Cinema

பிளீஸ், ரிஸ்க் எடுக்காதீங்க!

By  | 

கொரோனா தொற்றில் நகரமே அடங்கியிருக்கும் நிலையிலும் சமூக வலைதளங்கள் மூலம் உதவ முன்வந்த தன்னார்வலர்களுடன் இணைந்து தினமும் ஒவ்வொரு வகையான உணவுகளை பெங்களூருவில் மிகவும் வறுமையில் வாடுவோர் நிறைந்த இந்திராநகர், எச்.ஏ.எல்., அன்னசந்திரபாளையா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வேளை சத்தான உணவு வழங்கி வருகிறார் சஞ்சனா கல்ராணி.

அவர் பேசியதிலிருந்து…

உலகையே புரட்டி போட்டு விட்டது கொரோனா தொற்று. இதிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு 2வது அலை துவங்கி விட்டது. ஒட்சிசனுக்காக மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுகின்றனர். ஆனால் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகள், ஒரு வேளை உணவுக்காக அலைமோதுவதை சமீபத்தில் பார்த்தேன். அதன் பிறகு தான் சஞ்சனா பவுண்டேஷன் மூலம் ஒரு வேளை உணவு வழங்கினால் உயிர் வாழ போதுமானதாக இருக்கும் என கருதினேன். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட போது, என்னை பின்பற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப உதவ முன்வந்தனர். அதன்படி சத்தான உயர்ரக உணவை சமைத்து தன்னார்வலர்கள் மூலம் அன்றாடம் உழைத்தால் தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கி வருகிறேன்.

டாக்டரான கணவர் அஜீஸ் கொடுத்த ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, யோகா, பிரணாயாமம் மற்றும் சத்தான உணவு தான் என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்தது. கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கிறது. எனவே மக்கள் நுரையீரலை பாதுகாக்க தினமும் யோகா, பிரணாயாமம் செய்ய வேண்டும். பிரணாயாமம் செய்யும் போது நுரையீரல் ஒட்சிசனை உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது. இதுகுறித்து வீடியோ பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு உயிர் முக்கியம். நாம் நன்றாக இருந்தால் தான் திட்டங்களை, எண்ணங்களை செயல்படுத்த முடியும். எனவே பிளீஸ் யாரும் வெளியில் செல்லாதீங்க. ரிஸ்க் எடுக்காதீங்க. முடிந்தால் இரண்டு முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளி, செனிட்டைசர் பொலோ பண்ணுங்க. முடிந்தவரை பிறருக்கு உதவுங்க.என் யூடியூப் சேனலை பார்த்து பலர் யோகா, பிரணாயாமம் செய்ய துவங்கியிருப்பதாக கூறுவது சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் சந்தோஷத்தில் சஞ்சனா கல்ராணி.

 

You must be logged in to post a comment Login