Love

டயோடிமாவின் கனவுக் காதல் பிளேட்டோனிக் உறவு!

By  | 

கிரேக்கத் தத்துவஞானியான பிளேட்டோவின் படைப்புகளில் காணப்படும் ஒரு பெயர், டயோடிமா. மாண்டிநியா எனும் பகுதியைச் சேர்ந்த இந்த டயோடிமாவும் ஒரு தத்துவ ஞானிதான். இவருடைய தத்துவப் பார்வை தனித்துவமானது. இந்த வாதத்தைப் பாருங்கள்.

‘ஒரு விடயம் அதீத சுத்தமாகவோ அதீத அசுத்தமாகவோ மட்டுமே இருந்தாகவேண்டும் என்றில்லை. வெள்ளையாக இல்லாத ஒன்று கறுப்பாகத்தான் இருந்தாகவேண்டும் என்று சொல்ல முடியாது.

இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு மத்தியில் அதிகம் ஆராயப்படாத ஓரிடம் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலும் ஆளுமைகள் ஜீவித்திருக்க முடியும். யதார்த்தம் என்பது பார்ப்போரின் கண்களில்தான் இருக்கிறது. எனக்குத் தோன்றுவதே உங்களுக்கும் தோன்றும் என்று சொல்ல முடியாது’ என்கிற டயோடிமா, இன்னோரிடத்தில் காதல் என்றால் என்ன என விரிவாக ஆராய்கிறார்.

சக மனிதர்கள் மீது கொள்ளும் காதலைவிட, உயர்வான சக்தியொன்றின் மீது கொள்ளும் காதல் அவரை ஈர்க்கிறது. இக்காதல் உடல் இன்பத்தை கடந்தது.

இத்தகைய உயர்வான காதலை சக மனிதர்களிடமும் வெளிப்படுத்துவது சாத்தியம் என்கிறார் டயோடிமா. டயோடிமாவின் அழகு, அறிவு, ஆற்றல் ஆகியவை நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் சில பிற்கால ஆய்வாளர்கள். அனேகமாக இவர் ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே இருக்கமுடியும் என்பது அவர்களின் திடமான நம்பிக்கை.

தனது தத்துவ உரையாடல்களில் ஒரு தரப்பை சொல்வதற்காக பிளேட்டோ டயோடிமாவை உருவாக்கியிருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், பிளேட்டோ மட்டுமல்ல, அவருடைய ஆசான் சோக்ரடீஸ{ம் டயோடிமாவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே ‘பெண் தத்துவஞானி’ என்று மட்டுமல்ல, ‘எனக்குப் பாடம் கற்பித்த ஆசான்’ என்றே டயோடிமாவை அழைக்கிறார்.

குறிப்பாக, காதல் பற்றிய தத்துவ விசாரணைகளை அவரிடமே கற்றதாக சோக்ரடீஸ் குறிப்பிட்டுள்ளார். இக்காதல் மனிதர்களுக்கு இடையில் மலரும் உடல் சார்ந்த காதல் அல்ல, உள்ளம் சார்ந்த மேலான காதல். அதாவது நட்பு.

பிளேட்டோனிக் உறவு அல்லது காதல் என்று இந்த நட்பு அழைக்கப்படுகிறது. இதன்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அறிவார்ந்த, உணர்ச்சிபூர்வமான நேசம் சாத்தியம். இந்த நேசம் காதலல்ல.

இங்கே ஓர் ஆணின் உடலும் பெண்ணின் உடலும் அவற்றுக்குண்டான முக்கியத்துவத்தை இழக்கின்றன. இருவரும் அன்பால் ஒன்றிணைகிறார்கள். ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்பு சாத்தியமேயில்லை என்கிற வாதத்தை ‘பிளேட்டோனிக் உறவு’ தகர்க்கிறது. ஏன் ஆண் – பெண் நட்பு சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது? மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதற்கு அளித்த பதில் எளிமையானதும் முக்கியமானதுமாகும்.

பெண்ணை தனக்குச் சமமான உயிராக ஆண் எப்போதுமே கருதியதில்லை. ஆணுக்குக் கட்டுப்படவேண்டியவராக, ஆணை விட தகுதி குறைந்தவராகவே பெண் மதிப்பிடப்பட்டார். குடும்பத்தில் ஆணுக்கே தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டது. சமூகத்தை ஆண்களே நிர்வகித்தார்கள். ஆட்சி, மதம், தத்துவம், கலை, இலக்கியம் யாவற்றிலும் ஆண்களே மேல்நிலையில் இருந்தார்கள். என்னைப் போல் மற்றோர் உயிர் என்று ஒரு பெண்ணை ஆண் எப்போது கருதுகிறானோ அப்போதுதான் நட்பு சாத்தியம்.

நீ எனக்குக் கீழே என்று நினைக்கத் தொடங்கும்போதே நட்பு முறியத் தொடங்கிவிடுகிறது. மேலாதிக்க உணர்வும் நட்பும் இணைந்திருப்பதில்லை என்பதால் ஆணும் பெண்ணும் நட்புடன் இணைந்திருக்க முடிவதில்லை. அதனால்தான் டயோடிமா மனிதக் காதலை அல்ல, அதைவிடவும் மேலானதொரு காதலைப் பற்றி விவாதிக்கிறார். ‘பிளேட்டோனிக் உறவு’ என்று இன்று அறியப்படும் ஆண்-பெண் நட்பை சோக்ரடீஸ், பிளேட்டோ இருவருக்கும் ஒரு தத்துவ விசாரணையாக அறிமுகப்படுத்தியவர் டயோடிமா.

காதலின் தத்துவத்தை என் இளமையில் டயோடிமாவிடமிருந்தே கற்றேன் என்கிறார் சோக்ரடீஸ். பிளேட்டோவின் தத்துவத் தேடல்களில் டயோடிமா முக்கியமான பாத்திரம் வகிக்கிறார். இப்படி இரு பெரும் தத்துவஞானிகளைப் பாதித்திருக்கிறார் டயோடிமா.

ஒரே நேரத்தில் காதல் வறுமையையும் அபரிமிதமான செல்வத்தையும் குறிக்கிறது என்கிறார் டயோடிமா. நாம் அனைவரும் காதலைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் இல்லாத ஒன்றைத்தானே தேடமுடியும்? அப்படியானால் அன்பையும் அழகையும் காதலையும் தேடுபவர்கள் அன்பற்றவர்கள், அழகற்றவர்கள், காதலற்றவர்களா? ஏதுமற்ற வறுமையில்தான் காதல் மலருமா? மற்றொரு பக்கம், காதல் இந்த இல்லாமையைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. அது அன்பை, அழகை, நிறைவை அளிக்கிறது. ஏதுமற்றவர்களையும் எல்லாம் பெற வைக்கிறது. இன்பத்தையும் மகிழ்ச்சியையும் சேர்க்கிறது. அப்படியானால், காதல் என்பது நிச்சயம் செல்வம்தான்.

காதல் என்பது எப்போதும் வறுமையில் இருப்பது. அது தங்குவதற்கு இடமின்றி அலைகிறது. அதனால்தான் நமக்குப் பிடித்தமானவர்களிடமிருந்து காதலை நாம் இறைஞ்சி பெற்றுக்கொள்ளத் துடிக்கிறோம். அதனால்தான் தீவிரமாகவும் முரட்டுத்தனமாகவும் அதைத் துரத்தி ஓடுகிறோம். அதே சமயம் காதல் இல்லாமையைப் போக்கி, அழகையும் ஆனந்தத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது. வறுமை, செல்வம் இரண்டுக்கும் பிறந்த குழந்தையே காதல் என்கிறார் டயோடிமா.

ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அது எப்போதும் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார். அன்பு, அழகு, மகிழ்ச்சி, காதல், நட்பு என எதைத் தேடிச்செல்வதாக இருந்தாலும், நீங்கள் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் பறந்து செல்கிறீர்கள். உங்களிடம் இல்லாததைத் தேடுகிறீர்கள். அதேசமயம் உங்களிடமிருந்து ஒரு பகுதியை அளிக்கவும் செய்கிறீர்கள். காதலை பரிமாறிக்கொள்வதைப் போல் நட்பை, சிந்தனைகளை, தத்துவங்களை பரிமாறிக்கொள்ளலாம்.

காதலைப் போல் பிளேட்டோனிக் உறவும் ஓர் ஆணையும் பெண்ணையும் மெய்யாக ஓர் உறவில் பிணைத்து வைக்கிறது. இந்த உறவு எதிர்நிலைகளில் இருப்பவர்களை ஒருங்கிணைக்கிறது. எதிர்மறை சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஓர் உரையாடலைத் தொடங்கிவைக்கிறது. இந்த உறவு ‘இல்லாமை’யைப் அழிக்கிறது. அபரிமிதமாக இருப்பதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்கிறது. முரண்களைச் சமப்படுத்தி நல்லிணக்கத்தை மலரச் செய்கிறது.

டயோடிமா கனவு காணும் இத்தகைய ஓர் உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட வேண்டுமானால், மேரி உல்ஸ்டோன் கிராஃப்ட் குறிப்பிடும் சமத்துவம் முதலில் சாத்தியப்படவேண்டும்.

ஒருவர் மேலும், இன்னொருவர் கீழுமாக நின்று நிகழ்த்தும் உரையாடல்களும், பரிமாற்றங்களும் ஒரு தரப்பின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும். ஆண், பெண் இருவரும் சரி சமானமாக நின்று உரையாடும்போதுதான் அந்த உரையாடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அப்படியொரு உரையாடல் தொடங்கினால்தான் பரிமாற்றங்கள் இருவருக்கும் பயனுள்ளதாக, மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

காதலுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல, ஆணுக்கும் பெண்ணுக்குமான எல்லா உறவுகளுக்கும் சமத்துவமே அடிப்படை.

You must be logged in to post a comment Login