Stories

பிள்ளை மனம் கல்லு!

By  | 

வெளியே கடுமையான மழை.

கமலம் உள்ளேயும் வெளியிலுமாக தவிப்புடன் கையைப் பிசைந்தபடி உலாவிக்கொண்டிருந்தாள்.

“சே… பாழாய் போன மழை கொஞ்சம் எண்டாலும் வெளுக்குதில்ல. மனிசன் வேலை வெட்டிக்கும் போக ஏலாம… சே”

தனக்குள்ளே மழையை திட்டியவாறு வாசலை எட்டிப் பார்த்தாள்.

பாதையில் வழிந்தோடிய தண்ணீர் வளவுக்குள் பாய்ந்துகொண்டிருந்ததை கண்டவளுக்கு வேதனை பீறிட்டது.

“மூத்தவனிட்ட எத்தனை தரம் சொல்லியிருப்பன். இந்தத் தண்ணிய வெட்டிவிடு மகன் எண்டு. திரும்பியும் பார்க்கிறான் இல்ல” என்று மகனை திட்டும்போதே குடையைப் பிடித்தவாறு கமலத்தின் கணவர் வந்தார்.

உள்ளே நுழைந்தவரை பார்த்ததுமே

‘பாவம்;… எங்க போய் கடன் கேட்டு வாறாரோ தெரியல்ல…’ என்று தனக்குள்ளே பரிதாபமாக சொன்னாள்.

“என்ன, ஒன்னும் சமைக்கயில்லையா…” என்று, குடையை மூலையில் வைத்துவிட்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தார், கந்தசாமி.

“இல்ல, நான் மேரியக்கா வீட்ட போகல்ல. இந்த மழை விடுகிற பாடாத் தெரியல்ல… அவ வீட்ட போனா அரிசி சாமான் ஏதும் தருவா. என்ன செய்ய…?”

சலிப்புடன் கூறி தானும் கீழே அமர்ந்தாள்.

“கமலம், நானும் தங்கையாப் போடியாரிட்டத்தான் போயிட்டு வாறன். வயலுக்குள்ள சரியான தண்ணி பாயுதாம். இப்போதைக்கு வேலை செய்யமுடியாதாம். இடமெல்லாம் அலைஞ்சு போட்டுத்தான் வாறன். கொஞ்சம் தேத்தண்ணி வையன் குடிப்பம்…” என  கொட்டாவி விட்டுக்கொண்டே கூறினார், கந்தசாமி.

குசினிக்குள் சென்ற கமலம் தண்ணீர் பானையை அடுப்பில் வைத்தாள். மனமோ அடுப்பில் எரியும் நெருப்பை விட வேகமாய் எரிந்தது.

ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம். கந்தசாமி நல்ல உழைப்பாளி.

இரண்டு பிள்ளைகளையும் கண் போல் பார்ப்பவர். பிள்ளைகளும் நன்றாகப் படித்தார்கள். பெரும் கஷ்டத்திலும் அவர்களின் படிப்புச் செலவுகளை குறைவில்லாமல் ஏற்று வந்தார்.

பிள்ளைகளிடம் எப்போதும் செல்லம் கொஞ்சுவார். “என் உடம்பில தெம்பிருக்கிற வரைக்கும் நான் உழைப்பன். பிறகு நம்மட பிள்ளைகள் நம்மல பாக்காமலா போய்விடுவாங்கள்?” என அடிக்கடி மனைவியிடம் புன்சிரிப்போடு சொல்வார்.

காலம் வேகமெடுத்தது.

மூத்தவன் உயர்தரத்துக்கும், மகள் சுகந்தி பத்தாந்தரத்துக்கும் உயர்ந்தனர்.

கந்தசாமியும் முன்பை விட அதிகமாக உழைக்கத் தொடங்கினார்.

“மகன் வளர்ந்திட்டான் தானே. அவனையும் ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லன்” என்று தங்கையா போடியார் கூறும்போதெல்லாம்,

‘இல்ல போடியார், மகன் படிச்சி பெரிய உத்தியோகத்தில இருக்கோணும்” என்று நம்பிக்கையாக சொல்லிவிடுவார்.

மூத்தவன் கனகன் படிப்பை முடித்து, அரசாங்க பணியிலும், மகள் ஆசிரியை பணியிலும் அமர்ந்தனர்.

அப்போதும் பிள்ளைகள் ‘அப்பா, இனி வேலைக்குப் போகவேண்டாம்’ என்று சொல்லவில்லை. கந்தசாமியும் அதைப்பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை.

சில நாட்களில் மூத்தவன் பக்கத்து ஊர் அழகிப் போடியாரின் மகளை பெற்றோருக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டான்.

“அப்பா, அம்மா நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதை கேளுங்க…

நான் சின்னதுலருந்து வறுமைய மட்டுந்தான் பாத்தனான். இப்போதான் எனக்கு நல்ல வேலையும் வசதியான வீட்டுப் பெண்ணும் கிடைச்சிருக்கு.

உங்கள் ரெண்டு பேருக்கும் பிடிக்காது எண்டுதான் நான் அவள இங்க கூட்டிவரல. வசதியா வாழ்ந்தவளுக்கு இங்க சரிவராது… அதனால நானும் வாறன்”

கந்தசாமியும் கமலமும் உடைந்துபோனார்கள்.

தன் மனக்கோட்டையை மகன் இடிந்து தரைமட்டமாக்கிவிட்டதை எண்ணி கந்தசாமி மனதுக்குள் அழ, கமலமோ

“நான் சொன்னேனே கேட்டீங்களா… நமக்கெண்டு எதையும் சேர்த்து வைக்காம, பிள்ளைகள் பிள்ளைகள் எண்டு இருந்ததுக்கு அவன் செய்த நன்றிக்கடன பாத்தீங்களா….!” என புலம்பி அழுதாள்.

“கமலம் போதும்… நிறுத்து. அவன் நம்மட பிள்ளைதானே… நல்லாயிருக்கட்டும்” என மனைவியை தேற்றினார், கந்தசாமி.

மாதங்கள் கடந்தன.

கந்தசாமி சோர்ந்துவிடவில்லை. எனினும், கமலத்தால் எதையும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நொந்து போனாள்.

அப்போது ஒரு நாள் கமலம் சமைத்துக் கொண்டிருந்தபோது, சுகந்தி உள்ளே வந்தாள், இளைஞர் ஒருவரோடு!

வந்தவரை  உபசரித்து அமரச் செய்தாள். பின் சந்தேகத்தோடு பார்த்த தாயிடம், “அம்மா, இவர்தான் என் கணவர். நாங்க பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்” என்றாள்.

“என்ன பிள்ளை சொல்ற? நீயுமா?”

ஏற்கெனவே உள்ளத்தில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் அடுத்த காயத்தை மகள் ஏற்படுத்திவிட்டதாக வருந்தினாள், கமலம்.

“உன்ட அண்ணனப் போல நீயும் எங்கள மறந்துட்ட தானே? உங்கள வளர்த்து ஆளாக்க அந்த மனுசன் என்ன பாடுபட்டிருக்கார்.. சே… ”

“அம்மா, எனக்கு கல்யாணம் செஞ்சு வெக்க பணத்துக்கு நீங்க எங்க போவீங்க? அப்பா பாவம். வரதட்சணையே வேணாமெண்டுதான் என்ன இவர் விரும்பி கட்டிக்கிட்டார். இப்ப நான் இவங்கட வீட்டிலதான் இருக்கன்”

என்றபோது எல்லாம் கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தார் கந்தசாமி.

“கமலம்… ஏன் அழற? நம்மட பிள்ளைகளுக்கு இப்ப சிறகு முளைச்சிருச்சி. அதான் தனிய பறக்க ஆசைப்படுறாங்க… விடு.. வந்தவங்களுக்கு ஏதாச்சும் சாப்பிடக்கொடு”

“இல்லப்பா, வர்ற வழியில சாப்பிட்டுத்தான் வந்தம். நீங்க கஷ்டப்பட வேணாம். நாங்க உடன கிளம்பணும்”

கணவனிடமிருந்து சிறு தொகை பணத்தை வாங்கி கொடுக்க முயன்ற மகளுக்கு, பெற்றோரின் கடமையை சொல்லி புரிய வைத்து, பணத்தை திருப்பிக் கொடுத்தார் கந்தசாமி.

எந்த நேரத்திலும் பண உதவி செய்ய காத்திருப்பதாக கூறி, வந்த வழியே தன் கணவரோடு திரும்பினாள், மகள்.

கடைசிக் காலத்தில் பிள்ளைகள் பார்ப்பார்கள் என பார்ப்பவர்களிடம் சொல்லிப் பெருமைபட்டுக்கொண்டது, கந்தசாமியின் நினைவுக்கு வரும்போதெல்லாம் கவலை கரைபுரண்டோடும்.

வருடங்கள் கடந்தன…

பிள்ளைகள் கொடுக்கும் பணத்தை கந்தசாமி வாங்குவதில்லை. வீட்டில் நல்லது, கெட்டது என்றால் கடமைக்காக வந்து பிள்ளைகள் கலந்துகொண்டாலும், அவர்களை எப்போதும் எதிர்பார்ப்பதில்லை.

கந்தசாமி தொடர்ந்து உழைப்பதில் கண்ணாயிருந்தாலும், அடிக்கடி போடியார்தான் ஞாபகப்படுத்துவார்.

‘என்ன கந்தா, பிள்ளைகள் ரெண்டு பேரும் தங்கட பாட்டில வாழறாங்க போல” என நக்கல் விடுவார்.

“பிள்ளைகள் எண்டா, என்னைக்காவது நம்மல விட்டிட்டு போகத்தானே வேணும். இதில குறைபட என்னயிருக்கு? என்ட உடம்புல தெம்பிருக்கும் மட்டும்  நான் உழைப்பன்” என சொல்லிவிட்டு வேறு பக்கமாக போய்விடுவார் கந்தசாமி.

எல்லாம் நடந்து கனகாலம்…

அந்த நினைவுகளிலிருந்து மனம் விலக, கொதி நீரில் தேநீர் ஊற்றி, கணவரிடம் கொண்டுபோய் கொடுத்தாள் கமலம்.

தேநீர் பருகிக்கொண்டே,

“இதப்பார் கமலம், நீ போய் மேரி அக்காட்ட பணம் ஏதும் இருந்தா வாங்கிட்டு வா. நான் ரெண்டு நாளைல தாறன். எங்காச்சும் வேலை கிடைக்கும்” என கமலத்திடம் கூறினார்.

“சரி சரி நான் போய் மேரி அக்காட்ட பணம் கேட்டு வாங்கி வாறன். நீங்க இருங்க”

வாசலை நோக்கி நடந்த மனைவியை பார்த்தபோது, கந்தசாமிக்கு மனசுக்குள் ஏதோ செய்தது.

சில நிமிடங்களில் போனவள் வந்துவிட்டாள்.

“கமலம், பணம் கிடைச்சுதா?”

“ஓம்… ஓம்…”

“ம்… சரி, நீ சாமான் வாங்கி சமைச்சு வை. நான் எங்காச்சும் வேலை கிடைக்குதா எண்டு பாத்திட்டு வாறன்”

மறுபடி தெம்போடு நடக்க ஆரம்பித்தார், கந்தசாமி.

-அம்பிகா தெய்வராசா,
கறுவாக்கேணி.

 

You must be logged in to post a comment Login