Stories

நாற்காலி!

By  | 

ப்பா, அம்மா, அண்ணன், தங்கை என இரண்டு சிறு பிள்ளைகள் அந்த வீட்டில். அவர்கள் இருவருக்கும் ஒரு பழக்கம். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். மாற்றி மாற்றி வைத்துவிடுவர்!

ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு சில விருந்தினர் வர இருந்தனர். அந்த வீட்டின் வரவேற்பறையில் ஒரு சோபாவும் இரு நாற்காலிகளும் மட்டுமே இருந்ததால், அப்பா, மகனை அழைத்து உள் அறைகளில் இருந்த நாற்காலிகளையும் வரவேற்பறையில் கொண்டு வந்து போடச் சொன்னார். அண்ணனும் தங்கையும் உள்ளே இருந்த நாற்காலிகளை கொண்டு வந்து ப்ளாஸ்டிக் நாற்காலிகளோடு அருகருகே போட்டனர். அதில் ஒரு நாற்காலி இருந்த அறை ஏ.சி. அறை. அந்த நாற்காலியின் கை, வரவேற்பறை நாற்காலியின் கை மீது பட்டதும், வரவேற்பறை ப்ளாஸ்டிக் நாற்காலி, “ஏன் உன் கை இவ்வளவு ஜில்லென்றிருக்கிறது?” என்று கேட்டது.

“நான் எப்பொழுதும் ஏ.சி. அறையிலேயே இருக்கிறேன். அதனால்தான் எப்பொழுதும் ஜில்லென்றிருக்கிறேன்” என்று அந்த நாற்காலி பதில் சொன்னது.

“அப்படியா… நீ கொடுத்து வைத்தவள்தான்” என்று இலேசாக ஆடிக்கொண்டே சொன்னதாம், வரவேற்பறை நாற்காலி. (அது கொஞ்சம் இலேசான நாற்காலி. கொஞ்சம் காற்றடித்தால் ஆடும்)
விருந்தினர்கள் வந்து போயினர்.

மகன் எல்லா நாற்காலிகளும் கலந்து கிடந்ததால் தன் வழக்கப்படி, வரவேற்பறை நாற்காலியை ஏ.சி. அறையிலும், அந்த அறை நாற்காலியை வேறு அறையிலும் மாற்றிப்போட்டு விட்டான். இரவானதும் குளிர்சாதனத்தைப் போட்டுவிட்டு, கூடவே மின்விசிறியையும் போட்டுக்கொண்டு அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். புதிதாக ஏ.சி. அறைக்கு வந்த நாற்காலிக்கு குளிரத் தொடங்கியது. அது குளிரில் நடுங்கத் தொடங்கி, ‘டகடக’வென ஆட ஆரம்பித்தது. சத்தம் கேட்டு பிள்ளைகள் இருவரும் விழித்துக்கொண்டனர்.

“அண்ணா… அந்தச் சேர், தானா ஆடுது…” என்று தங்கை சொன்னாள்.
“ஆமா… அதில் பேய் உட்கார்ந்திருக்கும்னு நினைக்கிறேன்…” என்றான் அண்ணன்.
‘வீல்’ன்னு கத்தியபடி தங்கை அம்மாவையும் அண்ணன் அப்பாவையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

சட்டென்று விழித்த அப்பாவும் அம்மாவும் பதறிப்போய் “என்ன… என்னவாயிற்று?” என்று குழந்தைகளைக் கேட்டனர்.

இருவரும் கண்களை மூடியபடி அந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி, “அதோ… அந்தச் சேர்ல பேய் உட்கார்ந்துக்கிட்டு ‘டகடக’னு ஆட்டுது, அந்தச் சேரை” என்று கூறினர்.

அப்போதுதான் அப்பா நாற்காலி மாறியிருப்பதைப் புரிந்துகொண்டு சிரித்தார்.

“அட பிள்ளைகளா…! இது வரவேற்பறை நாற்காலி. இலேசானது. வேகமாகக் காற்றடித்ததால் ஆடுகிறது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கணும்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? நீங்க இதை மாத்திப் போட்டுட்டீங்க!” என்று கூறியவாறு நாற்காலிகளை இடம் மாற்றினார், அப்பா.

வரவேற்பறைக்கு வந்ததும் அதன் கதகதப்பில் நாற்காலியின் குளிர் அடங்கியது.
“என்னவாயிற்று? ஏ.சி. ரூம் நாற்காலியை பார்த்து ‘கொடுத்து வைத்தவள்’ என பொறாமைப்பட்டாயே….! எப்படி இருந்தது உள்ளே?” என்று கேட்டது, மற்றொரு நாற்காலி.
“ஐயையோ… நடுங்கிப் போய்விட்டேன். இந்தக் கதகதப்புதான் நமக்குச் சரிப்பட்டு வரும்” என்று அமைதியானது, வரவேற்பறை நாற்காலி.

You must be logged in to post a comment Login