Biodata

நிரந்தர துயிலில் நீண்ட கால ராணி

By  | 

பெயர்: ராணி இரண்டாம் எலிசபெத்

வயது: 96

பிறந்தது: 1926.04.21, லண்டன்

மறைந்தது: 08.09.2022

பெற்றோர்: ஐந்தாம் ஜோர்ஜ் முதலாம் எலிசபெத்

கணவர் பெயர்: பிலிப் (1921 – 2021)

ராணி பதவிக்காலம்: (1953 ஜூன் 2 – 2022 செப்டெம்பர் 08)

குடும்பம்: மூன்று மகன்கள், ஒரு மகள்

முதல் முறையாக பதவியேற்பு:
எலிசபெத் ராணியாக பதவியேற்றதே சுவாரஸ்யமானது. 1926இல் எலிசபெத் பிறந்தபோது தாம் பின்னாளில் பிரிட்டனின் ராணியாவோம் என எண்ணியிருக்க மாட்டார். ஏனெனில், அப்போது ஆட்சி புரிந்த ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் 2ஆவது மகன்தான் எலிசபெத்தின் தந்தை. (மூத்தவருக்கு தான் மன்னராக முடிசூடப்படுவது வழக்கம்). 1936இல் ஐந்தாம் ஜோர்ஜ் மறைவுக்குப் பின் மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் மன்னர் ஆனார். ஆனால், அவர் அதே ஆண்டில் தாம் காதலித்த பெண்ணை கைப்பிடிப்பதற்காக மன்னர் பதவியை தியாகம் செய்துவிட்டார். பிரிட்டன் அரசுரிமையை தம் தம்பி இளவரசர் அல்பர்ட்டுக்கும் (எலிசபெத் தந்தை) அவரது சந்ததியினருக்கும் கொடுத்துவிட்டார். அதனால் அல்பர்ட் ஆறாம் ஜோர்ஜ் என்ற பெயருடன் பிரிட்டன் மன்னர் ஆனார். அவரது மறைவுக்குப் பின் மூத்த மகள் எலிசபெத் தன் 25 வயதில் 1953 ஜூன் 2இல் பிரிட்டன் ராணியாக முடிசூடினார்.

பெயரளவு தலைவர்:
பிரிட்டிஷ் ராணி, பெயரளவுக்கான ஆட்சித் தலைவர்தான். உண்மையான அதிகாரம் பார்லிமென்ட்டுக்குத் தான் உள்ளது. எனினும், எலிசபெத் தம் பதவிக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அங்கு தேசிய கீதத்துக்குப் பதிலாக மன்னர் வாழ்த்து கீதம் தான் பாடப்படுகிறது. அப்பதவிக்கு இன்னும் பிரிட்டன் மக்கள் மதிப்பளிக்கின்றனர்.

பதவிக்கு ஏற்ற பண்பு:
உயரிய ஒழுக்கம், பண்பாடு, செயல்பாடு உடையவர் எலிசபெத். பொதுவாக அரச குடும்பங்களில் எழும் எந்த முறைகேடுகளையும் இவர் மீது கூற முடியாது. முறைப்படி வருமான வரி செலுத்தினார். இவருக்கு முன் ஆட்சி புரிந்த எவரும் வரி செலுத்தியதில்லை. 52 நாடுகளை கொண்ட கொமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மிக அதிகமாக வெளிநாடு சென்ற பிரிட்டன் ராணி இவரே.

திருமணம்: 1947 நவம்பர் 20 – டென்மார்க் இளவரசர் பதவியை துறந்துவிட்டு, பிரிட்டன் குடியுரிமை பெற்ற பிலிப்பை எலிசபெத் ராணி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சார்ல்ஸ் (இவர் தான் அடுத்த மன்னர்), அன்ட்ரூ, எட்வர்ட் ஆகிய மூன்று மகன்களும், அன்னே என்ற ஒரு மகளும் உள்ளனர்.

நீண்டகால ராணி:
உலகில் நீண்டகாலம் (70 ஆண்டுகள், 214 நாட்கள்) அரச பதவி வகித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றார்.

முதலிடத்தில் பிரான்ஸின் மறைந்த 14ஆம் லூயிஸ் (1643 – 1715, 72 ஆண்டுகள், 110 நாட்கள்) உள்ளார். மூன்றாவது இடத்தில் மறைந்த தாய்லாந்து அரசர் பூமி போல் அதுல்யதேஜ், (1927 – 2016, 70 ஆண்டுகள், 126 நாட்கள்) இருந்தார். இதற்கு முன் பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் என்ற சாதனையை 2015இல் பெற்றார்.

இதற்கு முன் விக்டோரியா ராணி (1837 – 1901 வரை, 63 ஆண்டுகள், 216 நாட்கள்) பதவி வகித்தார். மூன்றாம் இடத்தில் மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் (59 ஆண்டுகள், 96 நாட்கள்) இருக்கிறார்.

பிரிட்டன் ஆட்சி முடிவு:
இவரது பாட்டி விக்டோரியா ராணி தலைமையின் கீழ் இருந்ததை போல ஏகாதிபத்திய (பல நாடுகள்) ஆட்சி இல்லை. எலிசபெத் ஆட்சியில் 1997இல் ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் பிரிட்டனின் ஏகாதிபத்திய சகாப்தம் முற்றுப் பெற்றது.

பிராணி வளர்ப்பு: இவருக்கு நாய்க்குட்டி, குதிரைகள் மீது அலாதி பிரியம். தந்தை ஆறாம் ஜோர்ஜ் இவருக்கு ‘வேல்ஸ்’ நாய்க்குட்டியை வாங்கித் தந்தார். அன்றிலிருந்து அரண்மனையில் நாய்க்குட்டிகள் இடம்பெறத் தொடங்கின. பெம்புரோக் வெல்ஷ் கோர்கிஸ் இன நாய்கள் 2, டோர்கி இன நாய் ஒன்று, காகர் ஸ்பேனியல் இன நாய் ஒன்று என நான்கு நாய்களை வளர்த்து வந்தார்.
ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார். அதில், சூசன் என்ற முதல் நாயை தனது 18 வயதில் பரிசாக பெற்றார். கணவர் பிலிப் காலமான பிறகு, தனது மகன் அண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களை பரிசாக பெற்றிருந்தார்.

நாடகங்கள்: இரண்டாம் உலகப்போரின் போது வின்ஸ்டர் அரண்மனையில் தன் சகோதரியுடன் இணைந்து, நாடகங்கள் மூலம் போரைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

உயிராபத்து: 1981ஆம் ஆண்டு தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருந்து தப்பினார்.

வேதனையளித்த விவாகரத்து: இவரது மூத்த மகனும் இளவரசருமான சார்ல்ஸ் – டயானா திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது ராணி எலிசபெத்துக்கு வேதனையளித்த விடயம். அதேபோல் சமீபத்தில் சார்ல்ஸ் – டயானா தம்பதியரின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறியதும் இவரை வருத்தத்துக்கு உள்ளாக்கியது.

இறுதிச்சடங்கு:
ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ரோயல் ஏர்போர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும். ராணி மறைந்து 10 நாட்கள் கழிந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிச்சடங்கு நடைபெறும்.

எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படும். இது தவிர அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், நாடாளுமன்ற கூட்டம் நடந்துகொண்டிருந்தால், அதுவும் ரத்து செய்யப்படும். ஐக்கிய இராச்சியம் முழுவதும் விடுமுறை தினமாக காணப்படும்.

11 மணிக்கு பின்பென் ஒலிக்கும். நாடு மௌனமாகும். மகாராணியின் பிரேதப்பெட்டி வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உள்ளே கொண்டுவரப்படும். அங்கு காத்திருக்கும் விசேடமாக அழைக்கப்பட்ட 2000 பேர் தங்கள் தலைகளை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவர். பின்னர் அவரது உடல் windsor castle எடுத்துச் செல்லப்படும்.

இறுதியாக st george’s chapel எடுத்துச் செல்லப்படும். அங்கு தனது தந்தைக்கு அருகில் எலிசபெத் மகாராணி நிரந்தரமாக ஓய்வெடுப்பார் என ‘ஒபரேஷன் லண்டன் ப்ரிட்ஜ்’ திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டம்)

 

You must be logged in to post a comment Login