Uncategorized

பாரிய அலையையும் சிறிய மாற்றத்தால் வெல்லலாம்!

By  | 

கொரோனா தீநுண்மியை விட மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றால் அது அச்சமும் கவலையும்தான்.

மருத்துவமனைகளில் படுக்கை, ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற நிச்சயமற்ற தகவல்களால் மன அழுத்தம், கவலை உணர்வு அதிகரிப்பது இயற்கை. மன அழுத்தமும் கவலையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தும், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்தும், இரத்த அழுத்தத்தை அதிகரித்தும், சுவாசத்தைக் குறைத்தும் பல பாதிப்புகளை அளிக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

நீண்ட நாட்களாக அச்சத்துடன் வாழ்ந்தால் நோயை எதிர்ப்பதில் செயலிழந்துவிடுவோம்.

அச்சத்தை சரியான பாதையில் கொண்டு சென்று பயன்படுத்தவில்லை என்றால் அது இழப்பை ஏற்படுத்தும் உணர்ச்சியாகவே இருக்கும்.

கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களில் நோய் அறிகுறிகள் பெருமளவில் இல்லாத ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு குணமடைந்துள்ளனர். கடுமையான நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சாதாரணமாக குணமடைந்த ஏராளமானோர் தங்களின் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைக் கடைப்பிடித்தவர்களாவர். அவர்கள் செய்ததை நீங்களும் பின்பற்றினால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

அவர்கள் அப்படி என்ன செய்தார்கள்?

வீட்டிலிருப்பது…
கொரோனா பாதிப்பு தொடரை உடைப்பதோ அல்லது கூட்டுவதோ நம்மிடமே உள்ளது. ஆகையால், தற்போதைய உடனடித் தேவை வீட்டிலேயே இருப்பதுதான் முக்கியமானது.

நிம்மதியான உறக்கம்
தொற்றை எதிர்கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எத்தனை விதமான பானங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டாலும், உடலுக்கு தேவை நிம்மதியான உறக்கம்.

உறக்கமின்மையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும்தான் தொற்றாளர்களை குணமடைவதில் இருந்து தாமதப்படுத்துகின்றன என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரவு நேர உறக்கத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

விட்டமின்கள் தேவை
நோய் எதிர்ப்பு சக்திக்காக இந்த வகை மருந்துகள் உலகம் முழுவதும் வழங்கப்படுகின்றன. இவை பாதிப்பில் இருந்து மீளவும் மேம்படவும், நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் இருந்து தடுக்கவும் உதவுகின்றன.

இவை உணவுகளில் இருந்தும் கிடைக்கும். எனவே அவற்றை கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

– விட்டமின் சி – எலுமிச்சம் பழம், ஒரெஞ்சு பழம், அன்னாசிப்பழம், நெல்லிக்காய், கொய்யா, குடைமிளகாய், பப்பாளி பழங்களில் கிடைக்கும்.

– துத்தநாகம் (ஜிங்க்) – பூசணிக்காய் விதைகள், டபுள் பீன்ஸ், சுண்டல், சூரியகாந்தி விதைகள், இறால், சிப்பிகள், நண்டு, முந்திரி, பாதாம், முட்டை, சிக்கன், மட்டன் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

– செலினியம் – காளான், முட்டை, சீஸ்களில் கிடைக்கும்.

– விட்டமின் டி3 – சூரிய ஒளி, காளான், முட்டை

மஞ்சள் பூசணிக்காய் சூப்
வெங்காயம், சிறு கெரட், சிவப்பு பயிறு, பட்டாணி, மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்), இஞ்சி – பூண்டு, உப்பு, மிளகு, மஞ்சள், புதினா, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து சூடாக சாப்பிடவும். இத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்வது நல்லது.

புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுதல்
புரதச் சத்து உணவுகள் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களை கட்டமைக்கக் கூடியதாகும்.

சைவ உணவுகள் – பச்சைப் பட்டாணி, பயறு – பருப்பு வகைகள், பீன்ஸ், சுண்டல்.

அசைவ உணவுகள் – முட்டை, மீன், சிக்கன், மட்டன்

 

மூச்சுப் பயிற்சி செய்தல்
உடல் சோர்வு இல்லாமல் இருந்தால் வீட்டில் நடைப்பயிற்சி செய்துவிட்டு, யோகா, மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் ஆகியவற்றை செய்ய வேண்டும். இதன் மூலம் உடலுக்கு கூடுதல் ஒட்சிசன் கிடைக்கும். பலூன்களை வாயால் ஊதி வெடிக்கச் செய்வதாலும் நுரையீரல் வலுவடையும்.

மூளைக்கு வேலை கொடுங்கள்
மனதை உற்சாகப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவுவது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். பணம், நிதி உதவிகள் அளிப்பது மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும். உங்கள் சொந்தங்களின் நலனுக்காக பிரார்த்தித்து அவர்களுடன் தொலைப்பேசியில் உரையாடலாம்.

இஞ்சி டீ
தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவள்ளி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த வெ.பூண்டு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இந்த வகை டீ, நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவும்.

உடல் வலியைப் போக்க…
தொற்று பாதிப்பால் உடல் வலி வழக்கமாக இருக்கும். மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளைத் தவிர உணவு முறையில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள்.

– மஞ்சள், இஞ்சி, வெ.பூண்டு, மிளகு, சீரகம், மிளகு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை தினசரி உணவு சமைக்கும்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.

– எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழரசத்தை எடுத்துக்கொள்ளலாம். (நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களுக்கு)

– ஒலிவ் ஒயிலை பச்சை காய்கறிகளுடன் (செலட்) சேர்த்து சாப்பிடலாம்.

– உப்பில் ஊற வைக்காத பாதாம், அக்ரூட், முந்திரி

– ஆளி விதைகள், மீன், சியா விதைகள் (ஓமேகா 3 கொண்டவை)

– பச்சை அல்லது சிவப்பு மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.

– சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ரீபைண்ட் ஒயில், சிகரெட், மதுபானங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

– தேங்காய், எள், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சமமாக சேர்த்து சற்று சூடாக்கி மூட்டு மற்றும் உடல் இணைப்பு பகுதிகளில் தூ                            ,m                      tங்குவதற்கு முன்பு தேய்க்கவும்.

நீராவி பிடித்தல்
ஆவி பிடிப்பதால் மார்பு, நாசி பகுதிகள் விரிவடைவதுடன், உடலில் இருக்கும் சளியும் வெளியேறும். ஓமம், மஞ்சள் தூள், 2-3 துளி நீலகிரி தைலத்தைச் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்களுக்கு நீராவி பிடிக்கவேண்டும். அதிகமாக சளி இருந்தால் பால் பொருள்களை தவிர்க்கலாம்.

You must be logged in to post a comment Login