General

புத்துயிர் பெறும் மலையகம்

By  | 

கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போல இன்று கொரோனாவும் மலையகமும் ஒட்டிகிடக்கிறதப்பா? ஆமாங்க கொரோனா எங்கள் பழைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துள்ளது.

வைரஸின் தாக்கம் ஒரு வகையில் மனக்கவலைதான். இன்று உலகம் பூராவும் எத்தனையோ உயிர்களை காவுகொண்டுள்ளது. உலக மக்களை நோயால் அவதியுரவைத்துள்ளது. சில நாடுகள் மையக் காம்பிராவின் சாயலில் காட்சியளிக்கின்றன.

நாங்கள் அந்த வகையில் தப்பிப் பிழைத்தவர்களாக ஒரு ரசனை மிகுந்த குயவனைப்போல இந்த மலையக மண்சட்டியை பக்குவமாக வடித்துள்ளது கொரோனா. ஐயோ கோவப்படாதீங்க “என்னாடா எரியிற நெருப்புல என்னைய ஊத்துரானேனு நினைச்சிடாதீங்க” எங்களுடைய ஊரில் கொரோனா நோய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியுள்ளது. அதை பகிர்ந்துகொள்ளவே நான் எத்தனிக்கிறேன்.

எனது ஐந்து வயதில் நான் வாழ்ந்த வாழ்க்கையை இன்று கண்கூடாக பார்க்க வைத்துள்ளது கொரோனா. மனிதத்தின் வாசம் ஓடிப்போயிருந்த காலம் போய் இன்று மனிதத்தை உணர்கிறோம்.

அன்று லயத்து வீட்டின் மூன்றாவது காம்பிராதான் எங்கள் வீடு இல்லை கோவில் என்றே சொல்லவேண்டும். அங்கேதான் பல பொக்கிஷங்கள் புதையுண்டு கிடக்கின்றன.

ஒற்றை காம்பிராவில் ஒற்றுமையாக உண்டு மகிழ்ந்து வாழ்ந்தகாலம் அது. இந்தளவுக்கு தொழிநுட்ப வளர்ச்சி அன்றில்லை. கறுப்பு, வெள்ளை திரைப்படத்தைப் போல குப்பி லாம்பின் வெளிச்சத்தில் குதூகலமாய் வாழ்ந்த காலம் அது.

அம்மா அப்பாவோடு ஆசைதீர பேசி வெற்றிலைக்கு பாக்கு வெட்டி கொடுத்து அதிலும் தாத்தாவுக்கு கொஞ்சம் உரலில் இடித்து கொடுத்தால்போதும் அவரின் மொத்த வரலாறையும் கக்கிவிடுவார்.

அது மட்டுமா வீட்டில் எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணும்போது அம்மா பரிமாறுவார். அப்போது தாத்தா எல்லோருக்கும் கொஞ்சம் கைசோறு உருட்டி கொடுப்பார் பாருங்கள் ஐயோ அதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை. இதெல்லாம் அன்றைய சந்தோஷங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் போதும் வீட்டில் விசேடம்தான் அம்மா காலை ஐந்து மணிக்கு எழும்பி வாசல் தெளித்து கோலம் போட்டு கோலத்தின் நடுவே பிள்ளையார் பிடித்து வைத்து அதில் ஒரு பூவை நட்ட வைப்பார். அது மட்டுமா வீட்டை சாணத்தால் மொழுகி அடுப்பங்கரையை கோலத்தால் அலங்கரிப்பார். அது அப்படியே தொடர பத்து மணி கடந்துவிட்டால் நாங்கள் “ஒரு பப்பாளி காயை சீவி அதில் ஒரு ஓட்டையை போட்டு உப்பு, மிளகாய், புளி என இன்னும் சில சமாச்சாரங்கள சேர்த்து அத ஒரு குச்சியால் நன்றாக இடித்து வெட்டி உண்டுவிட்டு குளத்தில் ஒரு குளியல போடுவோம் அதுக்கு கொத்தல் டேனு பேரு”.

அதையடுத்து ஒரு மணிக்கு எல்லோர் வீட்டிலும் உள்ள மரக்கறிகளில் கொஞ்சம் கொஞ்சமா சேத்து அரிசி மூணு சுண்டு போட்டு லயத்துல உள்ள சின்னஞ்சிறுசு எல்லாம் சேர்ந்து ஆக்குற அந்த கூட்டாஞ்சோறு எண்ணிலடங்கா சந்தோஷத்தை தரும்.

ஐயோ மன்னிச்சிருங்க இப்போ உள்ள நிலைமையை பற்றி பேசவந்து எங்கயோ போய்விட்டேன்.

சரி எமது நாட்டில் என்று தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்ததோ, தேவைகள் அதிகரித்ததோ அன்றே எமது இளைஞர்கள் தலைநகரம் நோக்கி படை­யெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அன்று முடக்கப்பட்டது மலையகத்தின் மொத்த சந்தோசமும். இப்போது ஊரில் உள்ள அனைவரையும் ஒருசேர பார்க்க முடிந்தால் ஒன்று தீபாவளி வர வேண்டும், இல்லையேல் திருவிழா வரவேண்டும், இல்லையென்றால் ஊரில் இவர்­களின் நடமாட்டத்தை காண்பது அரிது. ஆனால், சில ஊர்களில் இதுவும் இல்லை.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இருக்கி­றது அவர்களுக்கு ஒரு பெண்­பிள்ளை, ஒரு ஆண்பிள்ளை. அந்த ஆண் கொழும்பில்தான் வேலை. அவர் வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருவார். வரும்போது வீட்டிலுள்ள மூவருக்கும் ஆளுக்கோரு ஆடையும், பட்டர் கேக் ஒன்றையும் கையில் பிடித்துக்கொண்டு வருவார் மூன்று நாட்கள் தங்குவார் வீட்டுக்கு உணவு பொருட்கள் சில வாங்கி கொடுப்பார். பிறகு பாய் சொல்லி தலைநகருக்கு திரும்பிவிடுவார்.

அட இதில் எங்கே வாழ்க்கை இருக்கிறது? இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையா? ஆனால், இந்த கொரோனா இவையனைத்தையும் மாற்றியுள்ளது. இன்று அந்த ஆண் ஊருக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. அம்மா அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து அவர்களோடு வீட்டுத்தோட்டத்தில் உதவி செய்து தங்கையோடு விளையாடி அவ்வளவு இன்பமாக இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை அன்பை உணர்த்த இயற்கை செய்த லீலைதான் கொரோனா? அத்தோடு பக்கத்து வீட்டு காரரோடு பேசாமல் இருந்த காலம் போய் இன்று பக்கத்து வீட்டில் ஒருவர் கஷ்டத்தில் இருந்தால் உணவுப் பொருட்களை வழங்கி அவர்களுக்கு உதவிகரம் நீட்டும் உள்ளத்தை கொடுத்துள்ளது கொரோனா.

இங்கு அனைவரும் அடைக்கோழி­களாக­த்தான் வாழ்கின்றனர். ஆனாலும் எங்கள் ஊரில் இவ்வளவு இளைஞர்கள் இருக்கின்றனரா என்று யோசிக்க வைத்­துள்ளது எங்கள் கணக்கீடு. கொரோனா மலைய­கத்தை இனங்காண வைத்துள்ளது. அத்தோடு மதுவையும் ஒழித்துள்ளது. மது இல்லா காரணத்தால் இன்று பல வீடுகளில் சண்டைகள் இல்லை. அடடா மது இல்லா மலையகம்! இது தொடர்ந்தால் எங்கோ போய்விடும் மலையகம்.

எமக்கு விபரம் தெரிந்து இதுவரை காலமும் ஒரு ஊரடங்கு சட்டத்தின் கீழ் இருந்ததில்லை. தமிழ் சினிமாவில் பார்த்தறிந்த ஊரடங்கு சட்டத்தை இன்று நாமே அனுபவிக்க அதனை வித்தியாசமாக உணர்கிறேன். ஐந்தறிவு கொண்ட அனைத்து ஜீவராசிகளும் சுதந்திரமாக நடமாட நாம் மட்டும் கூண்டுக்கிளிகளாய் இருப்பது சிலிர்க்கத்தக்கது.

ஊரடங்கை சில மணி நேரங்களுக்கு விடுவித்ததும் அடித்து பிடித்துக் கொண்டு கடைக்கு சென்று நகைகளை அடகு வைத்து அந்த பணத்தில் முடியுமானவரை உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்த்து. இன்னும் பலர் காசில்லாமல் யாராவது எதாவது தரமாட்டார்களா? என்று ஏங்க வைக்கும் அளவுக்;கு இருக்கிறது மலையக மக்களின் இன்றைய வாழ்க்கை.

உலகமே வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க மலையக தாய்மார்கள் மட்டும் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கின்றனர். இதை என்னென்று சொல்ல? ஒரு நாட்டில் ஒவ்வொரு உயிரும் மதிக்கதக்கது. அந்த வகையில் மலையக மக்களின் உயிர்கள் இன்று தேயிலைத் தோட்டங்களில் தத்தளிக்கிறது. அடடா கொரோனாவால் இறந்தாலும் பரவாயில்லை, பட்டினியால் இறந்து விடக் கூடாது என்பதற்காக, தனது பிள்ளைகளின் உயிரை காப்பாற் றிக்கொள்ள தன்னை வருத்திக் கொண்டி ருக்கின்றனர்.

அத்தோடு விவசாயம் உயிர் பெற்றுள்ளது. வீட்டிலுள்ள அனைவருமே வீட்டுத்தோட்டங்களில்! கைகாலில் தூசி பட்டால் மாசு பட்டது போல் கருதும் பல இளைஞர்களும் இன்று தோட்டங்களில் வேலை செய்கின்றனர்! என்ன செய்ய பணத்தை உண்ண முடியாதே!

ஒட்டு மொத்தத்தில் மலையகத்துக்கு புத்துயிர் கொடுத்துள்ளது கொரோனா. இன்று மலையக மக்களுக்கு எமது மலையக உறவுகளே உதவிக் கொண்டிருக்கிறன. எப்படியாவது கொரோனாவில் இருந்து உயிர்காத்து எதிர்காலத்தில் இதே மனிதத்தோடு வாழ வேண்டும் என்பதே எம்மவர்களின் ஆசை.

-யுவன் தலவாக்கலை

 

 

You must be logged in to post a comment Login