Articles

புதிது… புதுமை… ஸ்பெஷல் மெனு…

By  | 

– 360 வருடங்களுக்கு மேல் இயங்கிவரும் 11ஆம் தலைமுறையை தொட்டுள்ள பழமையான உணவகம்.

ஜெர்மனியில் சுமார் 1200 பேர் வசிக்கக்கூடிய ஈல்ஸ்பிரன் கிராமத்தின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது ஒரு தேவாலயம். அதற்கு எதிரே கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது, ‘ரோல் உணவகம்’. உள்ளே நுழைந்ததும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இடத்துக்குள் காலெடுத்து வைத்ததைப் போன்ற உணர்வைத் தருவது இதன் ஸ்பெஷல்.

ஜெர்மனியின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் உள்கட்டமைப்பும், 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்னிச்சர்களும் ஓவியங்களும் உணவகத்தை அலங்கரிக்கின்றன. வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி, பொரித்த பாலாடை, முட்டைக்கோஸ்… ஆகிய மூன்றும் இதன் அடையாளங்கள்.

மதுக்கூடம், உணவகம், பீர் கார்டன், மண்டபம், மீட்டிங் ஹோல் என ஒரு நட்சத்திர விடுதியைப் போல பரந்து விரிந்திருக்கிறது, ‘ரோல்’.

தொடர்ந்து 360 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் குடும்ப பிசினஸ் இது. பத்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகின் பழமையான உணவகம்’ என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. உணவகம் இயங்கும் கட்டடம் ஆயிரம் வருடங்கள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் 25 வருடங்களுக்கு மேலாக ஓர் உணவகம் தொடர்ந்து நடப்பதே சாதனை. இரண்டு உலகப்போர்கள், கடுமையான பணவீக்கம், பஞ்சம், கொரோனா லொக்டவுனையும் தாண்டி இவ்வளவு ஆண்டுகளாக ‘ரோல்’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பது உணவகம் நடத்த விரும்புபவர் களுக்கு நல்ல ரோல் மொடல்.

ஆண்ட்ரியாஸ் ரோல்
350 வருடங்களுக்கு முன்பு ஈல்ஸ்பிரன் கிராமத்தில் சிறியளவில் ஓர் உணவகத்தை நடத்தி வந்தார் ஜோர்ஜ் ஹொஃப்மெய்ஸ்டர். இவருடைய மகள் சுசான்னா ஹொஃப்மெய்ஸ்டர்.

1658… சுசான்னாவைத் திருமணம் செய்தார், ஆண்ட்ரியாஸ் ரோல். அப்போது அந்த உணவகம் ஆண்ட்ரியாஸின் வசமானது.

பெரிதாக எந்த திட்டமும் இல்லாமல் ‘ரோல் உணவகம்’ என்று பெயர் சூட்டி எளிமையாக பிசினஸை நடத்தத் தொடங்கினார், ஆண்ட்ரியாஸ்.

பீர் தயாரிப்பதில் வல்லவரான அவர், உணவுடன் மதுவையும் ஒரே இடத்தில் விற்கும் முறையை அறிமுகப்படுத்தியதுதான் ஹைலைட். இந்த முறைதான் இவ்வளவு ஆண்டுகளாக  உணவகத் தொழிலில் ‘ரோல்’ நீடித்து நிற்க முதல் காரணம்.

உணவும் பீரும் ஒரே இடத்தில் கிடைக்க, ஈல்ஸ்பிரன் கிராமமே ‘ரோலை’ மொய்க்கத் தொடங்கியது. பிறகு மது அருந்துவதற்காக மட்டுமே தனியாக ஓர் இடத்தை உருவாக்கினார். அது இன்று பீர் கார்டனாக வளர்ந்து நிற்கிறது.

இரண்டு முறை திருமணம் செய்த ஆண்ட்ரியாஸ் 70 வயதில் இறந்துபோனார். இவருக்குப் பின் வந்த மகன் ஜோச்சிம் ரோல், பேரன் ஆண்ட்ரியாஸ், கொள்ளுப் பேரன் பிரான்சிஸ்கஸ் ஆகிய மூவரும் 100 வருடங்களுக்கு மேலாக உணவகத்தைச் சிறப்பாக நடத்தி குடும்ப நிறுவனம் ஆழமாக வேர் பிடிக்க அடித்தளமிட்டனர்.

நிர்வகித்த முதல் பெண்
5ஆம் தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன் சின்ன வயதிலேயே இறந்துவிட, அவரது மனைவி மக்தலேனா பிசினஸைக் கையில் எடுத்தார். ‘ரோலை’ நிர்வகித்த முதல் பெண் இவர்தான். இவரது காலத்தில்தான் உணவகம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. ‘ரோல்’ உணவகத்தில் தயாரான பீர், வாடிக்கையாளர்களைத் தாண்டி மற்ற உணவகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. பீரின் விலையை ஏற்றி அதிக லாபம் பார்த்தார் மக்தலேனா.

7ஆம் தலைமுறையைச் சேர்ந்த ஜோஹன் நெபோமுக்கும் அவரது தம்பி ஜோசப்பும் உணவகத்தை நவீனமயமாக்கினர். உணவகத்தின் உள்கட்டமைப்பை ஓவியங்களால் அலங்கரித்தனர். உணவகம் என்பது வெறுமனே சாப்பிடக்கூடிய இடம் மட்டுமல்ல. அது மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக மாற்றும் ரம்மியமான சூழல் என்பது ஜோஹனின் கொள்கை.

1881… ஜோசப் புது வகையான பீர் ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்த பீர்தான் இப்போதும் அங்கு அதிகமாக விற்பனையாகும் மதுவகை.

இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் இரண்டு உலகப் போர்களுக்கு மத்தியில் உணவகத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி தொடர்ந்து இயங்க வழிவகுத்தனர்.

லாபத்தை மட்டுமே கருதாமல், நஷ்டத்திலும் கடனிலும் உணவகத்தை நடத்தினர். அதனால்தான் உலகமெங்கும் கொரோனா லொக்டவுனால் நிரந்தரமாக மூடப்பட்ட ஆயிரக்கணக்கான உணவகங்களுக்கு மத்தியில் இன்றும் உயிர்ப்புடன் நிற்கிறது ‘ரோல்’.

தனித்துவம்
கிராமத்தில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை மட்டுமே சைவ உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். அன்றன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகளின்படி மெனு வடிவமைக்கப்படுகிறது. அசைவ உணவுக்கான இறைச்சிகளைப் பதப்படுத்துவதில்லை. எப்போதும் புதியது மட்டுமே. ஃபாஸ்ட் ஃபுட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுவையைக் கூட்டும் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை. 300 வருடங்களுக்கு முந்தைய உணவு வகைகள் கூட இப்போதும் கிடைக்கும்.

மண்டபம்
ஈல்ஸ்பிரன் கிராமத்தில் அரங்கேறும் அரசியல் கூட்டம் முதல் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டம் வரை அனைத்து நிகழ்வுகளும் உணவக மண்டபத்தில்தான் நிகழ்கின்றன.

இந்த அசத்தும் மண்டபம் 1902இல் கட்டப்பட்டது. 60 முதல் 250 பேர் வரை இங்கே அமரலாம். தவிர, அதிகபட்சமாக 25 பேர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குத் தனியாக பிரைவேட் ரூம் ஒன்றுள்ளது. பிசினஸ் மீட்டிங்குக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஹோலும் இருக்கிறது. இங்கே அதிகபட்சமாக 42 பேர் வரை அமரலாம். கொரோனாவுக்கு முன்பு இந்த ஹோல்கள் வருடம் முழுவதும் பிஸியாக இருந்தன.

பீர் கார்டன்
உணவகத்தை ஒட்டிய வெட்ட வெளியில் மது அருந்துவதற்கான பீர் கார்டன் உண்டு. ஒரே நேரத்தில் 420 பேர் வரை இங்கே அமர்ந்து மது அருந்தமுடியும். உணவகத்தின் சமையலறையில் வறுக்கப்படும் பன்றி இறைச்சி மற்றும் அப்பிள் பழத்தைக்கொண்டு தயாராகும் ஒரு பண்டத்தின் நறுமணம் மூக்கைத் துளைக்க, 150 வருடங்கள் பழமையான செஸ்ட்நட் மரங்களின் நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து, உரையாடிக்கொண்டே பீர் கார்டனில் மது அருந்துவது தனி சுகம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

உலகுக்கு முதல் முறையாக இப்படியொரு கார்டனை அறிமுகப்படுத்தியது ‘ரோல்’தான். இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் கார்டன் பார், கார்டன் ரெஸ்டாரண்டுகளுக்கு இதுதான் முன்னோடி. தவிர, ஜெர்மனியில் மது அருந்திக்கொண்டே நண்பர்களுடன் கலந்துரையாடுவது ஒரு கலாசாரமாக பரிணமிக்க பீர் கார்டன்தான் மூலகாரணம். இதுபோக தனியாக பார் வசதியுமுண்டு.

இன்று
வருடத்துக்கு 100 நிகழ்வுகளாவது ரோலில் அரங்கேறும். இதன் மூலம்தான் நிறுவனத்துக்கு 50 சதவீத வருமானம் கிடைக்கிறது. கொரோனா லொக்டவுனால் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை.

அத்துடன் உணவகமும் பீர் கார்டனும் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரியளவில் நஷ்டம். அதனால் உணவகம் திறக்கும் வரை ஊழியர்கள் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். சமீபத்தில்தான் லொக்டவுன் முடிந்து சில கட்டுப்பாடுகளுடன் உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது.

குறைவான வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிகழ்வுகளை நடத்த முடியாது என்பது முக்கிய கட்டுப்பாடுகள். கொரோனா பயத்தால் அந்தக் குறைவான வாடிக்கையாளர்கள் கூட வரவில்லை. சரியாக பிசினஸ் இல்லை. ‘ரோல்’ மூடப்படப்போவதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில் லாபம் இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது ‘ரோல்’ தொடர்ந்து இயங்கும். அடுத்த தலைமுறையிலும் தொடரும் என்று தன்னுடைய முன்னோர்களைப் போல உறுதியாகச் சொல்லியிருக்கிறார் நிறுவனர் முக் ரோல். 11ஆம் தலைமுறையைச் சேர்ந்த முக் நல்ல சமையல்காரரும் கூட. பிசினஸில் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் மனைவி கரின்.

You must be logged in to post a comment Login