கொரோனா

டெல்டா கொரோனா 60% அதிக வேகத்தில் பரவுகிறது!

By  | 

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கொரோனா, அல்ஃபா வகைக் கொரோனாக்களை விட 60 சதவீத அதிகம் பரவும் தன்மை கொண்டிருப்பதாக பிரிட்டன் நிபுணா்கள் எச்சசரித்துள்ளனா்.

மேலும், கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை டெல்டா கொரோனா சில வகைகளில் பாதிப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுகுறித்து, பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வகைகளைக் கண்காணித்து வரும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு (பிஹெச்இ) வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரிட்டனில் 29,892 பேருக்கு டெல்டா வகைக் கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த வகைக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,323-ஆக உயா்ந்துள்ளது.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டனில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு டெல்டா வகைக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் கென்ட் பிராந்தியத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அல்ஃபா வகை கொரோனாவை விட டெல்டா கொரோனா அதிக தீவிரத்துடன் பரவி வருகிறது.

பிஹெச்இ அமைப்பின் புதிய ஆய்வுகளின்படி, அல்ஃபா வகைக் கொரோனாவை விட டெல்டா வகைக் கொரோனாவுக்கு பரவும் தன்மை 60 சதவீதம் அதிகமாக உள்ளது. கென்ட் பிராந்தியத்தில் மட்டும் டெல்டா கொரோனாவால் பதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.5 நாள்கள் முதல் 11.5 நாள்களுக்கும் இரட்டிப்பாகி வருகிறது.

இதுதவிர, இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை அல்ஃபா கொரோனாவைவிட டெல்டா கொரோனா அதிகமாக பாதிப்பது எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, முதல் தவணை கொரோனா தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவா்களுக்கு, அந்தத் தடுப்பூசியின் பலனை டெல்டா கொரோனா வெகுவாகக் குறைக்கிறது. 15 முதல் 15 சதவீதம் வரை தடுப்பூசியின் செயல்திறன் குறையக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 45,42,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,27,867 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 42,83,263 போ் கொரோனாவிலிருந்து முழுமையாக குணடைந்துள்ளனா்; 1,31,856 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 158 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

You must be logged in to post a comment Login