Articles

நவீன தொழில்நுட்பமும் இன்றைய மனிதர்களும்

By  | 

மனிதன் குரங்கிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து முழு மனிதனானான் என்று கூறப்படுகிறது. மனிதன் எந்தளவு வளர்ந்துவிட்டானோ அதைவிட பன்மடங்கு அவனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது என்று கூறலாம்.

படிப்படியான வளர்ச்சியையும் தாண்டி நிமிடத்துக்கு நிமிடம் புதுப்புது விடயங்களை தற்போது அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. அவை பார்ப்பதற்கு புதுமையாக இருந்தாலும், அதன் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ளும் நாம் அதனால் ஏற்படும் தீமைகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

தற்போதைய சூழலில் அனைவருமே இந்த தொழில்நுட்பம் செலுத்தும் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டார்கள். அனைவரையும் தன்வசப்படுத்திக் கொள்ள புதுப்புது திட்டங்களை வெளியிடுகின்றனர், தொழில்நுட்பத்தின் வாயிலாக. குறிப்பாக, கையடக்கத் தொலைப்பேசி.

அந்த கால மனிதர்கள் எந்த ஒரு தொழில்நுட்ப வசதியுமின்றி, எவ்வாறோ இன்னொருவருடன் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாற்றிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால், தற்போது தொழில்நுட்ப வசதியின்றி ஒன்றும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

ஆலமரத்தடியில் சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டு சக தோழியின் அருகில் அமர்ந்து கல்வி கற்ற காலம் போய், காற்று புகமுடியாத நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கொண்டு கணினியிலும், கையடக்கத் தொலைப்பேசியிலும் கல்வி கற்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

இன்னும் கூறவேண்டுமானால், தப்பித்தவறி யாரிடமாவது கையடக்கத் தொலைப்பேசி இல்லையென்றால், அவரை வேடிக்கையாகவும் இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர் போலவும் பார்க்கின்றது, இன்றைய தொழில்நுட்ப சமுதாயம்.

மனிதனுக்காகத்தான் தொழில்நுட்பம் உருவாகியது. தொழில்நுட்பத்துக்காக மனிதன் இல்லை. நாம் தான் அதை கையாளவேண்டும். தொழில்நுட்பம் நம்மை கையாள  ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.

அதுமாத்திரமின்றி, வெளிவருகின்ற ஒவ்வொரு தொழில்நுட்பமும் எம்மை ஏதோ ஒரு வகையில் ஆச்சரியப்படுத்தவும், அதே சமயம் மிரட்டவும்தான் செய்கின்றது. அதை நன்றாக கையாளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாகத் தெரியும். அதைப் பற்றிய தெளிவில்லாதவர்களுக்கு அது சாபமாகவும், பயமுறுத்தும் ஒரு சாதனமாகவும் தான் காணப்படும்.

எதையுமே நல்ல நோக்கத்துக்கான தேவைக்காக மாத்திரமே பயன்படுத்தவேண்டும். அது ஒன்றே  தேவை என மாற்றிக்கொள்ளக்கூடாது.

தற்கால சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருமே இந்த தொழில்நுட்பத்தின் வலைக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, சில சமயங்களில் தன் அருகில் இருப்பவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது கூட பலருக்குத் தெரிவதில்லை.

குனிந்த தலை நிமிராத பெண்களை பலருக்குப் பிடிக்கும். தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே குனிந்த தலை நிமிராமல்தான் இருக்கின்றனர். அதற்குக்  காரணம், மரியாதை அல்ல… கையடக்கத் தொலைப்பேசியின் மீதான காதல். அதை 24 மணிநேரமும் கைக்குள் வைத்து தலை குனிந்தவண்ணமே செல்கின்றது, பலரின் வாழ்க்கை.

உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், கையடக்கத் தொலைப்பேசியும் தொழில்நுட்பமும் இல்லாமல் ஒரு நாள் இருந்தால்கூட பித்து பிடித்துவிடும் போலிருக்கும்.

மனிதனைப் போல இயந்திர மனிதர்களை (ரொபோ) உருவாக்குகின்றனர். ஆனால், மனிதனே இயந்திரமாக மாறிவருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகத்தான் இருக்கிறது.

இன்னும் காலம் செல்லச் செல்ல என்னென்ன மாற்றங்களையெல்லாம் நாம் சந்திக்க நேரிடுமோ என்பதை நினைத்தால் மனதில் ஒருவித அச்சம் எழத்தான் செய்கிறது.

தொழில்நுட்பத்தை பார்த்து மனிதன் இரசித்து, அனுபவித்த காலம் போய், அதை பார்த்து பயப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login