Stories

திருப்பங்கள் – 1 ஆறாம் நாள்

By  | 

எழுத்தாளர் கெலும் வெலிகம அவர்களின் ‘ஜீவிதய வெனஸ் கரன கதா’ எனும்  நூலிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு…

தமிழாக்கம்: எஸ்.வை. பெணில்டஸ்

செயலாக்க உதவி: ரெனோல்ட் ரிகான்

‘சொல்லக் கவலையாய் இருக்கிறது… இன்று காலை அவன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்…”

சில மனிதர்கள் கவலையில் இருந்தாலும் கூட ஏனையோரை சந்தோஷப்படுத்த சகல விதமான முயற்சிகளையும் எடுக்கிறார்கள். அவ்வாறான உன்னதமான மனிதர்களை நாம் மிக மிக அரிதாகவே சந்திக்கின்றோம். எனினும்,அவ்வாறான சில மனிதர்கள் இவ்வுலகில் அரிதாகவே இருக்கிறார்கள் என்பது என்றுமே மறுக்க முடியாத உண்மையாகும்.

சரியாக இன்னும் ஏழு நாட்களில் தூக்கிலிட்டுக் கொல்வதற்காக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு பயங்கர கைதியை அவன் தப்பித்து செல்லா வண்ணம் பலத்த காவலில் வைப்பதற்காக தொலைவிலுள்ள ஒரு பாதுகாப்பான சிறைச்சாலைக்கு கொண்டு சென்றார்கள். அக்கைதியின் இரு கண்களையும் கறுப்புப் துணியொன்றினால் மறைத்து, அடைமழை பெய்துகொண்டிருந்த காரிருளில் அதிகாரிகள் அக்கைதியைக் கொண்டு சென்றனர். அதனால், குறித்த அந்தச் சிறைக்குச் செல்லும் வரையில் அவனால் அக்கம்பக்கத்திலிருந்த எதனையும் பார்க்க முடியவில்லை. குறித்த அந்தச் சிறைச்சாலையை அடைந்தவுடன் அக்கைதியை பலத்த காவலுடைய சிறைக்கூடமொன்றினுள் தள்ளிவிட்டு, சிறைச்சாலை அதிகாரிகள் சென்றுவிட்டனர். பண்டைய கால கட்டடக்கலைக்குச் சான்று பகரும் வண்ணம் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த இருண்ட அந்த சிறைக்கூடத்தினுள்; இருந்தவண்ணம் அவன் தன் வாழ்க்கையில் எஞ்சியிருந்த ஏழு நாட்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.

“நண்பா எப்படிச் சுகம்?”

அந்த சிறைச்சாலையில் இவன் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட அறைக்கு அடுத்த அறையில் இருக்கும் கைதி, புதிய கைதியிடம் அன்பு கலந்த தொனியில் அவ்வாறு கேட்டான்.

அந்த கேள்வியில் வெளிப்பட்ட குரலானது பாலைவனத்திலே மிக அரிதாக விழுந்த பனித்துளி ஒன்று கொண்டுவரும் சுகத்தை புதிய கைதியின் செவிகள் ஊடாக அவனது மனதுக்குக் கொண்டு வந்தது. அக்கேள்வியுடன் ஆரம்பித்த உரையாடலினூடாக அவர்களிருவரும் நெருங்கிய நண்பர்களாக அந்த இராப்பொழுதினிலேயே மாறினார்கள். அதனால் இவ்விரு கைதிகளும் அன்றிரவு முழுவதும் அவர்களின் வாழ்க்கையின் கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி திறந்த மனதுடன் கதைத்துக்கொண்டார்கள்.

“உனக்குத் தெரியுமா, நான் இருக்கிற W101 என்னும் இந்தச் சிறைக்கூடத்திலே மிகச்சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதனால் எனக்கு வெளியே நடக்கின்றவற்றை இலேசாகப் பார்க்க முடிகின்றது. நான் வெளியே தெரிகின்றவற்றைப் பார்த்து உனக்கு சொல்கிறேன். அப்போது உனக்கு தனிமையாக இருக்காது…” பழைய கைதி கூறலானான்.

“அது ஒரு சிறந்த வேலை. நான் மிகப் பயங்கரமான மனிதன் என நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமையினால், நான் கடந்த 10 வருடங்களாக இது போன்ற இருள் நிறைந்த சிறைச்சாலைகளில் தான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். அதனால், வெளியே என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி நான் அதிக வருடங்களாக பார்த்ததேயில்லை. இப்போது வானத்தின் நிறம் கூட எனக்கு மறந்துவிட்டது போலிருக்கிறது…”

புதிய கைதி தன்னுடைய கண்களிலிருந்து நிரம்பி வழிந்த கண்ணீரைத் தன் கைகளினால் துடைத்தவாறு கூறினான். அவன் தனக்கு வாழ்க்கையில் எஞ்சியிருந்த ஏழு நாட்களை எவ்வாறு கழிப்பது என்பது பற்றி சிந்தித்தவாறே அவ்விரவில் தூங்கலானான்.

அன்று அதிகாலையிலே நித்திரை விட்டு எழுந்த W101 சிறைக்கூடத்திலிருந்த கைதி அவனுடைய அறையிலிருந்த துவாரத்தினூடாக அவனுக்கு விளங்குகின்றவற்றை மற்றைய கைதிக்கு அழகாகக் கூற ஆரம்பித்தான்.

“நண்பனே! இப்போது நேரம் காலை ஏழு மணியளவில் இருக்கும். வெள்ளை நிற ஆடையணிந்த வெண்கொக்குகள் போன்ற சிறு பிள்ளைகள் அவர்களின் தாய்மாரின் கைகளைப் பிடித்துக்கொண்டு பாடசாலைக்குச் செல்கின்றார்கள். தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்கிறார். ஆஹா! குறும்புத்தனமாக இரண்டு சிறுவர்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ள சண்டையிடுவது எனக்கு தெரிகிறது. ஆம்… அவர்கள் ஒரு மாங்காய் பழத்துக்காகத்தான் சண்டையிடுகிறார்கள்…” இவ்வாறாக அக்கைதி திரைப்படம் போல மனதிலே காட்சியொன்றாகப் பதியுமாறு தன்னுடைய சிறைக்கூடத்திலிருந்த சிறிய துவாரத்தினூடாக கண்டவற்றை புதிய கைதிக்கு கூற ஆரம்பித்தான். இன்னும் ஏழு நாட்களில் மரணத்துக்கு நியமிக்கப்பட்டிருந்த புதிய கைதி தனக்கு சொல்வதற்கொன்று எஞ்சியில்லாததனால் தன் கண்களை மூடிக்கொண்டு அக்காட்சிகளை ஆவலுடன் நினைத்துப் பார்த்தான்.

“நண்பனே! இப்போது உனக்கு என்ன தெரிகிறது?” அடுத்த நாள் இரவு புதிய கைதி தனக்கு அடுத்த சிறைக்கூடத்திலிருந்த மற்றைய கைதியிடம் கேட்டான்.

“இன்று போயா தினமாதலால் நிலா பூரணமாகத் தோற்றமளிக்கிறது. அனைத்துப் பிரதேசங்களும் நிலவொளியினால் நிறைந்திருக்கிறது. தூரத்திலிருக்கிற மலைகளில் நிலவொளி விழுந்துள்ளதால் அப்பிரதேசம் சிமிட்டும் ஓவியம் போலிருக்கிறது.”

இவ்வாறாக கைதி நிலா மற்றும் நிலவொளி விழுந்த சுற்றுப்புறச் சூழலின் நிலக்காட்சிகள் பற்றி மேலும் பலவற்றை கூற ஆரம்பித்தான். புதிய கைதி அவற்றை மிகவும் ஆவலுடன் கேட்டு இரசித்தான். இவ்வாறாக மூன்று நாட்கள் கழிந்து சென்றாலும் கூட அவனுக்கு அது விளங்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் இரசிக்க முடியாத அதிகளவான விடயங்களை இரசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என எண்ணினான்.

“நண்பனே! இப்போது வெளியே தூறல் மழை பெய்கிறது. இளம் காதல் ஜோடி ஒன்று இளநீல நிறக் குடையொன்றுக்கடியில் செல்வது இலேசாகத் தெரிகிறது. அப்பெண் வெள்ளையும் மஞ்சளும் கலந்த சட்டை ஒன்றை அணிந்திருக்கிறாள். அதனால் அவள் மல்லிகை மலரைப் போல காட்சியளிக்கிறாள். இளைஞன் அந்த அழகிய தன்னுடைய காதலி மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் போலிருக்கிறது. நானும் என்னுடைய இளம் வயதில் என் காதலியுடன் இவ்வாறு பயணமொன்று சென்றது, எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. ஆனாலும் அவள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை” என்றான்.

அடுத்த நாளிலும் பழைய சிறைக்கைதி தனக்குத் தெரிகிற புதுமையான விடயங்களை மிக அழகாக பார்த்து கூற ஆரம்பித்தான். சம்பவங்களை மிக அழகாக விவரிப்பதற்கு அவனுக்கு மிகவும் புதுமையான ஆற்றலொன்றிருந்தது.

நாள் முழுவதும் வெளியே நடக்கும் விடயங்களை தொடர்ந்து விவரித்துக் கூறியமையால், அறியாமலேயே ஐந்து நாட்கள் உருண்டோடிச் சென்றன. இன்னும் இரண்டு நாட்களில் தான் இறக்கப் போவதாக அறிந்திருந்தாலும் கூட, கைதியின் மனம் பெரும் மாற்றத்துக்குள்ளாகி இருந்தது. இப்போது அவனது மனம் பாரிய சுமையொன்றிலிருந்து விடுபட்டு காற்றை போல இலகுவாக மாறியமையை உணரலானான். அதாவது, அவன் மனதளவில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

ஆகவே, அவன் இப்போது சாவதற்கு பயப்படவில்லை. இன்னுமொரு நாளை விட்டுப் பிரிய ஆயத்தமாக இருந்தான். இருப்பினும் ஆறாவது நாள் முழுவதும் அடுத்த சிறைக்கூடத்திலிருந்த கைதியிடமிருந்து ஒரு வார்த்தை கூட கேட்காமையினால் அதிகாரியிடம் அதைப் பற்றி கேட்டான்.

“சொல்ல கவலையாய் இருக்கிறது. இன்று காலை அவன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்” என்று அதிகாரி கூறினார்.

“ஆனாலும் சேர்…. அவர் எனக்கு அதைப் பற்றி ஒன்றும் கூறியிருக்கவில்லையே! சேர்,என்னை அவர் இருக்கிற சிறைக்கூடத்தினுள் போடமுடியுமா?” புதிய கைதி விம்மி விம்மி அழுதவாறே கேட்டான்.

“ஏன்?” என அச்சிறை அதிகாரி அப்புதிய கைதியிடம் கேட்கவே, அக்கைதி “W101 சிறைக்கூடத்தில் சிறிய துவாரமொன்று இருக்கிறது. அந்தச் சிறு துவாரத்தினூடாக வெளிச்சூழலை இலேசாக பார்க்கமுடியும் என்று அவர் எனக்கு கூறியுள்ளார். வாழ்வதற்காக எஞ்சியுள்ள இந்த இரண்டு நாட்களில் வெளியே நடக்கும் விடயங்களைப் பார்த்துக்கொண்டு வாழ நானும் ஆசைப்படுகிறேன். அவர் கடந்த சில நாட்களில் அந்த சிறிய துவாரத்தினூடாக அவருக்கு காணக்கிடைத்த விடயங்களை எனக்கு அழகாக விபரித்தார். அதனால் காலம் கடந்து சென்றதே எனக்கு விளங்கவில்லை. என்னை செத்து செத்து இருக்கவிடாமல், வாழ்வதற்கு அவர் சொன்ன இனிமையான விடயங்கள் பெரிய பலமாக அமைந்தன சேர்” என்றான்.

கைதி அவ்வாறு கூறும்போது சிறைச்சாலை அதிகாரியின் கண்களின் ஓரமாக கண்ணீர்த் துளிகள் வேகமாக விழத் தொடங்கின.

“சேர், ஏன் அழுகிறீர்கள்?” சிறைக்கைதி கேட்கலானான்.

“அவருக்கு இப்போது 10 வருடங்களாக கண்பார்வை இல்லை. மேலும், நீ சொல்வது போல ஒரு துவாரமும் இந்த W101 சிறைக்கூடத்தில் இல்லை. இங்குள்ளவற்றினுள் மிகவும் இருண்டதும், அழுக்கானதுமான சிறைக்கூடம் அதுதான். அவர் உன்னைத் தேற்றுவதற்காக பொய் கூறியிருக்கிறார். இந்தச் சிறைக்கூடத்துக்கு கொண்டுவந்து விடும் எல்லோருக்கும் அவர் இவ்வாறு பொய்களைச் சொல்லி மனதைத் தேற்றுவார். அது அவருடைய குணம். எவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் நல்ல வேலையொன்றை செய்திருக்கிறார்.”

சிறைச்சாலை அதிகாரி கூறியதை ஒரே தடவையில் நம்பமுடியாத கைதி, அவனுக்கு அந்த ஆழமான குரலினால் மாத்திரம் நெருங்கிய புது நண்பனின் உருவம் எவ்வாறு இருக்கும் என்று மனதால் சிந்திக்க முற்பட்டான். அவனது மனதுக்கு வேறெந்த மனித உருவமும் தோன்றவில்லை என்பதுடன், அவர் கடவுளைப் போன்ற ஒருவர் என மனதினால் ஆழமாக உணர்ந்தான்.

“ஏன் சேர் அவர் அப்படிச் செய்தார்?”

“ம்…….. அவ்வாறான மனிதர்களும் இவ்வுலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் அதிக துக்கத்தை அனுபவித்துக்கொண்டு ஏனையோருக்கு சந்தோஷத்தைப் பகிர்கிறார்கள்.” சிறைச்சாலை அதிகாரி கைதியைத் தேற்றியவாறு அவ்வாறு கூறினார்.

இதமான பாடல்களால் இரசிகர்களின் இதயங்களை அன்பால் நிரப்புகின்ற அனேக பாடகர்களும் பாடகிகளும் தங்களின் பாடலொன்றைக் கூட இரசித்துக் கேட்பதில்லை. திரைப்படத்தில் வரும் அனேக காதலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு கிடைக்காமல் போகிறது. அழகழகான யுவதிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடனமாடும் சில சினிமா நடிகர்கள் காதலை இழந்து சதாகாலமும் கவலையில் தவிக்கிறார்கள். பீதோவனின் இனிமையான சங்கீதப் படைப்பு உருவாகியது கூட அவர் முழுமையாக காது கேட்க முடியாமல் இருந்த காலத்திலாகும். இசை நிகழ்ச்சிகளின் முடிவில் இரசிகர்கள் சந்தோஷ மிகுதியால் எழுப்பும் கரகோஷங்கள் கொஞ்சம் கூட அவரின் செவிகளை அடைவதில்லை. அதனாலேயே அவர் அனைத்து இசை நிகழ்ச்சிகளின் முடிவிலும் மேடையை நோக்கித் திரும்பாமல், அவர் தன்னுடைய தலையை கீழ்நோக்கி பார்த்துக்கொண்டு அதிக நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார்.

எனினும், பீதோவன் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்துகொண்டிருந்த குறுகிய காலத்திலேயே கால காலமாக நிலைத்து நிற்கக்கூடிய இசைப்படைப்புக்களை மக்களுக்காக உருவாக்கினார். ஜே.கே. ரௌலிங்கினால் ஹரிபொடர் எனப்படும் மிகவும் பிரபல்யமான நாவல் எழுதப்படுவது அவளது மிதமிஞ்சிய மகிழ்ச்சியை வெளிக்காட்ட அல்ல. மாறாக, கணவன் அவளை விட்டுச் சென்ற பின்னர் தனது பிள்ளையுடன் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவளுக்கு சாவதற்கு எண்ணம் வருகின்ற எல்லா நேரங்களிலும் அந்த கொடுமையான எண்ணத்தை மாற்றுவதற்காக அவள் வித்தியாசமான கதைகளை எழுதத் தொடங்கினாள். அதன் விளைவாகத்தான் உலகில் அன்றிலிருந்து இன்றுவரை அதிகளவிலான மக்கள் வாசித்த நாவலான ஹரிபொடர் உருவாகியது. அவர்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் தமக்குள் அதிக கவலைகளை மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு ஏனையோருக்கு சந்தோஷத்தினை பகிர்ந்தளிக்கிறார்கள்.

You must be logged in to post a comment Login