Articles

தானாய் அசைகிறது அது மட்டுமே தெரிகிறது

By  | 

பயம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் உள்ளது. எனினும், பலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சிலர் வெளிப்படுத்திவிடுகின்றனர்.

பயத்தை வெளிக்காட்டுவதில் எதுவித தவறும் இல்லை.

குறிப்பாக, பேய் என்றால் யாருக்கெல்லாம் பயம் என்று கேட்டால், பலரும் பயமில்லை என்றுதான் கூறுவார்கள். ஆனால், எங்கோ ஓரிடத்தில் தனித்து விடப்படும்போது உலகிலுள்ள எல்லா அச்சமான சம்பவங்களும் தன்னை சுற்றி மட்டுமே இடம்பெறுவதாய் தோன்றும்.

நமக்குள் ஏற்படும் பேய் என்ற அச்சத்தை ‘இப்படித்தான்’ என பொதுவாக  அடையாளப்படுத்த முடியாது. எனினும், நாம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உருவம் கொடுத்துவிடுகின்றோம்.

அவ்வாறு உருவம் கொடுக்கப்பட்ட ஒரு சம்பவம்தான் இது…

பொதுவாக வீட்டில் தனித்திருக்கும்போது ஏதேனும் ஒரு பொருள் தானே விழும். காரணம், நாமே அந்த பொருளை சரியாக வைத்திருக்கமாட்டோம். எனவே, அந்த பொருள் ஒரு சந்தர்ப்பத்தில் சரிந்து விழும். ஆனால், நம் மனமோ ‘இது எப்படி தானே விழுந்தது’ என்பதாய் சிந்திக்கும்.

இதே போன்று மாலை வேளைகளில் காரியாலயம் முடிந்து அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளியில் சென்று திரும்பும்போது வீட்டில் யாருமில்லை என்றால், இருளாக இருக்கும். கதவை திறந்து வைத்துவிட்டு, ‘லைட்டை போட்டுவிட்டு வரலாம்’ என்றால், நாம் லைட் போடுவதற்காக சுவீட்ச் இருக்கும் திசை நோக்கி தட்டுத் தடுமாறி, காலை இரண்டடி எடுத்து வைக்கும்போதே கதவு ‘படார்’ என சாத்திக்கொள்ளும். அப்போது நமக்கு ஒரு கணம் ‘திக்’ என்றாகிவிடும். நாம் லைட்டை போடுவதற்கு முன் எத்தனையோ பேய் பட காட்சிகள் நம் கண் முன்னே வந்து போய்விடும்.

அதுவரை ‘வீட்டுக்குப் போனதும் இவ்வளவு வேலையை செய்தாக வேண்டும்’ என சிந்தித்த மனது, அதன் பின்னர் ‘கதவை சரியாகத்தானே திறந்து வைத்தேன்… எப்படி தானே மூடியது…’ என்பதை மட்டுமே சிந்திக்கும்.

இப்படி நாம் சிறிய சத்தம் தொடக்கம் அசையும் பொருள் வரையில் பேயை சித்திரித்து அச்சம் கொள்கிறோம்.

என் தோழியின் வீட்டில் குழந்தைகள் விளையாடும் குதிரை இருக்கை இருந்துள்ளது. அவளுக்கு அதனை பார்க்கும்போதெல்லாம் பேய் படங்களில் தானே அசையும் குதிரை இருக்கை நினைவுக்கு வருமாம். அதனால் அவள் அதனை கண்ணுக்கு அகப்படாதவாறு எடுத்து வைத்துள்ளாள்.

எனினும், ஏதோ ஒரு காரணமாக அந்த குதிரை இருக்கை அடிக்கடி அவள் கண்ணுக்கு படும்படியாக இருந்துள்ளது.

இந்நிலையில் அவளுடைய மகள் வளர்ந்துவிட அந்த குதிரை இருக்கை அவளுடைய படுக்கை அறைக்கே வந்துவிட்டது.

இதனால் தோழிக்குள் இருந்த அச்சம் மெல்ல மெல்ல குறைந்ததே தவிர காணாமல் போகவில்லை.

எப்போதாவது தோழி அவசரமாக அறைக்குள் வரும்போது குதிரை ஆடிக்கொண்டே இருக்குமாம். பல சந்தர்ப்பங்களில் தோழி இது தொடர்பில் அவள் கணவரிடம் கூற, அவரோ அவளை பார்த்து சிரித்துவிட்டு இருந்துவிடுவார்.

ஒருநாள் எல்லோரும் வெளியில் சென்றிருக்க மகள் அறையில் நித்திரையாக இருந்துள்ளாள்.

சமையலறையில் வேலையாக இருந்த தோழிக்கு அறையில் ஏதோ சத்தம் கேட்க, மகள்தான் எழுந்துவிட்டாரோ என்ற எண்ணத்தில் சென்று எட்டிப் பார்த்தவளுக்கு அறையில் குதிரை இருக்கை ஆடுவது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.

இதயத்துடிப்பு அதிகரிக்க, உடல் படபடக்க, கால்களை அவளால் நகர்த்த முடியவில்லை. வியர்த்து வழிய அவள் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

அவளுக்கு தன்னை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்யம் சுழல்வதாய் ஓர் உணர்வு.

அதனிடையே மகளும் எழுந்துவிட நிகழ்நிலைக்கு வந்தவள், மகளை மடியில் இருத்தியபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

நேரம் மாலை 6 மணியை கடந்திருந்தது. கணவர் இன்றாவது நேரத்துக்கு வரலாமே என மனம் அடித்துக்கொண்டது.

சரி… விடயத்தை கூறலாம் என எண்ணி கைப்பேசிக்கு அழைப்பெடுத்தால், இணைப்பு கிடைக்கவில்லை.

வெளியில் என்றும் இல்லாதவாறு ஒருவித இருட்டு. வீட்டினுள் எல்லா மின்விளக்குகளையும் எரியவிட்டவள், மகளுடன் வாயில் படியிலேயே அமர்ந்துவிட்டாள்.

எனினும், அவளது அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் மின் தடை ஏற்பட்டது.

வெளியிலும் உள்ளேயும் இருள் சூழ, அவளுக்குள்ளும் அதே இருள் பற்றிக்கொள்ள, அவள் அரண்டு போனாள்.

வீடு வந்த கணவனுக்கு அவள் அச்சம் ஏதோ உணர்த்த, அவளை சமாதானம் செய்தார். அன்றிரவு அறைகுறையாக உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்றால், அவளுக்கு அந்த குதிரை இருக்கை மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.

ஒரு கட்டத்தில் கணவரின் நிழலை கண்டே அவள் அச்சமுற ஆரம்பித்தாள்.

அன்று நித்திரையின்றி அமர்ந்திருந்த மனைவிக்கு துணையாக அமர்ந்திருந்தவருக்கு அவளின் பயத்தை போக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, குதிரை இருக்கை காற்றின் வேகத்துக்கு ஆடுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். எனினும், அவள் அதனை ஏற்றதாக தெரியவில்லை.

மறுநாள் அவளை அழைத்துக்கொண்டு தனக்கு தெரிந்த ஒரு முக்கியஸ்தரை சந்தித்தார். தோழியிடம் பேச்சு கொடுத்த அந்த நபர்,

“இவர் அந்த குதிரை இருக்கை தொடர்பான காட்சிகளை அதிகம் பார்த்திருக்கிறார்… அதனால் அதனை நேரில் பார்க்கும்போது அந்த காட்சிகளே அவரது கண்ணுக்குத் தெரிகின்றன… அதனாலேயே பயப்படுகிறார். குதிரை இருக்கையை இனி இவர் காணும் வகையில் வைக்கவேண்டாம்” என சில நம்பிக்கை வார்த்தைகளை கூறி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு குதிரை இருக்கை அப்புறப்படுத்தப்பட்டது. எனினும், அச்சம் போகவில்லை.

இறுதியில் வீட்டையே மாற்றினார்கள்.

என்னதான் மாறினாலும், தற்போதும் தோழிக்கு குதிரை இருக்கை என்றால் பயம்தான்.

-ஸ்ரீபா

You must be logged in to post a comment Login