General

தற்கால கன்னடச் சிறுகதைகள்

By  | 

-நூல் விமர்சனம்

வாசக நண்பர்களே நம்பிக்கையான வாசிப்பு அனுபவம். தற்காலத்தில் இயக்கத்தில் இருக்கக்கூடிய கன்னட எழுத்தாளர்கள் பன்னிருவரின்  சிறந்த 12 சிறுகதைகளை தெரிந்து தரமான அனுபவமாக தமிழுக்கு எதிர் வெளியீடாக கே.நல்லதம்பி  கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் ஒருவரின் வாழ்க்கை யதார்த்தம் இருக்கிறது எத்தனை பேர் வாசித்தாலும் அத்தனை  பேருக்குமான திருப்தியை தரக்கூடிய தொகுப்பு. அவ்வளவு தரமான தெரிவுகளாய் ஒவ்வொரு கதைகளும் இருக்கிறன.

இந்த கதைகளுக்குள் முனைவர் ராமசந்திர தேவர் எழுதிய மூக்கன் சிறுகதை அபாரமானது இன்னும் கூட கதை ஏற்படுத்திய உள்ளுணர்வுகளில் இருந்து வெளிவர முடியாதுள்ளது. இந்த கதை பற்றி பேசா விட்டால் எனக்கு நான் செய்யும் துரோகமாகி விடும் அவ்வளவு ஆத்மார்த்தமானது கதை.அந்த கதை பற்றி பேசுவதே இந்த பதிவின் நோக்கமும் கூட.

ஒரு தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.பிறந்த குழந்தை இயல்பாக வளர்கிறது ஆனாலும் அதன் வளர்ச்சியில் கருமம் சூழ்கிறது. குழந்தைக்கு மூன்று வயது நெருங்கும்  போது அவனுடைய மூக்கு வளர ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் ஒரு பொருட்டே இல்லாத வளர்ச்சியாக இருந்தாலும் குழந்தைக்கு நான்கு, ஐந்து வயதுகளில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக அதிகரிக்கின்றது.

அதன் பின்னர் அவன் முகம் கொடுக்கும் வேதனை, அவமானம் ஒரு வாசகனை மன உழைச்சல் அடையச் செய்யும் சந்தர்ப்பங்கள், அழவைக்கும் தருணங்கள். அவமானம் தாங்கமுடியாமல் இறுதியில் தனது இருபத்தோராம் வயதில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்த கதையில் உச்ச உணர்வு நிலையில் மனம் தளருரும் தருணமொன்று வரும் தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவனுக்கு மூக்கு வளர்ந்து கொண்டே போகிறது எத்தனையோ மருத்துவங்கள் செய்து ஆனதொன்றுமில்லை என்ற நிலையில் அவனையும் அவன் பெற்றோர்களையும் ஊரோ காட்சிபொருளாக்குகிறது.

அம்மாவை விட அப்பா நிறைய சகித்து கொள்கிறார் தன் வாரிசுக்காக. ஒரு சந்தர்ப்பத்தில் அப்பா செய்து வந்த வியாபாரம் நொடிக்கிறது. இனி வேலை தேட  வெளியில் அன்றாடம் இருவரும் போகவேண்டிய நிலையில் பையனை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி விட்டு போகிறார்கள்.

வேலைக்கு போனவர்கள் காலையில் சென்றால் இரவாகும் வர. இதற்கிடையில் மூக்கனை பார்க்க சிலர் வர ஆரம்பிக்கிறார்கள்  வேலைக்காரி முதலில் தடுத்தாலும  சில்லறைக்காக சிலரை அனுமதிக்கிறாள் சிலர் சிலகாலத்தில் பலராகினர். பெற்றோர் அறியாமல் அவன் அறைக்கு அனுமதிக்க படுபவர்கள் மூக்கை பிடிப்பது அதை கிள்ளி விளையாடுவதுமாக நாட்கள் கழிகிறது. ஒரு சமயத்தில் தந்தை வேலை முடிந்து பகல் பொழுதொன்றில் வீடு வர வீட்டு வாசலில் மக்கள் கூட்டம் அலைமோத, ஆச்சரியப்பட்டவர் வேலைக்காரியை விசாரிக்க அவள் தனக்கு கொடுக்கும் சம்பளம் போதாமல் இருப்பதால் இப்படி சில்லறைக்காக சிலரை பார்வையாளராக பார்க்க அனுமதி கொடுத்தாக சொல்லி விடுகிறாள். ஆத்திரமடைந்தவர் அவளை துரத்திவிடுகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் தன் பெற்றோருக்குள் சலசலப்பு ஏற்படுவதை உணர்கிறான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் தந்தை ஒரு நாள் வேதனையான தருணத்தை வாசகனுக்கு கொடுக்கும் உச்சநிலை இது நீங்களே வாசித்து பாருங்கள்

“அதற்கு மறுநாள் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க ஆட்கள் வந்திருந்தார்கள். சீருடை அணிந்த ஒரு ஆளும் வந்தார்.கூடவே புதிதாக ஒரு பெயர்ப் பலகையும், அந்த பலகையில்:

நீள மூக்குள்ள பேசும் அதிசய விலங்கு

பார்வை நேரம் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.

இதை பார்த்த உடனே அவன் சுக்குநூறாக உடைந்து போவான் அவ்வளவு அற்புதமான சிறுகதை தோழர்களே கட்டாயம் வாசிக்க வேண்டிய கதை.

தொடர்ந்து தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் மேற்சொன்ன முறையிலான அடக்க முடியாத இதம் இருக்கிறது தொழில்,அதீத காமம், நிர்வாணம், பாம்பாட்டி போன்ற கதைகளின் உள்ளடக்கம் இதுவரை சொல்லாத சுயம் கொண்டது. மறந்து விட முடியாத வாசிப்பு அனுபவம்.

வி எம் ரமேஸ்,
பன்வில.

You must be logged in to post a comment Login