General

பறை இசை

By  | 

இது ஒரு இசைக்கருவி என்ற போதும் தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் ஒரு கலை. தோற்கருவிகளின் தாய் என்றும் இதைக் கூறுவர். இதற்கு ‘தப்பு’ என்கின்ற இன்னுமொரு பெயரும் உண்டு.

பறை என்றால் ‘கூறு’ என்று பொருள்படும். தீட்டைபறை, தொண்டகச்சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசை பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என பல வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாற்றப்படுகின்றன எனினும் இசைக்கருவி ஒன்றே.  தமிழர்களின் சொத்து.

மேற்கத்தேய இசை நம்மை கவர்ந்தாலும் இந்த பறை சத்தத்திற்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. பறையின்  ஓசை தற்போது  பெருமளவில் எங்கும் கேட்கவில்லை எனினும் சில இடங்களில் இன்றும் இந்த கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு வாத்தியம். ஆனால் இதை இசைப்பவர்கள் இதை உணவளிக்கும் கடவுளாக மதிக்கின்றனர்.

பறை எடுத்து அடிக்கும் போதே ஒரு புது தெம்பும் உற்சாகமும் மனதில் தோன்றும். ஒவ்வொரு தமிழனுக்கும் உரிய அந்த திமிர் ஏறும்.

ஆரம்ப காலத்தில் நாட்டு மக்களுக்கு செய்திகள் அறிவிக்க, வெற்றி, தோல்விகளை அறிவிக்க, காட்டு விலங்குகளை விரட்ட, திருவிழாக்களில், கூத்துக்களில், மரண சடங்குகளில் இந்த பறை இசை பயன்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் இது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இசையாக மாற்றப்பட்டது.  இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான இசை வகையாகும்.  பாரம்பரியமான பல விடயங்கள் தற்போது அழிவடைந்து விட்டன. அதில் இந்த இசையும் ஒன்று.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஒவ்வொரு தருணத்திலும் கூட வருகின்றது இந்த இசை. மனிதனின் இறுதி ஊர்வலத்தில் கூட பெரும்பாலும் கிராமங்களில் இந்த பறை மேளம் இசைத்தே இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

பறை இசையுடன் தொடர்புடைய நிறைய கலை அம்சங்கள் உள்ளன. அவை யாவும் இந்த நவீன உலக மயமாக்கலில் அழிக்க முடியாத நம் பாரம்பரியத்தின் பரிசு. தற்போது ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இந்த பறை இசையை இசைக்கின்றனர். சிலரின் வாழ்வாதாரமாக கூட இது காணப்படுகின்றது.  பல பேர் இதை ஏளனமாகக் கருதுகின்றனர். தன் உழைப்பிற்காக வீதிகளில் இந்த பறை இசையை இசைகின்றனர். இது மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் ஒரு கலை ஆகும்.

கலையை ரசித்துவிட்டு அந்த கலைஞனை அவதூறாக பேச நம் மனித சமுதாயத்தினால் மட்டுமே முடியும்.  அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பெரிய மேடைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்துபவர்கள் கலைஞர்கள் என்றால் எந்த மேடையும் இன்றி இயல்பான மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை வெளிக்கொண்டு வரும் ஒவ்வொருவரும் இசைக்கலைஞனே.

இசைக்கு  உயர்ந்தவர், தாழ்ந்தவர் தெரியாது. பாகுபாடு தெரியாது அதை போல் ஒரு இசைக் கருவியை அடிப்படையாகக் கொண்டு எதையும் மதிப்பிட கூடாது.  வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு நம் பாரம்பரியத்தை பற்றி சொல்லிக்கொடுப்போம். முடிந்தால் அதை பின்பற்றவும் செய்வோம்.

தமிழன் என்ற அடையாளத்துடன் பிறந்த ஒவ்வொருவரும் நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அதன் வழி வந்த இந்த இசையையும் என்றும் மறக்க கூடாது. மறக்கவும் இயலாது.

இந்த உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை… நம் காதுகளில் ஒலிக்கும் பறையின் இசை.

-து. சிந்துஜா

You must be logged in to post a comment Login