Fashion

பழமையும் புதுமையும்…

By  | 

தமிழர்களின் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.

வங்கிகள்
நமது பாரம்பரிய நகைகளில் வங்கியும் ஒன்று. பெரிய அளவிலிருந்து சிறிய அளவுகளில் பெண் குழந்தைகள் அணிந்து கொள்வது போல் வங்கிகள் தங்கத்தில் மட்டுமல்லாது ஒரு கிராம் நகைகள் மற்றும் இமிடேஷன் நகைகளிலும் கிடைக்கின்றன.

அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் வங்கியானது நாக வடிவில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதன் பின்னர் அலை வடிவில் வந்த வங்கிகள் இப்பொழுது செயின் வடிவில் கைகளைச் சுற்றி கட்டிக் கொள்வது போல் வந்து விட்டன. செயின் மொடல் வங்கிகளில் அவரவர் கைஅளவுகளுக்கேற்ப வங்கிகளை சரி செய்து அணிந்து கொள்ளலாம்.

* பிளெயின் தங்க வங்கிகளில் லக்‌ஷ்மி உருவத்துடனும், டெம்பிள் டிசைன்களுடனும் வருபவை திருமணம் மற்றும் பரத நாட்டிய விழாக்களில் அணியப்படுகின்றன.

* வெண்மை, சிவப்பு, பச்சை நிறக் கற்கள் பதித்து மயில், அன்னம், யானையுடன் இருக்கும் லக்‌ஷ்மி, பூ உருவத்தில் பெரிய கற்கள் பதித்தவை, மாங்காயில் கற்கள் பதித்து அதிலிருந்து தங்கச் சலங்கை தொங்குவது, பூ மற்றும் இலைகளின் மேல் கற்கள் பதித்து வருபவை இரவு நேர விழாக்களுக்கு பட்டுப் புடவை மற்றும் பட்டுப் பாவாடைத் தாவணியுடன் அணியும் பொழுது அதன் அழகை என்னவென்று வர்ணிப்பது.

* வளையல் மொடலில் ஃபேன்ஸி டிசைன்களில் கற்கள் பதித்து வரும் வங்கிகளை காக்ரா சோளிகள் மற்றும் ஸ்லீவ்லெஸ் சுடிதார்களுடனும் அணியலாம்.

* ட்ரெண்டியாக வந்திருக்கும் குந்தன் வேலைப்பாட்டு செயின் மொடல் வங்கிகளை லோங் கெளன்களுடனும் அணிந்து கொள்ளலாம். குந்தன் வேலைப்பாட்டில் அதன் கீழே தொங்கும் லோரியல்கள் அணியும் ஆடைக்கு ஏற்றாற் போலும் தேர்ந்தெடுத்து வங்கிகளை அணிகிறார்கள்.

* வங்கிகளை ஆர்ம்லெட், ஆர்ம் பேண்ட், ஆரம்ப் பிரெஸ்லேட், பஜுபந்த் என்றும் பல்வேறு விதமாக அழைப்பது போலவே அது சிற்சில வேறுபாடுகளுடன் பல்வேறு மொடல்களில் வருகின்றன.

* வங்கிகளிலிருந்து செயின்கள் தொங்குவதும், மணிகள், சிறு சலங்கைகள் தொங்குவதும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன.

* இனாமல் வேலைப்பாட்டுடன் வரும் வங்கிகளும் வண்ணக் கற்கள் பதித்தது போன்ற தோற்றத்தைத் தந்து நம்மை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த வைக்கின்றன.

ஒட்டியாணம்
பெண்கள் அணியும் இடை அணிகளே ஒட்டியாணம் அல்லது வட்டாணம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒட்டியாணங்களிலும் பட்டையானவை, மெல்லியதானவை செயின் மொடல் எனப் பல வகைகள் உள்ளன. தங்கப் பட்டைகளில் மிகவும் எளிமையான டிசைன்களோடு வந்த ஒட்டியாணங்கள் காலப் போக்கில் பல்வேறு பரிணாமங்களோடு டிசைனர் ஒட்டியாணங்களாக உருமாறிவிட்டன.

* தங்கப் பட்டைகளில் நடுவில் லஷ்மி உருவம் பெரியதாகவும், அதன் இருபுறமும் லஷ்மி உருவங்கள் சிறியதாகவும், அதன் முடிவில் நம் இடுப்பிற்கு ஏற்றால் போல் சரி செய்து போட்டுக் கொள்ளும் வசதியுடன் இருப்பவை அழகாகவும், பார்வையாகவும் இருக்கின்றன.

* ஒரே அளவில் லஷ்மி உருவங்கள் இருப்பது போன்ற பட்டை ஒட்டியாணங்களில், மையத்திலிருந்து இரு புறமும் சிறிது தூரம் வரை தங்கச் சலங்கைகள் தொங்குவது போல் இருப்பவற்றை அணியும் பொழுது அவை மிடுக்கான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இவை ஆங்கில ‘வி’ எழுத்து மொடலில் உள்ளன.

* ஒட்டியாணம் முழுவதும் உள்ள டிசைன்களில் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சைக் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் பரத நாட்டியக் கலைஞர்களால் மட்டுமல்லாமல் பாரம்பரிய அலங்காரம் செய்து கொள்ளும் மணப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றன.

* கயிறுகளில் கல் பதித்த பதக்கங்கள் மற்றும் பிளெயின் தங்கப் பதக்கங்களைக் கோர்த்து ஒட்டியாணமாக அணிவதும் இப்பொழுது பிரபலமாகி உள்ளது.

* காட்டேஜ் கோல்டு, முத்து மற்றும் குந்தன், வி வடிவம், இடுப்புப் பட்டைகளானது பெரியதாக இருக்க அதன் மேற்புறம் அன்னம், மயில் போன்ற உருங்களில் சிறிய பலவித வண்ணக் கற்கள் பதித்திருக்க அந்தப் பட்டையிலிருந்து மெல்லிய செயின்கள் ‘யு’ வடிவில் தொங்குவது போல் இருக்கும் ஒட்டியாணங்களின் அழகை என்னவென்று சொல்வது.

* பட்டைச் செயின்களின் மேற்புறம் முத்துக்கள் பதித்து அவற்றின் கீழே நெருக்கமாக தங்கச் சலங்கைகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பவற்றை எல்லாவித ஆடைகளுடனும் அணியலாம். அதேபோல் மெல்லிய செயின்களின் மையத்தில் பெரிய பதக்கம் மட்டும் இருப்பது போன்ற ஒட்டியாணங்களும், இடுப்பின் பக்கவாட்டில் அடுக்கடுக்காக செயின்கள் தொங்குவது போன்ற ஒட்டியாணங்களும் அருமையிலும் அருமை.

தமிழர்களின் கலாச்சாரத்தில் பெண்கள் ஒட்டியாணங்களை அணிவது நல்லதாகக் கருதப்படுகின்றது. தூய தங்கத்தில் மட்டுமல்லாமல் வெள்ளியில் தங்கப் பூச்சுடன் வரும் ஒட்டியாணங்கள், ஒரு கிராம் நகை ஒட்டியாணங்கள், இமிடேஷன் ஒட்டியாணங்கள் என அனைத்துமே பார்க்க அற்புதமாக உள்ளன.

You must be logged in to post a comment Login