Articles

பணம் மட்டுமல்ல நம்பிக்கையும் சேர்ந்தே பேசும்!

By  | 

அறுவை சிகிச்சைக்கு ஒரு பெரியவர் அனுமதியான போதிருந்தே மருத்துவமனையில் அனைவரும் பரபரப்பாகத்தான் இருந்தனர். ஊரில் செல்வாக்கு மிக்கவர், பெரிய பிசினஸ்மேன். அதிலும் அந்தக் காலத்திலேயே இன்ஜினியரிங் படித்து, பிறகு தானே தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்றவர். ஆனாலும் எளிமையாக எல்லோருடனும் பழகக்கூடியவர் என்பதால், அனைவருக்கும் பிடித்தமான ஒருவர். அவருக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஒரு பிரபலத்தின் அருகில் நிற்கும் இயல்பான பரவசம் எல்லோரிடமும் கண்கூடாகத் தெரிந்தது.

அறுவை சிகிச்சை ஆரம்பிக்கும் முன், அவரை உடைகளை மாற்றச் சொன்னபோது, “வொட்ச், மோதிரம் எல்லாம் கழட்டணும் சார்…” என்று செவிலியர் சொல்ல, உடனடியாக தனது உதவியாளரிடம் வொட்சை கழற்றித் தந்துவிட்டு, “தம்பி, பத்திரம்… இந்த வொட்ச் விலை இரண்டே முக்கால் லட்சம்!” என்று சிரித்தபடி கூறிவிட்டு ஒபரேஷன் தியேட்டருக்கு ஆயத்தமானார்.

சிக்கல் எதுவுமின்றி ஒபரேஷன் நல்ல விதமாக முடிந்தது. பெரியவர் டிஸ்சார்ஜ் ஆகவேண்டிய நாளில் நர்ஸ் கேட்டார்:

“சார்… எனக்கொரு டவுட். எல்லா வொட்சும் ஒரே டைம் தானே காட்டும்… அதென்ன இந்த வொட்ச் மட்டும் இவ்வளவு விலை… அதையும் எப்படி மனசு வந்து வாங்குறீங்க…? பணம் இருக்குதுன்னு இப்படியெல்லாம் செலவு செய்யலாமா? இது வேஸ்ட் ஒஃப் money இல்லையா?”

அவர் சிரித்தபடி பதில் சொன்னார்:

“அது வேஸ்ட் இல்லை… உண்மையில் அது ஓர் இன்ட்டலிஜென்ட் இன்வெஸ்ட்மென்ட்!

நான் படித்து முடித்து ஒரு வெளிநாட்டு வேலைக்காக இன்டர்வியூவுக்குச் சென்றபோது, நானும் எல்லோரும் போல மிகச் சாதாரணமாகத்தான் சென்றேன். ஆனால், என்னுடன் வந்து உட்கார்ந்த இன்னொருவன் பிராண்டட் வொட்ச், ப்ளேசர், உயரிய ஷூ என ஜம்மென வந்து உட்கார்ந்தான். இருவருமே தெரிவாகி, வேலையில் சேர்ந்துவிட்டோம். ஆனால், வேலையில் சேர்ந்த பின்தான் தெரிந்தது, என்னை விட அவனுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு சம்பளம் அதிகமாக ஃபிக்ஸ் செய்திருந்தார்கள் என்று.

அவனிடமே அதைப் பற்றி கேட்டேன்.

‘சொந்த நாடு தாண்டிட்டா, இந்த மாதிரி கம்பெனிகள்ல நம்ம லெவல் இன்ஜினியர்ஹுக்கு ஃபிக்ஸ் பண்ணறது சம்பளம் இல்ல. மெய்ன்டனன்ஸ் கொஸ்ட். இது என்னோட மெய்ன்டனன்ஸ் கொஸ்ட். அது உன்னோட மெய்ன்டனன்ஸ் கொஸ்ட்!’ என்றான்.

பின்னாளில் நான் தொழில் தொடங்கியபோது, அதையே முன்னுதாரணமாக வைத்து, என்னை நானே மாற்றிக்கொண்டதுதான் இந்த ஆடம்பரங்கள்.

அந்த சமயங்களில் நான் பெரிய கம்பெனிகளில் சப்-கன்ட்ரக்ட் டீல் பேசப் போகும்போது ப்ராண்டட் வொட்ச், உடைகள், பேனா போன்றவற்றை பயன்படுத்தியதோடு, நவீன ரக காரில்தான் பிசினஸ் பேசுவதற்குச் செல்வேன்.

கன்ட்ரக்ட் தருபவனுக்கு, சாதாரண காரில் வரும் ஒருவர் குறைந்த ரேட்டில் முடித்துத் தருவதாக கூறினாலும், அதிக ரேட் கேட்கும் எனக்கு கன்ட்ரக்ட்டை கொடுக்கத்தான் விரும்புவான். அங்கே பணம் மட்டும் பேசாது.

இவ்வளவு வசதிகளை மெய்ன்டெய்ன் செய்பவன், நமக்கும் அதிகம் தொல்லை தராமல் தனது பிசினஸை மெய்ன்டெய்ன் செய்வான் என்று என் மேல் அவன் வைக்கும் நம்பிக்கையும் சேர்ந்து பேசும்…” என்று சிரித்தார்.

You must be logged in to post a comment Login