Articles

தொடரட்டும் அந்த நாள் நட்பு!

By  | 

நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் 50 ஆண்டுகள் கழித்து ‘இதுவரை என்ன பெற்றிருக்கிறோம்’ என தன்னையே கேட்டுக்கொண்டால், நண்பர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

உலகில் பெற்றோர், உறவினர், காதலி ஏன் கல்வி அறிவுகூட இல்லாமல் வாழமுடியும். ஆனால், ஒருவருக்கென்று குறைந்தது ஒரு நண்பராவது இல்லாமல் இருக்கமுடியாது.

பெற்றோர், உறவினர்களுக்கு அடுத்தபடியாக நம் வாழ்க்கையில் அங்கம் வகிப்பவர்கள் நண்பர்கள் மட்டும்தான்.

‘நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடின் ஏழைதான்’ என யங் என்ற அறிஞர் கூறுகின்றார். பள்ளிக் காலங்களில் மாணவர்கள் ஒன்றாக சாப்பிடும்போது தட்டுகளில் அவரவர் வீட்டு உணவுகள் பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இதயங்களும் தான்.

தாய், தந்தையை விடவும் அனேகமாக நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. ‘உயிர் காப்பான் தோழன்’ என்பார்கள். தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. என் உயிர்க்காதலி என்றாலும், என் உயிர் நண்பன் என்பதில் தனி சக்தி வாய்ந்த மருந்து உள்ளது.

பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே.

மாதா, பிதா, குரு, தெய்வம்  என்ற வரிசையில் நண்பர்களையும் இணைப்பதில் எவ்வித தவறுமில்லை.

‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பதே நட்பு’ என்கிறார் வள்ளுவர். பல்லாண்டுகளுக்கு முன்பே அவர் சொன்ன வார்த்தைகள் நட்புக்கு இலக்கணம் சொல்கிறது. நண்பர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என எல்லை கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்களே. நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல் நமது தவறுகளை தட்டி கேட்கும் தகப்பனாக மாறும் இயல்பை உடையவர்கள்.

நட்பு என்பது மின்விசிறி அல்ல. அது இயற்கை காற்றைப் போன்றது. அதற்கு மின் தடையே வராது. என்னதான் நமக்கு பிரச்சினை என்றாலும் மனதுக்குள்ளே அதை பூட்டி வைத்தால், அது நம்மை நோயாளியாக்கிவிடும். ஏனெனில், தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேசவும் அளவு உண்டு. ஆனால், இதயத்தின் ஆழத்திலுள்ள உண்மைகளை  ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பர்களிடம் மட்டுமே. பெற்றோர்களிடமோ ஏனையோரிடமோ கூறமுடியாத பலவற்றை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

‘உன் நண்பனை பற்றி சொல். உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்பார்கள். நல்ல துணையை போல நல்ல நண்பன் கிடைப்பதும் ஒரு வரமே. பெரும்பாலும் எம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை உயிர் நண்பனாக மதிக்கிறோம். அவர்களிடமே எம் ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம்.

நட்பின் வலிமை பற்றி நற்றிணை பாடல் ஒன்று கீழ்கண்டவாறு கூறுகின்றது.

‘முந்தை இருந்து கட்போர் கொடுப்பின்

நஞ்சம் உண்பர் நனிநாகரிகர்’

நண்பர்கள் கொடுப்பது நஞ்சாக இருப்பினும், எவ்வித சந்தேகமுமின்றி உடனே உண்பது நல்ல நட்பின் அடையாளமாக கருதப்படுகிறது.

நட்பு என்பது ஒருவிதமான உணர்தல். நம்மை அறியாமலேயே நம்முள் புகும் பரவசம். பழைய பள்ளிக்கால நண்பர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகத்தை நவீன உலகில் நாம் பெற்றிட முடியாது.

இன்றைய அவசர உலகில் நாம் அருகில் இருப்பவர்களோடுகூட நட்பு பாராட்ட நேரம் ஒதுக்குவதில்லை.

சம்பாதித்த செல்வங்களை எல்லாம் இழந்து நின்றாலும், எம்மோடு இருந்து ஆறுதல்படுத்தி, எமக்கு நம்பிக்கையூட்டும் நண்பர்கள் கிடைப்பது பெரும் வரமே.

இன்று அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என ஒருபடி மேலே சென்று முகநூல் நண்பர்கள் என்று உலகம் நட்பால் விரியத்தொடங்கியுள்ளது.

தினமும் நாளிதழ்களில் பல பிரபலங்கள் பெரிய பெரிய நிலைக்கு வரக் காரணமாக தம் நண்பர்களை குறிப்பிட்டு பேசியிருப்பார்கள். அதேபோல திருட்டு, கொலை, கற்பழிப்பு என ஈடுபடுபவர்களும் நண்பர்கள் என சொல்லிக்கொள்பவர்களாக காணமுடிகிறது. ஆகவே, நட்புதான் பெரும்பாலான நேரங்களில் எம்மை நிர்ணயிக்கிறது.

‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு’

நல்ல நண்பன் எதையும் எம்மிடம் எதிர்பார்க்காமல் எமக்கு வரும் துன்பங்களை துடைப்பவன் ஆவான்.

நாம் பல பதவிகளையும், அதிகாரங்களையும் பெற்று உயர்ந்து விளங்கலாம். ஆனால், நம்மை உயர்த்திவிட்ட நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

எம்மை ஏணி போல் ஏற்றிவிட்டு, எம் வளர்ச்சியை மெதுவாக விலகி நின்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அப்படியானவர்களை மீண்டும் இணைப்பது என்பது இந்த நவீன உலகில் சிரமமாக இருக்கப்போவதில்லை. நிச்சயமாக எமது வாழ்வின் புதிய தொடக்கமாக அந்த நாள் இருக்கும். எத்தனையோ மகிழ்வினை தரும் தருணங்கள் நமக்கு வாய்க்கும்.

மனிதர்களை நேசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக நமது குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்.

அவர்களின்  நண்பர்களை பற்றி கேளுங்கள். முடிந்தால் அவர்களை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லுங்கள்.

தோளோடு தோள் நின்று தோழமையோடு பேசுங்கள். சின்னச்சின்ன சந்தோஷங்களை நமக்குள் நிகழ்த்திய அந்த நண்பர்கள்தான் நாம் பெரிய சாதனைகள் புரிய காரணமாக இருக்கின்றனர்.

நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்லும்.

தீய நட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து, பின் மறைந்து போய்விடும். எனவே, நல்ல நட்பை நேசிப்போம்.

நண்பர்களை தேடுங்கள்

நலமாக வாழ்வதற்கு!

ஏ.எல். இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login