Q&A

நான் தமிழச்சி!

By  | 

– சொல்லிசைப் பாடகி (Rap) ரத்யா அற்புதராஜா

‘ஆயிரம் கோடி தமிழ் மக்கள் முன்நின்று ‘நான் தமிழ்’ என்பதில் எந்த பெருமையும் இல்லை. அதுவே தமிழ் என்றொரு மொழி உலகில் இருப்பதை அறியாத மனிதர்கள் மத்தியில், மேடையில் நின்றுகொண்டு ‘நான் தமிழச்சி’ என்பதை சாதிப்பதில்தான் உண்மையான பெருமையுண்டு” என உறுதிபடத் தெரிவிக்கின்றார், சொல்லிசைப்பாடகி ரத்யா அற்புதராஜா.

சமகாலத்தில் இலங்கையில் தமிழ் சொல்லிசைப் பாடகியாக பிரபலம் பெற்றுவரும் இவரை மித்திரன் சந்திப்பு பகுதிக்காக நேர்கண்டபோது…

கேள்வி: உங்களது குடும்பப் பின்னணி, கல்வி மற்றும் கலைத்துறை பிரவேசம் குறித்து கூறுங்கள்…

பதில்: அப்பா பெயர் அற்புதராஜா. அம்மா பெயர் வசந்தகலா. நான் பிறந்தது யாழ்ப்பாணம். ஏழு வயது வரை யாழ்ப்பாணத்தில் படித்தேன். அதன் பிறகு உள்நாட்டு யுத்தம் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர நேர்ந்தது. இங்கு ஆரம்பத்தில் தமிழ்மொழியில் படித்தேன். பிறகு ஆங்கில மொழியில் படிப்பைத் தொடர்ந்தேன். அப்பா, அம்மாவின் விருப்பத்துக்காக மேற்படிப்பில் சட்டக்கல்வியை தேர்ந்தெடுத் தேன். அதில் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்து Higher National Diploma in Lawஐ பெற்றுக்கொண்டேன்.

அதன் பிறகு என்னால் அதை தொடர முடியவில்லை. காரணம், ஊடகத்தின் மீது எனக்கிருந்த கனவு. அதை பெற்றோருக்கு விளங்கப்படுத்தினேன். அவர்களும் எனக்கு  ஒத்துழைத்தனர். அடுத்து ஊடகப்பயிற்சி பெற்று, சில ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றினேன். தற்போதும் ஆதவன் வானொலியில் பகுதிநேர வானொலி அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றேன். இந்நிலையில் இங்குள்ள தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பாகிய இசைப்போட்டிகளில் கலந்துகொண்டு பாடியுள்ளேன். அதில் தோல்வியுற்றதன் பின்னர் இந்தியாவுக்கு சென்று, கர்நாடக இசையைப் பயின்றேன். நான் கற்ற இசைக் கல்லூரி மூலமாக மேடையில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் எதிர்பார்த்தளவு சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அதனால் மீண்டும் கல்வியைத் தொடர இலங்கைக்கு திரும்பினேன்.

 

கேள்வி: இங்கு வந்த பின்னர் இசைத்துறை மீது ஆர்வமும், அது சார்ந்த உங்கள் நடவடிக்கைகளும் எவ்வாறு அமைந்தன?

பதில்: எனது தற்போதைய கனவு, உலகளவில் மிகப்பெரிய சொல்லிசைப் பாடகியாக வரவேண்டும் என்பதே. நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எந்த சொல்லிசைப் பாடலை கேட்டாலும், என்னை அறியாமலேயே  மனப்பாடம் செய்துவிடுவேன். அதை நண்பர்களுக்கு பல தடவை பாடிக்காட்டியதுமுண்டு. அப்பொழுதும் சொல்லிசை பாடகியாகும் எண்ணம் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், இறப்பதற்குள் உலகளவில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என எண்ணினேன். அதனாலேயே இதில் எனது ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தினேன்… இன்றுவரையில்! எனது இந்த இசைப்பயணத்தை வெளிநாட்டிலும் தொடரவேண்டும். அதற்குரிய எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகி;ன்றேன்.

கேள்வி: மகிழ்ச்சி. சொல்லிசைத்துறையில் உங்களது முயற்சிகள் எவ்வாறு ஆரம்பமாயின?

பதில்: எனது கனவை 2016இல் முடிவு செய்தேன். அதற்கேற்ப ‘ஆராதனா’ இசைக்கல்லூரியில் எனது இசைப்பயணம் ஆரம்பித்தது. வி.கே.ஜே.மதி என்பவரின் வழிகாட்டலோடு, அவரது இசையில் உருவாகி வெளியான ‘கனவுகள் மெய்ப்படும்’ பாடலே எனது ஆரம்பமாக இருந்தது. அது ஒரு மெல்லி சைப் பாடல். அதிலிருந்து என்னை சிலருக்குத் தெரியவந்தது. நிறைய பாடல்களினூடாக சந்தர்ப்பங்களும் கிடைத்தன. சில ஆங்கில மொழிமூல பாடல்களுக்கும் நான் முன்னுரிமை கொடுப்பதுண்டு. ஆங்கிலப் பாடல்கள் பாடும்போது விமர்சனங்களும் வந்துள்ளன. எனினும், நான் எப்போது சொல்லிசையை தேர்ந்தெடுத்தேனோ, அதன் பிறகுதான் இலங்கை முழுவதிலும், வெளிநாடுகளிலும் பலருக்கு என்னை தெரியவந்தது.

 

கேள்வி: இத்துறையில் உங்களுக்கான வாய்ப்புகளை எவ்வாறு பெற்றீர்கள்?

பதில்: நான் ஓரிரு பாடல்களை பாடிய காலகட்டத்தில் எந்த இசையமைப்பாளரும் என்னை அழைக்கவில்லை. அது மிகப்பெரிய ஏக்கத்தையும் மனச்சோர்வையும் தந்தது. அதன் பிறகு நானே இசையமைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். எனக்கு இத்துறை தொடர்பில் வழிகாட்டியவர் வி.கே.ஜே.மதி. என் வாழ்க்கையில் நான் எத்தகைய உச்சங்களை தொட்டாலும் அவரை நன்றியுணர்வோடு நினைத்துக்கொள்வேன்.

 

கேள்வி: நல்லது… இசையமைப்பதில் உங்களுக்குள்ள அனுபவம் எத்தகையது?

பதில்: நிறைய பாடல்களுக்கு இசையமைத்தேன். ஆனால், ‘Fake Love’ எனும் ஒரே ஒரு பாடலைதான் வெளியிட்டுள்ளேன். இசையமைப்பு குறித்து பலரிடம் பல விடயங்களை கற்றுள்ளேன். குறிப்பாக, Shameel Mirun Prathap NST DJ Dhari… இப்படி பலருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 

கேள்வி: இசைத்துறையில் ஒரு பாடகியாக வலம்வரும்போது நீங்கள் சந்தித்த ஏற்ற, இறக்கங்கள்…

பதில்: இன்று வரை பல பாடல்களை பாடியுள்ளேன். குறிப்பாக, ‘எச்சரிக்கை’ எனும் பாடலை முதல் முறையாக உலகிலேயே பல தமிழ் சொல்லிசைக் கலைஞர்கள் சேர்ந்து வெளியிட்டனர். அதில் கிருஷாண் அண்ணாவோடு இணைந்து பாடக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தவிர, பல மேடைகளிலும் பாடியுள்ளேன். எனது பாடல்களை பார்த்து சில வெளிநாட்டு இசை நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அந்நாட்டு இசை மேடைகளில் பாட என்னை அழைத்திருந்தனர். தற்சமயம் உலகம் எதிர்கொண்டுவரும் கொரோனா நிலைமையினால் இச்செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, நான் பாடி வெளிவராத பல பாடல்கள் இவ்வருடம் வெளிவரவுள்ளன.

கேள்வி: இத்துறை சார்ந்த உங்களது முயற்சிக்கு ஊடகங்களின் ஊக்குவிப்புகள் எவ்வாறு அமைந்தன?

பதில்: நான் பெருமிதம் கொள்ளும்வகையில் சில நிகழ்வுகள் அமைந்தன. வானொலிகளில் என்னை நேர்முகம் கண்ட அறிவிப்பாளர்கள் ‘இலங்கையின் முதல் பெண் தமிழ் சொல்லிசைப்பாடகி’ என என்னை அறிமுகம் செய்தனர். அவர்களில் பலர் நான் பாடுவதை கண்டு வியந்துள்ளனர். அத்தருணங்களை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இசைத்துறையில் எனக்கு முன்மாதிரி மாதங்கி அருள்பிரகாசம் (MIA). அவரைப்போல, அவரை விட சிறந்த சொல்லிசைப் பாடகியாக நான் உயர்வேன் என்பதில் நம்பிக்கையுண்டு.

 

கேள்வி: கடந்து வந்த பாதையில் மறக்க முடியாத தருணம்?

பதில்: ஒரு முறை சொல்லிசைப் பாடகர் ஆதியின் (HipHop Tamizha) ‘வேங்கமவன்’ பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தேன். அது எப்படியோ அவரைச் சென்றடைந்து, அவரும் எனது காணொளியை வலைத்தளத்தில் மீண்டும் பதிவிட்டார். அத்தோடு என்னை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, பாடல் செய்வதற்காக என்னை அழைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்த தருணத்துக்காக நான் காத்திருக்கின்றேன்.

 

கேள்வி: சமீபத்தில் நீங்கள் பெற்றுள்ள வாய்ப்பு பற்றி கூறுங்கள்…

பதில்: அண்மையில் எனது பாடல்கள் பரவலாக சென்றடைந்ததன் விளைவாக ‘Cuepoint Event Management and SRSA Events Productions & Talent Management’ மூலமாக எனக்கு மேடையில் பாட சந்தர்ப்பங்கள் வந்துள்ளன. தற்போது எனது சில பாடல்களுக்கு அவர்களே பொறுப்பேற்றுள்ளனர். இவற்றை இலங்கையில் கொண்டு நடத்தும் சக்கீர் (Shakeer) என்பவர்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவரே ஆவார். அவர்கள் எனது திறமையில் நம்பிக்கை வைத்து இப்போது எனக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்கள்.

கேள்வி: இத்துறையில் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது என்ன?

பதில்: பல பெண்கள் என்னை பாராட்டுகின்றனர். என்னை நினைத்து பெருமைப்படுகின்றனர். ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நான் முன்மாதிரி என கருதுகின்றனர். எல்லாப் பெண்களுமே தம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும். தைரியமாக தடைகளைத் தாண்டி வெளியே வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. என்னால் முடிந்த உதவிகளைக் கட்டாயமாக நான் அவர்களுக்கு செய்வேன்.

இசைத்துறையில் எனக்கு கைகொடுத்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

நேர்கண்டவர்: ஷண்மு

You must be logged in to post a comment Login