Articles

பூராணை பெண்கள் மட்டும்தான் அடிக்க வேண்டுமா?

By  | 

தவறு செய்பவர்களை விட்டுவிட்டு, அந்த தவறை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டுபவரை, தட்டிக்கேட்பவரை தண்டிக்கும் நியாயமற்ற சிந்தனை….


கதை 1

முந்தைய காலத்தில் பூமியில் எங்கு பார்த்தாலும் பூராண்கள் திரியும். அவை மக்களை கடித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தின. இதனால் மக்கள் கடவுளிடம் முறையிட்டார்கள். கடவுள் பூராணுக்கு சாபம் கொடுத்தார், ‘நீ ஒவ்வொரு குட்டியாக பெற பெற ஒவ்வொன்றையும் தின்றுவிடுவாய்” என்று. அதற்கு பூராண் மிகுந்த கவலையோடு, ‘அப்படியானால் என் இனமே அழிந்துவிடும். வம்சம் எப்படி விருத்தியாகும்?” என கேட்டது.

‘நீ ஒரு குட்டியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் தின்றுவிடுவாய்… அந்த ஒரு குட்டியின் மூலம் உன் வம்சம் விருத்தியாகும்” என கடவுள் மறுசாபமிட்டார்.

அதனால் ஒரு தாய்ப்பூராணுக்கு ஒரு குட்டி மட்டும்தான் உண்டு என மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை மட்டும்தான் உண்டு என்றால், அந்தப் பிள்ளைக்கு எந்த தீங்கும் செய்யக்கூடாது, அது பாவம்” என கருதியே யாரும் பூராணை அடிப்பதில்லை.

கதை 2

எப்போதோ, ஒரு பெண் தன் கணவன் வெளியே போன பிறகு காதலனை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறாள். சிறிது நேரத்தில் வெளியே சென்ற கணவன் ஏதோ ஒரு தேவைக்காக திடீரென திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டான். காதலனோடு சந்தோஷமாக இருந்த மனைவி, கணவன் வருவதை அறிந்து திகைத்துப்போய்விட்டாள்.

பதற்றத்தில் காதலனை வீட்டின் ஒரு மூலையில் இருந்த பாய்க்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு கணவனோடு சகஜமாக பேசினாள். பிறகு அவனை சாப்பிட அழைத்தாள். உணவு பரிமாறினாள்.

காதலனுக்கும் தனக்கும் இடைஞ்சலாக இருக்கும் கணவனை கொல்வதற்காக அவள் அந்த உணவில் நஞ்சு கலந்திருந்தாள். அது தெரியாமல் அவன் சாப்பிட முற்பட்டபோது, எங்கிருந்தோ வந்த ஒரு பூராண் உணவுத்தட்டின் மீது ஏறி, சோற்றில் இருந்துவிட்டது.

தட்டில் பூராண் இருந்ததால் கணவன் அந்த உணவை சாப்பிடாமல் வாசலில் கொண்டுபோய் கொட்டிவிட்டான். கொட்டிய உணவை ஒரு நாய் வந்து சாப்பிட்டு, சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது.

நாய் ஏன் இறந்தது என சந்தேகப்பட்டு கணவன் மனைவியை விசாரித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட குழப்பத்தில் மனைவியின் கள்ளக்காதலன் மூலையில் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டான்.

மனைவிக்கு வேறொரு தொடர்பு உண்டு, அதனால்தான் என்னை கொல்ல உணவில் நஞ்சு கலந்திருக்கிறாள். அந்த பூராண் மட்டும் சோற்றில் விழாமலிருந்திருந்தால் நான் அதை சாப்பிட்டு இறந்திருப்பேன். என்னை அந்தப் பூராண் காப்பாற்றிவிட்டது. அதனால் இனிமேல் பூராண் இனத்தையே நான் அடிக்கப்போவதில்லை…. என்றானாம்.

அந்த ஒருவனை பூராண் காப்பாற்றியதற்காகத்தான் ஆண் வர்க்கமே பூராணை இனி அடிப்பதில்லை என உறுதி எடுத்துக்கொண்டதாம். மனைவியை காட்டிக்கொடுத்த காரணத்தால்தான் பெண்கள் பூராணை அடித்து நையப் புடைக்கிறார்களாம்.


கதை 1 ……….. ஆணோ பெண்ணோ, யாரும் பூராணை அடிக்கக்கூடாது என்பதை சொல்கிறது. அத்தோடு ஒரு பெண் சமுதாயத்தின் அவலத்தை எடுத்துக்காட்டுகிறது. வறுமையாலும், கொடிய நோயாலும் வேறு காரணங்களாலும் பெற்ற குழந்தையை தாயே கொல்லும் கொடூர சம்பவங்கள் புராண காலத்திலிருந்து இன்று வரை நடந்து வருகின்றன.

நல்ல தங்காள் தன் பிள்ளைகளை கிணற்றில் போட்டு கொன்றுவிட்டு தானும் குதித்து இறந்துபோன கதையை படித்திருக்கிறோம். இன்றைக்கும் சில அம்மாக்கள் குழந்தையை பெற்றுவிட்டு, பின் ஈவிரக்கமின்றி அதை தன் கையாலேயே கொன்று வீசிவிட்டுப் போவதையும் கேள்விப்படுகிறோம்.

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். எண்ணிலடங்காத பூராண்கள் மக்களை கடித்திருக்கும். அவற்றில் ஆண், பெண் என இரு பாலின பூராண்களும் கலந்திருக்கக்கூடும். ஆனால், சாபம் கொடுக்கப்பட்டது, ஒரு பெண் பூராணுக்கு.

ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்கள் மட்டுமே பொறுப்பேற்று, தண்டனை அனுபவிக்கும் வழக்கம் காலகாலமாக இருந்துவருவதை இக்கதை உணர்த்துகிறது.

கதை 2 ……. ஆண்கள் பூராணை அடிக்கக்கூடாது. ஆனால், பெண்கள் அடிக்கலாம் என்பதாக சொல்லப்படும் கதை இது. ஒரு பெண் கணவனுக்கு துரோகம் இழைத்துவிட்டாள். அவள் தவறு செய்திருக்கிறாள். இதில் தேவையில்லாமல் பூராண்களை எதற்கு நம் பெண்கள் தண்டிக்க வேண்டும்?

பூராண்களை அடிப்பதற்கு இந்தக் கதையை காரணம் காட்டும் பெண்கள் சிந்திக்க வேண்டும்…..

பெண்களே, பூராண் வந்தால் அடியுங்கள்… இல்லாவிட்டால், அது உங்களையே கடித்து ரத்தத்தை உறிஞ்சி பதம் பார்த்துவிடும். நம்மை தாக்க வருபவரிடம் எதிர்த்தாக்குதல் நடத்துவதில் தவறில்லை. அடியுங்கள். ஆனால், அடிப்பதற்கு இந்தக் கதையை காரணம் காட்டாதீர்கள்.

கணவனை கொல்ல முயன்ற மனைவியை காட்டிக்கொடுத்ததால்தான் ஒட்டுமொத்த பெண்களும் பூராண்களை தாக்குகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.

ஒருவேளை நீங்கள் அப்படிச் சொன்னால், தவறு செய்பவர்களை விட்டுவிட்டு, அந்த தவறை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டுபவரை, தட்டிக்கேட்பவரை தண்டிக்கும் நியாயமற்ற சிந்தனை உள்ள ஒருவராக கருதப்படுவீர்கள்.

கணவனுக்கு துரோகம் செய்த ஒரு பெண்ணை ஆதரித்து, பூராண்கள் மீது கோபத்தை காட்டுவதாக கூறும் சில பெண்களுக்கு, திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த அந்த காதலன் மீது துளியளவு கோபம் கூட இருப்பதாக தெரியவில்லை.

ஆண்களின் தவறுகளை சில பெண்களே கூட கண்டுகொள்வதில்லை என்பது இதிலிருந்து புரிகிறது.

பழைய மரபுகளை பின்பற்றுவது தவறல்ல. ஆனால், அதில் நியாயமான காரணம் தேவை.

இப்போது பழங்கதைகளில் நம்பிக்கை இல்லை என பலர் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு கதைகளும் உண்மையாக இருக்கலாம் அல்லது யாரோ பரப்பிய கட்டுக்கதைகளாகக்கூட இருக்கலாம். சிலர் இதை நம்பவும் செய்யலாம்!

ஆனால், இன்றைக்கு வழமை அப்படியா!

ஆணோ பெண்ணோ… பூராணை கண்டால் பாவமா பார்க்கிறார்கள்… அடித்து நசுக்கிவிட்டுத்தான் அடுத்த வேலை!

– உருத்திரா

You must be logged in to post a comment Login