Fashion

பிரபலமாகிவரும் முகக்கவசங்கள்!

By  | 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று, மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. வாழ்வில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தனிநபர் தூய்மைக்கு முக்கியத்துவம் பெருகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மூலிகைகளுக்கு வீடுகளில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஒருவகையில், பாட்டிவைத்தியத்தைப் பரிந்துரைக்காத நபர்களே இல்லை என்று கூறலாம். உடல்நலம் பேணலில் அதீத அக்கறை செலுத்த தொடங்கியிருக்கும் நாம், தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி போன்ற புதிய பழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளோம்.
மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ வீட்டில் இருந்து புறப்படும்போது குடையை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. கடைகளுக்கு சென்றால் பை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அப்படி, நமது அன்றாட வாழ்க்கைமுறையில் வீட்டில் இருந்து வெளியே சென்றால், தவறாமல் எடுத்துச் செல்லும் பொருளாக முகக்கவசம் மாறிவிட்டது. எதை மறந்தாலும், முகக்கவசங்களை மறக்கக் கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது. கண்ணாடியை பார்க்கும்போது, முகக்கவசங்களில் நமது முகங்கள் புதைந்துள்ளது புலப்படுகிறது.
இது எத்தனை காலத்திற்கு? கொரோனா வைரஸ் பெருந்தொற்று, வந்தது தெரிந்துவிட்டது; எப்போது போகும் என்பதை எவராலும் ஆரூடம் சொல்ல முடியவில்லை. முகக்கவசங்கள் தான் நமது முகங்களாக மாறிவிட்டநிலை. கொரோனா வைரஸோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமே கூறிவிட்டது.
கொரோனாவுக்காக அலுவலகங்களையோ, வியாபாரத்தையோ, தொழில் நடவடிக்கைகளையோ நிறுத்து விட முடியாத சூழ்நிலை.
காதுகுத்து, மஞ்சள்நீராட்டுவிழா, திருமணங்கள், வளைகாப்பு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தீபாவளி, பொங்கல் போன்ற குதூகலத் தருணங்களை தவறவிடக் கூடாது என்பதும் முக்கியமாகிறது. அப்படிப்பட்ட சூழலில் உறவுகளோடு மகிழ்ச்சி சூழ பூத்திருக்கும்போது புத்தாடைகளை அணிந்து கொள்வது வழக்கம்.
விழாக்களின்போது, முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதில் ஆண்களை விட பெண்கள் அதீத ஆர்வம் காட்டுவது இயல்பு. ஆனால், முகக்கவசங்கள் முகங்களை மூடிக் கொண்டிருக்கும்போது, அழகை என்ன செய்வது? அந்த கேள்வியில் தோன்றியதுதான் அழகியலோடுகூடிய முகக்கவசங்கள் என்ற சிந்தனை.
மணப்பெண்கள் தாங்கள் அணியும் திருமண பட்டுச்சேலைக்கு நிகராக அழகு நிறைந்த முகக்கவசங்கள் தயாரிக்கும் வேலையில் அழகியல் ஆடை நிபுணர்கள் கவனம் செலுத்தினார்கள். அதன்விளைவாக, ஆடைக்கேற்ற அழகிய வண்ணங்கள், வடிவமைப்புகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
இது திருமணங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ரவிக்கை அல்லது சேலையின் வண்ணத்தில் முகக்கவசங்கள் தயாரித்து தரப்படுகின்றன. அந்த முகக்கவசங்களை எழிலூட்டும் வேலைப்பாடுகளும் செய்யப்படுகின்றன. அழகான படிகங்கள், பின்னற்பட்டிழைகள், முத்துகள், பூத் தையல் போன்றவை முகக்கவசங்களுக்குப் பொலிவூட்டுகின்றன.
வகைவகையான வண்ணங்கள், வண்ண அச்சுகள், கலையோவியங்கள், வடிவமைப்புகளால் பட்டு, பருத்தி, கைத்தறி ஆடைகளில் முகக்கவசங்கள் செய்யப்படுகின்றன. ஜரிகைப் பூ வேலை செய்த பட்டுத்துணிகளிலும் முகக்கவசங்கள் தயாராகின்றன. சுவாசிப்பதற்கு எவ்வித தொந்தரவும் இல்லாத, அழகுக்கும் குறைவில்லாத முகக்கவசங்களை வாங்கி அணிவதில் பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
திருமணங்களில் மணமகள், மணமகன் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் முகக்கவசங்கள் உருவாக்கப்படுகின்றன. தோல்நிறம், அணியும் ஆடை நிறத்திற்கும் பொருந்தும் முகக்கவசங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை சலவை செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

You must be logged in to post a comment Login