Articles

நிச்சயம் மாறுவார்!

By  | 

கேள்வி:

என் வயது 15. எனக்கு 3 சகோதரிகள் உள்ளனர். எனது அப்பா காய்கறி வியாபாரம் செய்கிறார். அம்மா இல்லத்தரசி. நாம் நடுத்தரக் குடும்பத்தினர். எங்களது பிரச்சினை, எனது அப்பாவின் மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கங்கள்தாம். மது அருந்துவதால் உடல் நிலை பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். புகைப்பழக்கமும் அவ்வாறானதே. இந்தப் பழக்கங்களை அப்பா கைக்கொள்வதால் அவரது உடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டுவிடுமோ, அவரை நாங்கள் பிரிய நேரிடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்பா என்றால் எங்களுக்குப் பயம். அவர் இந்தப் பழக்கங்களைக் கைக்கொள்ளக் காரணம் என்ன, அதை எப்படித் தடுப்பது என்று வழி கூறுவீர்களா?

பதில்:

உங்கள் கேள்வி நெகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு பண்புள்ள சிறுவன் அல்லது சிறுமிக்கான உளப்பாங்கை உங்களது கேள்வி மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. உங்கள் அப்பாவித்தனத்துக்காகவாவது உங்கள் தந்தை இந்தப் பழக்கங்களில் இருந்து விடுபடட்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

மது அருந்துவதற்கு காரணம் எதுவும் தேவையில்லை, அது ஒரு பழக்கமாகிவிட்டது என்பதைத் தவிர! மது அருந்துவதால் மனம் அமைதி பெறுகிறது என்றும் கவலைகளை மறக்கலாம் என்றும் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மதுவும் புகையும் எந்தவிதத்திலும் எமக்கு நன்மை பயக்கப் போவதில்லை. அதனால் காலமும் பொருளும் ஆரோக்கியமும் தான் வீண் விரயமாகிறது.

உங்கள் தந்தை காய்கறி வியாபாரி என்பதால், அவருடைய வியாபாரஸ்தலத்திலோ, அயலில் இருப்பவர்களோ, அங்கு வருபவர்களோ இந்தப் பழக்கத்தை உங்கள் தந்தைக்கும் ஏற்படுத்தியிருக்கலாம். அதைக் கைவிட முடியாமல் உங்கள் தந்தையும் அதைத் தொடர்வதாக இருக்கலாம்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? மது மட்டுமன்றி, புகைப் பழக்கத்தையும் நினைத்த மாத்திரத்தில் நிறுத்திவிடலாம். அதற்குத் தேவை சற்று மனோதிடம்தான்.

நீங்கள் உங்கள் தந்தையைக் கண்டு பயப்படலாம். ஆனால், அவரது தீய பழக்கங்களைச் சுட்டிக் காட்டுவதற்கு நீங்கள் தயங்கத் தேவையில்லை. அதற்காக அவருடன் சண்டை போடவேண்டும் என்பதில்லை. உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதை அப்படியே அவரிடம் அன்பாக, ஆறுதலாக, அவர் தெளிவாக இருக்கும்போது, பிள்ளைகள் அனைவருமாக ஒன்றுகூடிக் கோரிக்கையாகக் கேளுங்கள். நீங்கள் வளர்ந்து பெரியவர்களாகி, உங்கள் சந்தோஷத்தில் அவரும் பங்கொள்ளவேண்டும் என்று நீங்கள் விரும்புவதையும் மதுவும் புகையும் அந்த சந்தோஷத்துக்குத் தடையாக இருக்கிறது என்பதையும் அவரிடம் உணர்வுபூர்வமாகச் சொல்லுங்கள்.

உங்களது பேச்சில் கலந்திருக்கும் அன்பும் உண்மையும் நிச்சயமாக அவரை நல்வழிக்குக் கொண்டுவரும். நிச்சயமாக அவர் உங்கள் அன்பான கோரிக்கைக்குச் செவிசாய்ப்பார். மதுவா, புகையா, என் குழந்தைகளா என்று அவருக்குள்ளேயே கேள்விகள் எழும். அப்போது நிச்சயமாக அவர் தன் குழந்தைகளான உங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார். எனவே, அவர் நிச்சயமாகத் தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவார்.

முடிந்தால், இந்தக் கேள்வியையும் பதிலையுமே கூட அவரிடம் வாசித்துக் காட்டுங்கள். நிச்சயமாகப் புரிந்துகொள்வார்.

உங்கள் தந்தை நல்வழிக்கு வர நாமும் பிரார்த்திக்கிறோம்.

You must be logged in to post a comment Login