” என்றேன்.

“ஓமப்பு! நானும் கேப்பார் எண்டு பேசிப் பாப்பன். மனுஷன் கேட்கவே கேட்காது. இனி என்ன செய்யுற? போய்ட்டு வரட்டும். இருந்தாலும் வெய்யிலுக்கால அந்த சைக்கிள்ள தான் போவார். இப்ப வாகனக்காரனுகள் வேற, கண்மண் தெரியாமல் ஓடுவாங்கள். அதுவும் பயம்” என்றுவிட்டு, எனக்காக பார்த்திருப்பா போல, இடைவெளி விட்டுட்டா.

“ம்ம்! இப்ப வந்திடுவார் தானே! இருக்கட்டும். பின்னேரமா ஃபோன் பண்ணி கொஞ்சம் பேச்சுக் குடுக்கிறன் நான்” என்றேன். அம்மாவின் ஆதங்கத்துக்கும் தீர்வு சொல்ல வேண்டுமல்லவா?

“சரி தம்பி! வேலை வேலை எண்டு திரியாமல் நேர காலத்துக்கு சாப்பிடு தம்பி. உடம்பப் பார்த்துக் கொள்ளு தம்பி. மருமகள் வரும் மட்டும் அதை இதை ஓடர் பண்ணி சாப்பிடாத தம்பி. நீயே சமைச்சு சாப்பிடு. பட்டினி கிடக்காத. நான் பின்னேரம் எடுக்கட்டோ அப்பு?” என்ற அம்மாவிடம் “சரியம்மா! நான் சமைச்சுத்தான் சாப்பிடுறன். யோசிக்காதீங்கோ. நீங்களும் அப்பாவும் உடம்ப பார்த்துக் கொள்ளுங்கோ. கவனம். நான் பின்னேரம் ஃபோன் பண்ணிக் கதைக்கிறன் அம்மா. வேலைக்கும் டைம் ஆகிட்டுது” என்றேன்.

“சரி தம்பி. கவனம்!” அம்மா கட் பண்ணிவிட்டா. இந்த ஐந்து நிமிஷம் ஊர்ல போய் இருந்துட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங். ம்ம்… பெருமூச்சு நாசியை எடுத்துக்கொண்டு மறைய, சமைத்ததை லஞ்ச் பொக்ஸில் போட்டு வைத்துவிட்டு, குளிக்கத் தயாரானேன்.

இன்னும் பத்து நிமிசத்தில் வேலைத்தளத்தில் இருந்தாக வேண்டும். ஆனாலும் இந்தப் பரபரப்புக்குள் அப்பாவும் சைக்கிளும் அந்த தென்னங்காணியும்தான் மனசுக்குள் நெருடிப் போவதாய் தோன்றியது.

அப்பாவுக்கு இருக்கிற வாழ்வியல் சுதந்திரம் கூட நமக்கு இல்லையே!

லண்டன் வாழ்க்கை பெயருக்குத்தான். ஆத்மார்த்தமாக இல்லவே இல்லை. இறந்து விழும் வரைக்கும் இங்கு ஓட்டம் மட்டுமே மிச்சம். அப்பா… கொடுத்து வைத்தவர்தான்! மனசு சொல்லிக் கொண்டது.

-இராமசாமி ரமேஷ்

You must be logged in to post a comment Login