Stories

நிஜமான சந்தோஷம்!

By  | 

எத்தனை நாகரிகமாய் நாம் வாழ்ந்தாலும்,  பிள்ளைகளின் காதல் திருமணத்தை ஏற்க மறுக்கிறார்கள், சில இன்றைய பெற்றோர்களும். இதுபோன்ற பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் நிலுஜாவும் வசீகரனும் காதல் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.

நிலுஜா, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அழகானவள். பண்புள்ளவள்.

வசீகரன், பரம்பரை பணக்காரன். ஆடம்பரமாக வாழ்ந்தவன். உயர் தொழில் அந்தஸ்துள்ளவன்.

இருவருமே தங்கள் திருமணத்துக்கு சம்மதம் பெற அவரவர் வீட்டில் பேசினார்கள்.

தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை மகளின் நிம்மதியை கெடுத்துவிடும்…. புகுந்த வீட்டு செல்வந்தர்கள் ஏழை மருமகளை கொடுமைப்படுத்துவார்கள்…. என்று நினைத்து நிலுஜாவின் பெற்றோர் பயந்தனர்.

நிலுஜாவிடம் தங்கள் பயத்தையும் தயக்கத்தையும் தெளிவுபடுத்த, அவளோ வசீகரன் மீது தனக்குள்ள நம்பிக்கையை எடுத்துக்கூறினாள். அவனது உறவுகளை உயர்வாக மதிப்பிட்டுச் சொன்னாள்.

என்றாலும் நிலுஜாவின் அம்மாவுக்கு ஏதோ கடும் நெருடலாய் இருந்தது.

இரவு தூங்கிக்கொண்டிருந்த மகளை எழுப்பி, திருமணத்தை பற்றி மறுபடியும் பேசினாள்.

எனினும், நிலுஜா தன் முடிவில் உறுதியாகவே இருந்தாள்.

‘ஒரு குழப்பமும் இல்லம்மா… வசீகரன் என்னை நல்லா பாத்துக்குவாரு. அவங்க அம்மாவும் உங்கள மாதிரியே ரொம்ப நல்லவங்க. அந்த குடும்பமே என்னை எதிர்பார்த்திருக்காங்க… நீங்க கவலைப்படாம போய் தூங்குங்க…” என்றாள்.

அவளின் தைரியமான பேச்சுக்கு மதிப்பளித்தனர், அவள் பெற்றோர்.

இத்தனை குழப்பங்கள் நிலுஜாவின் குடும்பத்தினருக்கு இருந்ததற்கு ஒப்பவே, வசீகரன் வீட்டிலும் திருமண விடயத்தில் மனஸ்தாபங்கள் வந்தன.

தன் அம்மாவின் சம்மதம் மட்டுமே கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் வசீகரன் தாயின் வார்த்தையை எதிர்பார்த்திருந்தான்.

ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்களால் நிலுஜாவை ஏற்க முடியவில்லை.

தன் அன்பின் அடையாளமான தாயின் முடிவை எதிர்பார்த்திருந்த வசீகரனின் நிலை, அவன் காதல் ஏக்கத்தால் பட்ட அவஸ்;தையை இனியும் நீட்டிக்க  விரும்பாமல், அவனது அம்மா திருமணத்துக்கு சம்மதம் சொன்னாள்.

நிலுஜாவுக்கு எதிரானவளாகி, திருமணத் திகதியை நிர்ணயம் செய்தாள்.

இத்தனை கோபம் அவளுக்கு நிலுஜாவில் ஏற்பட காரணம்,

நிலுஜா தாயன்புக்கு நிகரான, அதற்கும் மேலான அன்பை செலுத்தி தன்னிடமிருந்து மகனை பிரித்துவிடக்கூடுமோ என அவள் பயந்தாள்.

வசீகரன் அவளுக்கு பத்து வருட கடும் பக்தியால் கிடைத்த வரம்.

இத்தனை காலம் தன் அன்பில் மட்டுமே அடங்கியிருந்த மகனை, தன் உயிரை, எங்கிருந்தோ வந்த  மூன்றாவது நபர் சொந்தம் கொண்டாடவும், அவனில் பாதியாய் இருக்கவும் ஓர் உறவு நெருங்குவதை  தாங்கிக்கொள்ள சில அம்மாக்கள் போல வசீகரனின் அம்மாவாலும் இயலவில்லை.

மகன் மீதுள்ள அளவு கடந்த அன்பே எல்லா அம்மாக்களும் பலம்…. பலவீனம்!

திருமணம் விமரிசையாக நடந்தேறியது.

செல்வந்த வீட்டு திருமணம் என்றால் சும்மாவா என எல்லோரும் வியந்த பேசிய மொழிகள் சபையில் ஒலித்தன. அதே போல் திருமணத்தன்று ஏதோ சகுனப் பிழை காட்ட, திடீரென மயங்கித் தெளிந்த நாடகத்தையும் வசீகரனின் அம்மா நடத்தி முடித்தாள்.

தாயிடம் மகனுக்குள்ள பாசமும் நிலுஜாவை பொறாமை கொள்ளச் செய்ய நாளடைவில் மாமியார் – மருமகள் போராட்டம் நித்தம் வீட்டில் தொடர்ந்தது.

வசீகரனின் அம்மாவா, மனைவியா என்ற குழப்பத்துக்கு மத்தியில் மாமியார் – மருமகள் இருவரும்  ஒருவருக்கொருவர் ஒத்துப் போகாதவர்களாய் இருந்தனர்.

வசீகரனுக்கு உடல் நிலை குன்றினால், கை வைத்தியம் சொல்வாள், அம்மா. ஆங்கில மருத்துவரை கூட்டி வந்து நிற்பாள் மனைவி.

உடல் சுகம் பெற்று மீண்டாலும், வசீகரனின் மனம் ஆரோக்கியம் இழந்திருந்தது. தன் அன்புக்குரிய இருவர் முரண்பட்டுக்கொள்வது அவனுக்கு பெரும் கவலையளித்தது.

மாமியார், மருமகளின் எதிர்ப்புகள், முணுமுணுப்புகள், வஞ்சகங்களில் கலைத்துப்போன குடும்பத்துக்கு இனிமையானதும் அதிர்ச்சியானதுமான சம்பவம் காத்திருந்தது.

ஒரு மாலை வேளை. தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய வசீகரன் வீட்டில் குதூகல சத்தத்தை கேட்டான்.

ஆனந்த கொண்டாட்டமாய் வீட்டில் உறவுகள் சூழ்ந்திருப்பதை கண்டான். நிலுஜாவின் குடும்பத்தினரும் சேர்ந்திருப்பதை பார்த்து என்ன ஏதென அறிய உள்ளே நுழைந்தான்.

தன் அம்மா அன்போடு ஓடி வந்து மகனை தழுவிக்கொண்டாள்.

“ஒரு நல்ல செய்தி வந்திருக்கு… நா பாட்டியாகப் போறேன்…”  என்றாள்.

அவள் முகத்தில் அப்படியொரு சந்தோஷத்தை அதுவரை அவன் பார்த்ததில்லை. பழைய விரோதத்தை மறந்து, தன் மருமகளை மகள் என்கிற அன்பின் வெளிப்பாடாய் கட்டியணைத்தாள், வசீகரனின் தாய்.

மீண்டும் உறவினர்களின் குதூகலச் சத்தம் உணர்வு மேலிடச் செய்தது.

என்றாலும், வசீகரனின் மனம் எதையோ யோசிக்கிறது.

திருமணத்துக்கு முன் மருத்துவர் ஒருவர்  ‘நிலுஜா தாயாகப் போவதில்லை’ என்று சொன்ன போது அவனுக்குள் ஏற்பட்ட வேதனை இன்னும் தீராத நிலையில், இந்த கொண்டாட்டம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.

‘நீ அப்பாவாகப் போற’  என்று அம்மா சொன்னாரே, அது உண்மைக்கு புறம்பானது.

என்றாலும், இது எல்லோர் மனங்களிலும் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. முக்கியமாக, அம்மா… மனைவிக்குள் ஏராளமான எதிர்பார்ப்புகள்…

இது நல்ல மாற்றம்…. ஆனால், எத்தனை நாட்களுக்கு!

உண்மை தெரியவந்தால், யார் யார் எப்படி தாங்கிக்கொள்வார்கள்….

வசீகரன் குழப்பத்தில் துயரடைந்தான்.

அம்மா நிலுஜாவை மகள் போல் கொஞ்சுகிறார். இந்த அன்னியோன்னியம் குலையக் கூடாது… அதேநேரம், இந்த பொய் உண்மையில்லை என தெரிந்தால் எல்லார் சந்தோஷங்களும் புதையுண்டுவிடுமே!

எல்லாம் தலைகீழாக மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிட்டால்…..

நினைத்துப் பார்த்தபோதே வசீகரனின் இதயம் படபடத்தது.

சில நாட்களேனும் இந்த இன்பத்தை நாமும் இவர்களோடு சேர்ந்து அனுபவிக்கவேனும், உண்மையை மறைக்க துணிந்தான்.

தாயினதும் மனைவியினதும் அன்பு தொடர்ந்து பலம் பெற்றதை எண்ணி இன்பத்தில் தொலைந்து போனான். ஆனாலும் அது தொடராதபடி, நிலுஜாவுக்கு மருத்துவ  பரிசோதனை செய்யும் நாள் வந்தது.

இதுவரை காத்து வந்த பொய்யை வெளிச்சம் போட்டு காட்டப்போகும் ஒளித்திரைக்கு முன்னால்  உறவுகளோடு காத்திருந்தான்.

திரையில் நிலுஜாவின் கருவறை நிழல் போல் வந்து விழுந்தது.

சில நிமிடங்கள் காத்திருந்தான், வசீகரன். பின் எல்லாம் முடிய வைத்தியர் அருகில் வந்து வசீகரனின் கைகளை பற்றி வாழ்த்து சொன்னார்.

அந்த நொடி கனவுதானா என தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். கனவில்லை… நிஜம்தான்.

அப்போதே அவன் சந்தோஷமும் நிஜமானது.

-ஞா.ஜெஸ்மின்,
வத்தளை.

 

 

 

 

You must be logged in to post a comment Login