Articles

தீபாவளி 2020: தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது?

By  | 

இந்துக்களின் பண்டிகைகளில் அதிக எதிர்ப்பார்ப்பை உடையது தீபாவளி என்பதால், கொண்டாட்டமும் பெரிதாக தானே இருக்கும். எப்போது தீபாவளி வரும் என்று காத்திருந்ததற்கான பலன் வந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு ஒட்டுமொத்த நாட்டின் செயல்பாட்டையும் உறைய செய்திருந்தாலும், சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், தீபாவளி கொண்டாட்டத்திற்கு அது தடையாக அமையாது என்றே கூறலாம். இருந்தாலும், அவரவர் வீடுகளில் இருந்தபடியே குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இந்த தீபாவளியை கொண்டாடலாம் அல்லவா?

தீப திருநாள் அல்லது தீபாவளி பண்டிகையானது நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பதினான்கு ஆண்டு கால வன வாசத்திற்கு பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதைக் குறிக்கும் நாளாகவும் இது கூறப்படுகிறது. மறுபுறம், மக்களை துன்புறுத்தி வந்த நரகாசுரன் வதைக்கப்பட்ட தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 14
இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையானது நவம்பர் மாதம் 14 ஆம் திகதி, சனிக்கிழமை அன்று வருகிறது. ஆனால், பண்டிகை கொண்டாட்டங்கள் தீபாவளி பூஜை நேரம் தீபாவளி நாளில் லட்சுமி தேவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். இந்த புனித நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்வதன் மூலம் எண்ணியது கிட்டும் என்பது ஐதீகம். பலர் தீபாவளி தினத்தன்று லட்சுமி தேவியை வேண்டி நோன்பு நோற்கவும் விரும்புவார்கள்.
லட்சுமி பூஜைக்கான முகூர்த்தம் – மாலை 05:28 மணி முதல் 07:24 மணி வரை

தீபாவளியின் முக்கியத்துவம்
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது, அவரை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் இல்லங்களை விளக்குகளை ஏற்றி வரவேற்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தை நினைவு கூறும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளாகவும் தீபாவளி கூறப்படுகிறது.

நரகாசுரன் என்பது அவனுடைய உண்மையான பெயர் கிடையாது என்றும், மக்களுக்கு நரகத்தின் அனுபவத்தை வழங்கியதாலேயே அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. அத்தகைய நரக அனுபவத்தை வழங்கிய அசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை, மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.

கொண்டாடும் முறை
தீபாவளி தினத்தன்று, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கங்கா குளியல் என்றழைக்கப்படும் குளியலை முடித்தவுடன் வீட்டில் செய்த பலகாரங்களை சாமிக்கு படைத்தும், வாங்கிய புத்தாடைகளை சாமிக்கு முன்பு வைத்து வணங்கியும் வழிபட வேண்டும். பின்னர், புத்தாடை உடுத்து பட்டாசு வெடித்து, பலகாரங்களை உண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக சொந்த பந்தங்களுடன், நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

வீட்டு அலங்காரம்
‘தீபங்களின் திருவிழா’ என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நாளில் மண் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வீட்டை அலங்கரிப்பர். மேலும், தீபாவளியின் முக்கிய அலங்காரம், வீட்டு வாசலில் வண்ணங்கள் நிறைந்த கோலமிடுவது தான். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களுக்கு பரிசு, உலர்ந்த பழங்கள் மற்றும் இனிப்புகளுடன் தீபாவளியில் வாழ்த்துவது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

வழிபாட்டு முறை
லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் செய்வதுண்டு. தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் விஷேசமான ஒன்று. அதுமட்டுமல்ல, தீபாவளி தினத்தன்று அன்னபூர்ணா ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதன் மூலம், வீட்டில் வறுமையும், பசியும் ஒருபோதும் அண்டாது என்பது நம்பிக்கை.

அன்னபூர்ணா ஸ்தோத்திரம்
அன்னபூரணியின் அருளை பெற உதவும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்:
“நித்யானந்தகரீ வராபயகரீ
ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ
ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ
காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷஃம்தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதான்னபூர்ணஸ்வரீ”

 

You must be logged in to post a comment Login