Articles

தற்கொலைக்கு தூண்டும் அழுத்தம் எனும் உயிர்க்கொல்லி

By  | 

தற்கொலை என்பது பிரச்சினைக்கான தீர்வல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். சாதாரமாக பேசித் தீர்த்துக்கொள்ள கூடிய விடயங்களுக்குக்கூட தற்கொலையே முடிவு என்று சிந்திக்கின்றனர்.
கணவன் – மனைவி பிரச்சினையென்றால், ஒருவரை ஒருவர் பழிவாங்க உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
முதலில் தனது உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் உரிமையை யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒரு தடவை போனால் திரும்பி வராததுதான் உயிர். இது தெரிந்திருந்தும் கூட சிலர் தவறான முடிவுக்குள் சென்றுவிடுகின்றனர்.


விலைமதிப்பில்லாத உயிரை மாய்த்துக்கொள்ளுமளவு ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே.
இந்த உலகில் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை. தொட்டதற்கெல்லாம் தற்கொலைதான் முடிவு என்றால், இந்த உலகில் மனிதன் வாழ்வதென்பது சாத்தியமற்றது.
ஏன் தற்கொலை எண்ணம் வருகின்றது? இந்த உலகில் வாழவே முடியாது என்ற முடிவை எதனால் எடுக்கின்றனர்?
தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது, அதிகப்படியான மன அழுத்தம்தான். இந்த மனஅழுத்தம் என்பது ஓர் உயிர்க்கொல்லி என்றே கூறவேண்டும்.
நன்றாக இருப்பவர்களைக் கூட அதிக யோசனையில் ஆழ்த்தி, பித்து பிடித்தவர்களைப் போல் மாற்றிவிடும்.
வாய்விட்டு வெளியில் கூறமுடியாது மனதுக்குள் புதைந்து அழுத்தம் கொடுக்கும் ஏதோ ஒரு விடயம் ஒரு கட்டத்தில் மன அழுத்தமாக மாறிவிடுகிறது.
இந்த அழுத்தம் எனக்கென யாரும் இல்லை, எனது பிரச்சினைக்கு தீர்வே இல்லை என தனக்குள்ளேயே சிந்திக்க வைக்கின்றது.
பிரச்சினை இல்லாத மனிதனே இவ்வுலகில் இல்லை. பிரச்சினை எதுவானாலும், அதை மனதுக்குள்ளேயே வைத்து துன்பப்படுவதை விடுத்து, நெருக்கமானவர்களிடம் அல்லது நமக்கு நம்பிக்கையானவர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்வது மிகவும் ஆறுதலாகவும் ஒரு தெம்பையும் நிச்சயம் கொடுக்கும்.
பிறிதொருவரிடம் மனதிலுள்ள வேதனைகளை பகிர்ந்துகொள்ளும்போது அவர் நல்லதாக நான்கு வார்த்தைகளை சொல்வாராயின், அது எமது மனக்காயங்களுக்கு நிச்சயம் ஒரு மருந்தாக இருக்கும்.
சில சந்தர்ப்பங்களில் எதிரில் உள்ளவரும் அவரது பிரச்சினைகளை நம்மிடம் கூறுவர். இதன்போது நம் பிரச்சினை எதுவுமே இல்லை எண்ணத் தோன்றும்.
வாழ்க்கையே ஒரு போராட்டகளம்தான். அதில் ஒவ்வொரு விடயததையும்; போராடித்தான் பெற வேண்டும். ஏதிர்பார்த்தது கிடைக்காது என்றால் முடியுமானவரை போராடவேண்டும். அதைவிடுத்து, எனக்கு இந்த உலகத்தில் வாழத்தகுதி இல்லை, என்ற விரக்தி நிலைக்கு சென்றுவிடுகின்றர்.
சிலர் வாழ்க்கையோடு போராட பயப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் போராட முடியாமல், அதை முடிவுக்கு கொண்டுவந்து விடுகின்றனர். நீங்கள் பெரிய வீரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை… தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுத்து கோழையாகிவிடாதீர்கள்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் நிம்மதியாக கண்மூடிவிடுகின்றனர். ஆனால், அதற்கு பின் தனது பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகளின் நிலைமையை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெற்றெடுத்து, வளர்த்து, கல்வி புகட்டிய ஒரு மகளின்ஃமகனின் உயிர் அற்பமாக செல்வதை எந்தப் பெற்றோரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்?
இன்னொரு முக்கியமான விடயம்;, ஒருவர் எம்மிடம் வந்து தனது மனக்குறைகளை வெளிப்படுத்தினால் ஒரு நிமிடமாவது அதைக் காது கொடுத்து கேட்கவேண்டும். ஒருபோதும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது.
ஏதோ மன ஆறுதல் கிடைக்கும் என்று எண்ணித்தான் நம்மிடம் வெளிப்படுத்துகிறார்கள். அதை மனதில் வைத்து, அவர்களின் பேச்சுக்கு ஒரு மரியாதையையாவது கொடுக்க முயற்சிக்கவேண்டும். அதேபோல் முடியுமானவரை ‘நீ அப்படி செய்தது தவறு, நீ இப்படி செய்தால் நல்லது’ என நாம் அவருக்கு புத்தி சொல்வதை விடுத்து, ‘விடு பார்த்துக்கொள்ளலாம்’ என தைரியத்தைக் கொடுத்தால், அதுவே சிறந்தது. நாம் அவருக்கு புத்திமதி கூறினால், மீண்டும் மீண்டும் அவரது மனம் காயப்படக்கூடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் எம் முன்னால் தெரிந்த யாராவது தனிமையில் இருக்கக் கண்டாலோ அல்லது கவலையாக இருப்பது போல் தெரிந்தாலோ அவர்களிடம் நிச்சயம் போய் பேசவேண்டும்.
‘ஏதேனும் கூறவேண்டுமென்றால், என்னிடம் கூறுங்கள்’ எனலாம். அப்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லை. அவர் விரும்பினால் கூறுவார். ஏனெனில், சில நேரங்களில் ‘யாராவது, என்ன பிரச்சினை என்று கேட்கமாட்டார்களா? நான் இருக்கிறேன் தைரியமாக இரு என்று கூறமாட்டார்களா’ என நிச்சயம் அந்த மனம் ஆறுதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும்.
ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஆறுதலாக இருப்பது மிகப்பெரிய விடயம். “நேற்று கூட அவரப் பாத்தேனே நல்லாதானே இருந்தாரு. தனியா உக்காந்திருந்தாறே. போய் பேச நெனச்சேன்… பேச கிடைக்கல. இன்னைக்கு இப்படி தற்கொல செஞ்சிக்கிட்டாரே. பாவம்! நேத்து நா அவரு கூட பேசியிருக்கலாம்” இப்படி கூறும் நிறைய பேரை பார்த்திருக்கிறோம்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு? தேவையான நேரத்தில் அவருக்கு ஓர் ஆறுதல் வார்;த்தை கூட கூறவில்லை. உயிரற்ற உடலுக்கு நாம் அழுதாலும் தெரியாது, பேசினாலும் விளங்காதில்லையா?
எனவே, முடியுமானவரை மனிதனுக்கு மனிதன் தோள் கொடுப்போம். குறிப்பாக, கட்டிளமைப்பருவத்தினர், கடன்களைப் பெற்று அதை செலுத்த முடியாதவர்கள், நினைத்ததை செய்யமுடியாமல் போனவர்கள், நியாயமான அன்பு சரியாக கிடைக்காதவர்கள்… இவர்கள்தான் அதிகளவில் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.
பணத்தை சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம், நினைத்த காரியத்தை நேரம் வரும்போது செய்துவிடலாம். அதற்காக தற்கொலைக்கு தயாராகிவிடுவது மிகவும் தவறான, முட்டாள்தனமான செயல். காதலில் தோற்றுவிட்டால் உடனே தற்கொலை முடிவு. ஏன் இந்த விபரீதமான முடிவு? வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.
முதலில் தைரியத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
எனவே, தற்கொலை எண்ணங்களை தவிர்த்து. நாம் சோர்ந்துபோகும் நேரங்களில் முடியுமானவரை நமக்குள் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, பிறரிடத்திலும் அவற்றை பகிர்ந்துகொள்வோம்!

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login