Love

புரிதல் இல்லாத காதல்!

By  | 

காதல் என்பது……………….. என பலர் பலவிதமாக விளக்கம் சொல்கின்றனர்.

தமிழ் அகராதியில் அன்பு, பாசம், நேசம் என்பதை குறிக்கும் இன்னொரு பெயர்தான் காதல் என்றாகிறது.

உண்மை. காதல் அன்பே உருவானது. ஒன்றின் மீது அன்பும் விருப்பமும் அபிலாசையும் இருக்குமானால், அதன் மீது நமக்கு காதல் இருப்பதாக சொல்வோம்.

நான் இசையை காதலிக்கிறேன் (ஐ லவ் மியூசிக்)

நான் புத்தகங்களை காதலிக்கிறேன் (ஐ லவ் புக்ஸ்)

நான் பறவைகளை காதலிக்கிறேன் (ஐ லவ் பேர்ட்ஸ்)

நான் போர்வாளை காதலிக்கிறேன் (ஐ லவ் ஸ்வோர்ட்)

நான் எனது நண்பர்களை காதலிக்கிறேன் (ஐ லவ் மை ஃப்ரெண்ட்ஸ்)

நான் என் பெற்றோரை காதலிக்கிறேன் (ஐ லவ் மை பேரண்ட்ஸ்)

நான் விமானத்தை காதலிக்கிறேன் (ஐ லவ் ஏரோப்ளேன்)

நான் நகைகளை காதலிக்கிறேன் (ஐ லவ் ஜுவல்ஸ்)

நான் ஒப்பனையை காதலிக்கிறேன் (ஐ லவ் மேக்அப்)

என நாம் விரும்பும், நேசிக்கும் பலதை, பலரை காதலிப்பதாக சொல்வது வழக்கம். அதில் தவறொன்றும் இல்லை. இவற்றின் பார்வையில் காதல், நேசம், விருப்பம், பாசம், அன்பு அனைத்தும் ஒரே கருத்துடையவைதான்.

எனினும், ஓர் ஆணையும் பெண்ணையும் மனதளவில் நெருங்கச் செய்யும், நெருக்கமான உறவாக நினைக்க வைக்கும் உணர்வை, வாழ்க்கையின் துணையாக கருத வைக்கும் பூரிப்பை ஏற்படுத்துவதற்குப் பெயர்தான் ‘காதல்’ என்றே பொதுவாக கருதுகின்றனர்.

காதலன் – காதலி, கணவன் – மனைவிக்கு இடையிலான உணர்வாக மட்டுமே காதல்  பார்க்கப்படுகிறது.

இதை தாண்டி ஒத்த வயதை உடைய ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் சென்று, அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொன்னால், என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்!

இப்படி சிலர் நடைமுறையில் பல தோணிகளில் கால் வைத்து, காதலிப்பதாக கூறி, பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளிலும், அடி உதைகளிலும் சிக்கிக்கொள்வதை கூட பார்க்கிறோம்.

இந்த பந்தங்கள் தவிர்ந்த உறவுகள், மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பும் காதல்தான் என்பது இன்னும் சிலரது புரிதலாக உள்ளது.

எல்லாம் சரி.

இனி, சொல்லப்போவது எவ்விதமான காதல் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

அது ஒரு தனியார் வகுப்பு.

வெளிவாரியாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வார இறுதி வகுப்பு.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் இளைஞர், யுவதிகள் வகுப்புக்கு வந்து போவதுண்டு.

வகுப்புக்கு வருபவர்களில் ஓர் இளைஞனும் யுவதியும் ஏனைய இளைஞர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர்கள்.

எப்படியெனில், 4 வயது வேறுபாடு கொண்ட இவ்விருவரும் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எனினும், ஒரே நேரத்தில் வகுப்புக்கு வருவர்.

ஒரே நேரத்தில் வகுப்பை விட்டு வெளியேறுவர். இருவரும் சேர்ந்தே இடைவெளி நேரங்களில் வெளியே சென்று மீண்டும் வகுப்புக்கு திரும்புவர்.

இருவரும் அருகருகே பின் வரிசையில் தனித்து பாட வேளைகளில் அமர்ந்திருப்பர்.

ஒருவரது குறிப்புப் புத்தகத்தை இன்னொருவர் வைத்திருப்பார். ஒருவரது கொப்பியில் இன்னொருவர் அன்றைக்கான பாடத்தை எழுதுவார்.

யுவதிக்கும் சேர்த்தே அந்த இளைஞன் வகுப்புக்கான மாத கட்டணத்தை செலுத்துவார்.

இவற்றுக்கு மத்தியில் ஏனைய மாணவர்கள் வேறு விதமான கண்ணோட்டத்தில் இவர்களை பார்ப்பது, இந்த இளைஞனுக்கும் யுவதிக்கும் நன்கு தெரிந்த பின்னர், இவர்களது நெருக்கம் இன்னும் அதிகமானது.

ஒரு முறை வகுப்புக்கு வரும் இரு யுவதிகள் இளைஞனோடு பழகும் குறித்த யுவதியிடம் இருவரது பழக்கத்தை பற்றி யதார்த்தமாக கேட்க, அவரோ,

“நாங்க ரெண்டு பேரும் அப்படிப்பட்டவங்க இல்ல…. எனக்கு அவர் அண்ணா மாதிரி… ரெண்டு பேரும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்… அவர்கிட்ட நான் படிப்பு விசயமா நிறைய அறிவுரை கேட்குறதுண்டு….. நான் அவரளவுக்கு இங்க வேற யாரோடையும் பேசுறதில்லை… அதனால உங்களுக்கு அப்படித் தெரியுது…!” என கூறிச் சென்றுள்ளார்.

எனினும், பாட இடைவேளையின் போது இருவரும் தனியே அமர்ந்து ரகசியமாக பேசி, அவ்வப்போது நெருக்கம் காட்டுவது சிறிது காலமாகவே வகுப்பு நிர்வாகிகளின் கவனத்துக்கு செல்ல, ஒரு கட்டத்தில் நிர்வாகிகளும் கூட இருவரையுமே அழைத்து, விசாரித்துள்ளனர்.

படிப்பதற்காக வந்துபோகும் இடத்தில் மற்றவர்களை திசை திருப்பும் விதமாக நடந்துகொள்வது அநாகரிகம் என்பதாக நிர்வாகிகள் எச்சரித்து, அறிவுரை கூறியுள்ளனர்.

அதற்கு அவர்கள்,

“நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்…. சீக்கிரத்திலேயே கல்யாணம் செய்துகொள்வோம்… வீட்லயும் எல்லாரும் கலந்து பேசிட்டாங்க…. எக்ஸாம் முடிய கல்யாணம் செய்துகொள்றதா முடிவெடுத்திருக்கிறோம்….” என இளைஞர் பதிலளித்துள்ளார். அதையும் யுவதியும் ஆமோதிக்க,

“கல்யாணம் செய்துகொள்ற முடிவில இருந்தாலும், படிக்க வர்ற இடத்துல எல்லையோட நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்லது…. இல்ல, இங்க நீங்க தொடர்ந்து படிக்க நாங்க அனுமதிக்க மாட்டோம்….” என முடிவாக நிர்வாகிகள் அறிவுறுத்திச் சென்றனர்.

அதன் பிறகு இருவரையும் ஓரிடத்தில் சேர்ந்து பார்ப்பது குறைந்துவிட்டதாகவே தெரியவந்தது.

பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு பொதுப் பரீட்சை நிறைவு பெறும் வரை அவர்களை பற்றிய கிசு கிசுக்களுக்கு இடமின்றிப் போனது.

பரீட்சை நிறைவு பெற்றதன் பின்னர், இந்த சில வருட இடைவெளியில், தற்போது இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது.

ஆக, இக்காலத்து இளைஞர்கள் காதலை எவ்விதம் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதே விசித்திரமாக உள்ளது.

இன்னும் சிலர், காதலுக்காக எதை எதையோ இழந்து, கடைசியில் உயிரையும் பறிகொடுத்து, பலியெடுத்துவிடுகின்றனர்.

இன்று இலக்கியவாதிகளே கூட கலந்துரையாடும் ஒரு முக்கிய பொருளாக ‘காதல்’ உள்ளது.

‘காதலிப்பது எப்படி’ என தனியாக ஒரு நூலை எழுதி வெளியிட்டு, இளைஞர்களுக்கு கண்ணியமாக காதலிப்பது எப்படி, அந்த காதலில் வெற்றி பெற கையாளவேண்டிய நேர்மையான வழிமுறைகள் என்னென்ன, காதலித்தவர் விட்டு விலகினால் அந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது, காதல் தோல்வியிலிருந்து நாம் எப்படி மீள்வது, காதல் கைகூடவில்லை என்றால் நாம் நம்மை எப்படி பக்குவப்படுத்திக்கொள்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இன்றைக்கு சமூக நலனில் பொறுப்பு மிக்க பலரும் கூறுகின்றனர்.

காதல், பலரது பயங்கர முடிவுகளுக்கான ஆரம்பமாக அன்றி, வெற்றியோ தோல்வியோ கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, அவர்களது புதிய பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்!

-மா. உஷாநந்தினி

You must be logged in to post a comment Login