Articles

தற்காத்துக்கொண்டது யதார்த்தமாக நடந்த ஒன்றே!

By  | 

பெண்கள் ஆண்களை விட மனதளவில் வலிமையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் துணிவு மிக்கவர்கள் பெண்கள் என்பதற்கு சான்றாக வரலாற்றில் பல வீர மங்கைகள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

பழங்காலந் தொட்டு இன்று வரை பெண்களிடம் வீரத்துக்கும் துணிச்சலுக்கும் மன தைரியத்துக்கும் பஞ்சமில்லை.

காட்டுப்புலியை முறத்தாலும் உலக்கையாலும் அடித்து ஓட ஓட துரத்திய பெண்கள்  ஒருகாலத்தில் வாழ்ந்ததாக நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

அதேபோல் புலியை பயமின்றி படகுத் துடுப்பால் அடித்து துரத்தி புலியிடமிருந்து கணவனை காப்பாற்றினாள் ஒரு பங்களாதேச பெண் என்று நாம் வாழும் இந்த காலத்தில் கூட பெண்களின் தைரியத்தை கண்கூடாக பார்த்தும் அறிந்தும் வருகிறோம்.

 

அண்மையில் கூட கலிஃபோர்னியாவில் ஒரு சம்பவம் நடந்தது. வீடொன்றின் கார் பார்க்கிங் பகுதியில் அமையப்பெற்ற சுவரின் மீது பருத்த தாய்க் கரடியொன்று அதன் இரு குட்டிகளோடு ஏறி நின்று, அந்த வீட்டு நாய்களை தாக்க முற்பட்டது. அப்போது வீட்டுக்குள்ளிருந்து  வெளியே ஓடி வந்த 17 வயது இளம்பெண்ணான ஹெய்லே மொரினிகோ, நாய்களுடனான கரடியின் தாக்குதலை பார்த்து பதறிப்போய் விரைந்து சென்று அந்த தாய்க் கரடியை ஒரு தள்ளு தள்ளினார்.

உடனே கரடி மதிலுக்கு மறு பக்கத்தில் விழுந்துவிட, சீக்கிரம் சீக்கிரமாக தன் வீட்டு நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, நாய்களையும் தன்னையும் கரடியிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்.

இந்த காணொளி டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் மில்லியன் கணக்கானோரை ஈர்த்தது. அத்தோடு அந்தப் பெண் சொன்ன விடயம் சிந்திக்கவும் வைத்தது…

“நான் செய்தது போல் யார் ஒருவரும் கரடிகளை தள்ள முன்செல்ல வேண்டாம்… கரடிகளின் அருகில் செல்லாதீர்கள்… இப்போது எனக்கு ஏற்பட்ட விளைவு உங்களுக்கும் ஏற்படும் என கருதாதீர்கள்… அதிர்ஷ்டவசமாக நான் பெரிதாக காயமின்றி தப்பித்துவிட்டேன். இந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு இல்லாமல் கூட போகலாம்…” என்ற அந்த பெண் இயல்பிலேயே துணிவு மிக்க பெண்தான். ஆனாலும், அவரிடத்தில் அசட்டுத் துணிச்சல் அச்சந்தர்ப்பத்தில் வெளிப்படவில்லை.

தான் செல்லமாய் வளர்க்கும் நாய்களுக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து அவற்றை காப்பாற்றும் ஒரே நினைப்பில் தன்னையும் அறியாமல் துணிந்து செயற்பட்டுள்ளார். கரடிகள் மிக ஆபத்தானவை என்பதையும் மறந்து, ஏதோ ஒரு வேகத்தில் முந்திப் பாய்ந்துள்ளார்.

அவர் சொன்னது போல், அவர் தன்னை தற்காத்துக்கொண்டது, யதார்த்தமாக நடந்த ஒன்றே. அங்கே தன் துணிச்சலை அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அல்லது பிறரது கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக அவர் கரடிகளை எதிர்கொண்டார் என்பதாகவும் தெரியவில்லை.

எனினும், சிலர் தான் எதற்கும் துணிந்தவர் என்பதை பிறருக்கு நிரூபித்தாகவேண்டும் என்பதற்காகவும், ஏனையோரின் ஈர்ப்பை சம்பாதிப்பதற்காகவுமே மிக ஆபத்தான சூழ்நிலைகளிலும் கண்மூடித்தனமாக உடலை முறுக்கிக்கொண்டு நிற்பர்.

சினிமா ஹீரோக்கள் போல் தன்னை நினைத்துக்கொண்டு தன்னந்தனியாக, கூட்டத்தில் ஒருவராக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் நம் மத்தியிலும் உள்ளனர்.

இருபது பேரை ஒரு நொடியில் அடித்து தொம்சம் செய்யும் போலியான ஹீரோ போல் நிஜத்தில் ஒருவர் சண்டையிட்டு வெல்வது சாமானியர்களிடத்தில் சாத்தியப்படுமா?

தனிமனித ஹீரோயிசத்தை பார்த்து மதி கெட்டுப்போகும் சில மனிதர்கள் சிந்திக்கவேண்டிய விடயமிது.

உண்மையிலேயே, அந்த ஒருவர் பலசாலியாக, பயில்வானாக இருப்பினும், அவர் தன்னை சுற்றியுள்ள சூழ்நிலையை, மனிதர்களின் மனங்களை, அவர்களது இயல்புகளை, யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.

சில பெற்றோர் தன் மகளை உற்சாகப்படுத்துவதற்காக “அவளுக்கென்ன! அவளை நம்பி எங்கு வேண்டுமானாலும், அர்த்த ராத்திரியிலும் தனியாக அனுப்பலாம்… எந்த இடம், சூழ்நிலையையும் சமாளித்து வந்துவிடுவாள்… அவளை பற்றி பயப்பட தேவையில்லை…” என்பார்கள்.

இந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதில் தன்னம்பிக்கையை, சுய வலிமையை வளர்ப்பதற்கான ஊக்கிகள்.

ஆயினும், இந்த வாசகங்களை மூளைக்குள் ஏற்றுகிற ஒரு பெண் இயல்புக்கு மீறி தன்னை ஒரு வீரமங்கையாக, பிறரை ஆபத்திலிருந்து காக்க பிறந்த ஆபத்பாந்தவராக தன்னை வானளாவ உயர்த்தி, போலியான துணிச்சலில், கூட்டத்துக்கு மத்தியில் தனியொரு ஆளாய் தனக்கு வரக்கூடிய கொடிய ஆபத்தினை எதிர்கொள்ள தயாராகிவிடுவாள்.

அப்போது தன் உடல் பலத்துக்கு மீறிய பல ரூபங்கள் சூழவிருப்பின், அவை குறித்த எச்சரிக்கை மணியை எழுப்பி, அவளை உஷார்ப்படுத்த, அவளது அசட்டுத் துணிச்சல் விடாது.

இதுபோன்ற விஷப் பரீட்சைகளை பலர் கடந்திருக்கக்கூடும். சிலர் ஆழம் அறியாமல் காலை விட்டு, சிக்கி திணறியும் இருந்திருப்பர்.

அளவு கடந்த தன்னம்பிக்கையால் பாதுகாப்பற்ற இடங்களுக்கு தனியே சென்று, வம்பு வளர்த்து, உயிருக்குப் போராடி, உடல் சிதைந்து இறந்தவர்கள் ஏராளம்.

(பயமுறுத்தச் சொல்லவில்லை… நிஜத்தில் நடப்பது இதுதான்)

நம் பலம் எதுவரை என்பதை முதலில் ஒவ்வொருவரும் மதிப்பிடுவது அவசியம். பின்னர் அதனளவில் நாம் அவற்றை பயன்படுத்தி, காரியத்தில் சாதிக்கப் பார்க்கவேண்டும். அல்லது இருக்கும் பலத்தை இன்னுமொரு தரத்துக்கு உயர்த்த முயற்சிக்கலாம்.

அதைவிடுத்து நம் பலத்துக்கு மீறிய ஆவேசத்தையும், யதார்த்தத்துக்கு ஒத்துவராத வீண் சவடாலையும் தூக்கி சுமந்தால் எப்படி?

இவற்றை தூர வைத்துவிட்டு புத்தி சாதுரியமாக, இடத்துக்கு, காலத்துக்கு, சூழலுக்கு தகுந்தபடி சிந்தித்தால் எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் காக்கப்படுவோம்… நம்மை சார்ந்தவர்களும் பாதுகாக்கப்படுவர் என்கிற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு காலத்தில் பெண்கள் எத்தனையோ உடல் ரீதியான துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வீட்டு வன்முறை, உடன்கட்டை ஏறுவது, போர்க்களத்துக்கு படையெடுத்து செல்வது, கணவன், மகன் போன்ற இரத்த உறவுகளை நாட்டுக்காக பணயம் வைப்பது, உறவினர்களின் வீர மரணத்தை எதிர்கொள்வது என எண்ணற்ற துன்பங்கள், சவால்கள், வலிகளை உணர்ந்து அனுபவித்தே உடலளவிலும் மனதளவிலும் பலம் ஊன்றிப்போன பெண்களின் வழிவந்த நமக்கு துணிவு ஒன்றும் புதிதல்ல.

எனினும், அத்துணிவை கையாளும் விதத்தையும், நம்மை நோக்கி வருகிற ஆபத்தை புறமுதுகிடச் செய்யும் வித்தையையும் நாம் புதிய கோணத்தில் கற்றுத் தேறவேண்டும்.

-மா. உஷாநந்தினி 

You must be logged in to post a comment Login