Articles

சொல்வதில் எந்தவித தயக்கமும் வேண்டாம்

By  | 

மனதில் நினைக்கிறேன் ஆனால், வெளியில் கூற முடியவில்லைஇப்படி பல பேர் சொல்லக் கேட்டிருப்போம். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் அதைச் சொல்ல முடியாமல் தவிப்பர். காரணம் கேட்டால், நாம் நினைப்பதை எல்லாம் பேசிவிட்டால் எல்லாருமே நம் எதிரிகளாகிவிடுவர் என்ற பயம்தான்.

ஒரு பொது இடத்தில் ஒருவர் நம்மிடம் பேசும் முறை அல்லது பேசும் வார்த்தைகள் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘இது எனக்கு பிடிக்கவில்லைஎன முகத்துக்கு நேராக சொல்வதில் எந்தப் பிழையும் இல்லை. யாராக இருந்தாலும், நிறைய பேர் குழுமியிருக்கும் சந்தர்ப்பத்தில் நமக்கும் நம் மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்தும்போது, அதை எதிர்த்து நிற்பது என்பது நம் திமிராகவோ அல்லது ஆணவமாகவோ மற்றவர்களுக்கு பார்க்கத் தோன்றினாலும், அது எமது சுயமரியாதையை காப்பதற்காகவே என்பதுதான் உண்மை.

மற்றவர்கள் கூறும் விடயங்கள் நமக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அதை நாம் நிச்சயம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஒருபோதும் யாருக்கும் இல்லை.

நாம் எப்போது தைரியமாக துணிச்சலுடன் ஒரு விடயத்தை எதிர்கொள்கிறோமோ, அப்போதுதான் நமக்கு நம் மீதான மரியாதை அதிகரிக்கும்.

இவ்வாறான விடயங்கள் வீடு, பாடசாலை, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் நடைபெறுவதுண்டு.

வீட்டில் பொதுவாக தாய்மார்கள், தனக்கான விருப்பங்களை தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வர். அதை தனது கணவனிடமோ அல்லது பிள்ளைகளிடமோ சொல்வதென்பது மிகவும் குறைவு. தனக்கான ஆசைகளை கனவுகளாக மாத்திரமே தனக்குள் வைத்துக்கொள்வர். இறுதியில் தம் விருப்பத்துக்கு மாறாக எது நடந்தாலும் இன்முகத்துடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் அனேக தாய்மார்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் என்பது நிச்சயம் இருக்கும். அதை சொல்வதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை.

அடுத்ததாக, பாடசாலையை எடுத்துக்கொண்டால், பிள்ளைக்கு ஒரு பாடத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனினும், அவனால் அதை வெளியில் கூறமுடியாத நிலை காணப்படலாம். அதை கூறுவதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அவன் இறுதி வரையிலும் அதை சொல்லாமல் விட்டால், பிடிக்காத பாடத்தைத்தான் படிக்க வேண்டும். எனவே, எமக்கு எது நல்லது, எது சரி என்று தோன்றுகிறதோ, அதை தைரியமாக யாராயிருந்தாலும் கூறிவிட வேண்டும்.

அடுத்ததாக பணியிடம் இந்த செயன்முறையை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என ஓர் எண்ணம், சிந்தனை நமக்குள் உருவாகியிருக்கும். ஆனால், அதை கூறினால் ஏற்றுக்கொள்வார்களா, இல்லை இது சரியாக வருமா என யோசித்து யோசித்து, இறுதியில் தனது சிந்தனைக்கான காலமும் நேரமும் வீணே தவிர அதை வெளியில் கூற மாட்டார்கள். சிந்திப்பதற்கான பலனை அவரவர்களே வீணாக்கிக் கொள்கின்றனர்.

எதையும் மனதுக்குள்ளேயே பூட்டி வைக்காமல் பேச வேண்டிய இடங்களில் நிச்சயம் பேச வேண்டும். பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. ஒரு விடயத்தை வேண்டுமென்றே சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதேபோல் வேண்டாம் என்று சொல்வதற்கும் எமக்கு முழு உரிமை இருக்கிறது.

குடும்பமோ பாடசாலையோ பணியிடமோ அல்லது வெளியிடமோ எந்த இடமாக இருந்தாலும், ஒரு விடயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை முகத்துக்கு நேராய் கூறவும் எதிர்க்கவும் ஒருபோதும் தயங்கக்கூடாது. அவர் என்ன நினைப்பாரோ, இவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கத்தை தவிர்க்க வேண்டும்.

யார் என்ன கூறினாலும் அல்லது நமது விருப்பத்துக்கு மாறாக எதைச் செய்தாலும், எல்லா நேரங்களிலும் சிரித்து தலையாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.

வேண்டாம், இல்லை, பிடிக்கவில்லைஎன்று தைரியமாக எப்போது சொல்ல ஆரம்பிக்கின்றோமோ, அப்போதுதான் நமது வாழ்க்கையை நாம் வாழ்கின்றோம். இல்லையென்றால், அடுத்தவர்களுக்காகவும் அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் தான் நாம் வாழ்கின்றோம் என்று அர்த்தம்.

எனவே, நம்மைச் சார்ந்த விடயங்களில், நமக்கொன்று பிடிக்கவில்லை எனில், அதை தைரியமாக சொல்லப் பழகுவோம்.

து. சிந்துஜா

You must be logged in to post a comment Login